Header

Showing posts with label ஜெகதீஷ் சார்தா. Show all posts
Showing posts with label ஜெகதீஷ் சார்தா. Show all posts

எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்

எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்




''ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சல்மீர்தான் என் சொந்த ஊர். வேலை தேடி சென்னைக்கு வந்த எனது அண்ணன் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக குடும்பக் கஷ்டம் காரணமாக நானும் சென்னைக்கே வந்துவிட்டேன். கல்லூரிப் படிப்பு வரை இங்கேதான் படித்தேன்.


படிப்பு முடிந்ததும் நானும் ஒரு துணிக் கடையில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அப்படி சேல்ஸ்மேனாக வேலை பார்த்து சம்பாதித்தத் தொகையை சிறுகச் சிறுக சேர்த்து நண்பர்கள் உதவியுடன், சென்னை எக்மோரில் சின்ன அளவில் ஒரு ரெடிமேட் கடை திறந்தேன். இந்த கடைதான் என் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளுக்கும் முதல்படி.
கடையில் எல்லா வேலைகளையும் நான் ஒரே ஆள்தான் செய்வேன். கடை பூட்டிய பிறகு யாராவது வந்து நின்றாலும் திரும்ப திறந்து அந்த வியாபாரத்தை முடித்துவிட்டுதான் கடையைப் பூட்டுவேன். விரைவில் அடுத்தக் கட்டமாக மொத்த வியாபாரம் செய்யத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களை சரியாக கவனிப்பது எப்படி என சேல்ஸ்மேன் டிரெயினிங் கோர்ஸ் படித்தேன். அடுத்த கட்டமாக எனது தொழில் அனுபவம் கொடுத்த தைரியத்தில் ரெடிமேட் சட்டைகள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ரெடிமேட் துணி வியாபாரம் பெரிய அளவில் வளராத காலகட்டம் அது. ஆனாலும், தைரியமாக இறங்கி தரமான முறையில் ஆடைகளை தயார் செய்துதரத் தொடங்கினேன். எந்த ஏரியாவில் என்ன சட்டையை விரும்புவார்கள், எந்த வயது பிரிவினர் எந்த மாடலை விரும்புவார்கள் என பல ஊர்களுக்கும் மார்க்கெட் சர்வே நடத்த அலைந்திருக்கிறேன். எல்லாத் துணிகளையும் விற்பனை செய்தாலும் ஆண்களுக்கான சட்டைகள் மட்டும் வேகவேகமாக விற்பனையானதால், தொடர்ந்து அதில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினேன். எங்களுக்கான பிராண்ட் மதிப்பு உருவாகத் தொடங்கியது.
நமது துணிகளை இந்தியா முழுவதும் மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததால் மும்பையில் ஒரு கடையைத் திறந்தேன். அங்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்ததாக டெல்லி, கொல்கத்தா என ஷோரூம்களைத் தொடங்கினோம். இன்று வெளிநாடுகளிலும் எங்களது ஆடைகளை விரும்பி வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தையல்காரரிடம் தைத்த திருப்தி, ஃபினிஷிங், குறைந்த விலை என இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப உடைகளைக் கொடுத்தது எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.''