Header

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்!

மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்!

நம்மால் "முடியாது" என்று நினைக்கும் ஒரு செயலை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில அந்த செயலை செய்து "வெற்றி" அடைந்துதான் வருகிறார். "நம்மால் முடியாது" என்று எதையும் நினைக்காமல், எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும்.



அதுபோல் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறது "ழான் டொமினிக் பாபி" (Jean Dominique Bauby) என்ற எழுத்தாளனின் சுயசரிதையான  "the diving bell and the butterfly" என்ற புத்தகம். பாபி எந்த மாதிரியான எழுத்தாளன்? அவன் நம்மிடம் எதை பகிர்ந்து கொள்ள விழைகிறான்? அவனின் எழுத்து எங்கிருந்து தொடங்கியது? அவனின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தை யார் வகித்தது என்பதை பார்க்கலாம்.

பாபியும் ஆரம்பத்தில் நம்மை போலத்தான் நல்ல ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். புகழ்பெற்ற ஒரு பத்திரிகையில் வேலை செய்தும் வந்தார். சின்ன வயதிலேயே தாயை இழந்த பாபிக்கு தந்தைதான் தாயாகவும், எல்லாமுமாகவும் இருந்து வந்திருக்கிறார். நாற்பத்திரண்டு வயதில் அவரின் மூளைக்குள் மின்னல் கீற்றைப் போல பாய்ந்த அதிர்வுகள் மூளையை கடுமையாக தாக்கி படுக்கையில் வீழ்த்தி விடுகிறது, நாளடைவில் அவரின் இடது கண்ணை தவிர்த்து மற்ற உறுப்புகள் பக்கவாதத்தால் செயல் இழந்து விடுகிறது.

குழந்தைகளுடனும் நண்பர்களுடனும் ஆடி பாடி திரிந்த அவரால் படுக்கையிலிருந்து எழுந்து நடக்கவே முடிவதில்லை. அவரை சுற்றியும் அன்பானவர்கள் நிறைந்திருந்தாலும், அவர்களை பாபியும் நேசித்தாலும் தன் எண்ணங்களையோ, அன்பையோ வெளிப்படுத்த வழிகளின்றி தவிக்கிறார். அவரின் மனதுக்குள் இருந்து ஒலிக்கும் குரலில் வெளிப்படும் எண்ணங்களை, அன்பை காதுகளால் கேட்கக் கூட முடிவதில்லை. உடல் நலமும் குன்றிப் போவதால், மற்றவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் மனதளவில் எந்த மனிதனும் அடையக்கூடிய வீழ்ச்சியை, இயலாமையை, பரிதாபத்தை நம்முன் திறந்து காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது பாபியின் வாழ்க்கை.



வாழ்க்கையின் கசப்பான் சுவையை பருக அவருக்கு பிடிப்பதில்லை, மரணத்தை விரும்ப ஆரம்பிக்கிறார். இந்த நேரத்தில் அவரின் கண்கள் பேச ஆரம்பிக்கிறது. அவருக்கு பேச பயிற்சி கொடுக்க வரும் ஒரு பெண்ணின் வழியாக, அவரின் இடது கண், மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள ஒரு பாதையை காட்டுகிறது. நாவின் வேலையை கண்ணின் இமை அசைவுகள் செய்ய ஆரம்பிக்கிறது. கண்ணின் இமை அசைவுகளின் வழியாக அவர் எப்படி மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.

அவர் ஒருமுறை கண் இமையை அசைத்தால் அது "ஆம்" என்று அர்த்தம். இரண்டு முறை தொடர்ந்து அசைத்தால் "இல்லை" என்று அர்த்தம். அவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அங்கிருக்கும் பேச பயிறசி கொடுக்கும் பெண் பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை அசைப்பார், இதேமாதிரி அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை. கண்களின் இமை அசைவுகளின் வழியாக பாபி சொல்வார்.



கண்களின் இமை அசைவுகளின் வழியாக தன் உணர்வுகளை, எண்ணங்களை, கருத்துகளை இன்னொரு மனிதனுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக பாபி புதிய தொடர்பாடலை பரிணமிக்கிறார். தான் கடந்துவந்த வாழ்வை புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் துளிர்விடுகிறது. தனக்குள் சதா ஓடிகொண்டிருந்த மரணம் பற்றிய எண்ணமும், கழிவிரக்கமும் கலையால் காணாமல் போய்விடுகிறது. பாபி இப்போது எழுத வேண்டும்? எதை எழுத போகிறார்? எப்படி எழுத போகிறார்? என்பதை பார்க்கலாம்

பாபியின் கண் இமை அசைவுகளின் மொழியை எழுத்தாக மாற்ற புதிதாக ஒரு பெண் வருகிறாள் அவளின் வேலை ஆரம்பத்தில் பேச பயிற்சி கொடுத்த பெண்ணின் அதே வேலை தான். பிரஞ்ச் மொழியில் இருக்கும் எழுத்துக்களை ஆரம்பத்தில் இருந்து நிறுத்தி ஒவ்வொன்றாக சொல்லுவாள். பாபி தான் சொல்ல வந்த வார்த்தைக்கு ஏற்ற எழுத்து வந்தவுடன் ஒரு முறை கண் இமையை சிமிட்டி ஆமாம் என்று சொல்லி, இதைப் போல அடுத்த பிற எழுத்துக்களை சேர்த்து தான் சொல்ல வந்த வார்த்தையை சொல்வார் அதை அவள் எழுத வேண்டும். இப்படி ஒவ்வொரு வார்த்தையாக எழுதி உருவானது தான் the diving bell and the butterfly என்ற புத்தகம்.



இந்தப் புத்தகத்தை ரொனால்ட் கார்வுட் அருமையான திரைக்கதையாக உருவாக்க, பாபி தன்னுடைய இடது கண்ணால் இந்த உலகத்தை எப்படி பார்த்தாரோ அதே கோணத்தில் காமிராவின் கண்கள் காட்சிகளை பதிவு செய்ய பாபியின் சுயசரிதை திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜூலியன் சினபால்.

 பாபி இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பதற்காவே பிறந்திருக்கவேண்டும். அந்த எழுத்தின் மீதான நேசம் தான் அவரை உயிருடன் வைத்திருந்தது புத்தகம் வெளியான பிறகு அடுத்த இரண்டு தினங்களில் பாபி இறந்து விட்டார்.

பாபி இந்தப் புத்தகத்தை எழுத சுமார் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு வார்த்தையை உருவாக்க இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் என்று பத்து மாதங்கள் இந்தப் புத்தகத்துக்காக பாபியும் அவரின் உதவியாளரும் உழைத்திருக்கின்றனர். எல்லா இதயங்களிலும் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் புத்தகம் வெளியான முதல் நாளே 25,000 புத்தகங்களும், முதல் வாரத்தில் 1,50,000 புத்தகங்களும் விற்பனையானது.

உடல் வேதனையால் துவண்டு போன நெஞ்சங்களில் நம்பிக்கையை பாய்ச்சுகிற ஒரு வாழ்க்கையை நம்மிடம் விட்டு சென்று இருக்கிறார் "ழான் டொமினிக் பாபி". இவர் நம் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மனதுக்குள் விதைக்கிறார்.