Header

டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி

டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி...!

டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி...-  விஜய் சேகர் ஷர்மா - பேடிஎம் Paytm

ஸ்மாரட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பேடிஎம் ஆப் தெரியும், அதை பலரும் டவுண்லோடு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆப் வழியாக ஒரு ஆண்டுக்கு 750 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்த நிறுவனம் ஒரு கிரிக்கெட் போட்டிக்கே ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் அலிபாபா டாட் காம், ரத்தன் டாடா என பல்வேறு முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படிப் பல முதலீட்டாளர்கள் விரும்பி முதலீடு செய்யும் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா சில ஆண்டுகளுக்கு முன் கையில் வைத்திருந்த 10 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்குமா என டெல்லி சாலைகளில் அலைந்திருக்கிறார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைப் பார்ப்போம்.

சொந்த முயற்சி

விஜய் சேகர் ஷர்மா தனது 15 வயதில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். புத்திசாலியாக இருந்தவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது. வகுப்பில் முன்வரிசையில் அமர்ந்தால் பேராசிரியர் கேட்கும் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதாலே, கடைசி வரிசையில் அமரத் துவங்கினார். அதன் பிறகு தனது சொந்த முயற்சியில் தினமும் ஆங்கிலப் பத்திரிக்கைகளை தொடர்ந்து படித்து, அதன் மூலமாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே, ஏஞ்சல் இன்வெஸ்டார் மூலமாக ரூ.20 ஆயிரம் ரூபாய் முதலீட்டைப் பெற்று, நண்பர்களுடன் இணைந்து Xs! கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். 1998ல் கல்லூரிப் படிப்பை முடித்தார். முழுநேரமும் பிசினஸில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக நிறுவனத்தின் மூன்று மாத (1999ம் ஆண்டு பிப்ரவரி - மே மாதம்) டேர்னோவர் ரூ.50 லட்சமாக உயர்ந்தது. அதே ஆண்டில் அந்த நிறுவனத்தை இந்தியா டுடே குரூப்பிடம் 5 லட்சம் டாலருக்கு விற்று விட்டார்.

தினமும் 2 டீ

கம்பெனியில் கிடைத்த லாபத்தில் அவருடைய குடும்பத்தின் கடன் பிரச்னைகளை தீர்த்தார். அந்த லாபத்தில்தான் கலர்டிவியே வாங்கினார் விஜய். அதன் பிறகு நண்பனின் நிறுவனத்தில் சேர்ந்தவருக்கு அடுத்த அடியாக இருந்தது 9/11 பிரச்னை.

அந்த சமயத்தில் நிறுவனம் மிகவும் நொடிந்து போய்விட்டது. அதாவது தினமும் சாப்பாட்டுக்குப் பதிலாக இரண்டு டீ குடித்து விட்டு வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு விஜய்யின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. இந்த நேரத்தில் வீட்டில் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய போது இவரைத் திருமணம் செய்து கொள்ள யாருமே முன்வரவில்லை.

விஜய்யின் இலக்கு

அந்தச் சமயத்தில்தான் ஸ்மார்ட் போன்கள் பிரபலம் அடைய ஆரம்பித்தது. இதில் ஏதாவது செய்தால் கட்டாயம் வெற்றி என்ற சிந்தனை வரவே, விஜய் பேடிஎம் மொபைல் வாலட் நிறுவனத்தை டிசம்பர் 2010 ஆண்டு துவங்கினார். தற்போது பேடிஎம் ஆபை 50மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் ஒரு மாதத்துக்கு 60 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டு இறுதியில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை உருவாக்குவதே விஜய்யின் இலக்காக உள்ளது.