Header

பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகள்

பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகள்

புத்தகத்தின் பெயர் :  How to Be a Power Connector


ஆசிரியர்: ஜூடி ராபினெட்

பதிப்பாளர்: MCGRAW-HILL

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘ஹௌ டு பி எ பவர் கனெக்ட்டர்’ எனும் பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகளைச் சொல்லும் புத்தகத்தை.

நீங்கள் இருக்கும் பிசினஸில் டாப் கிளாஸில் இருப்பவரை தொடர்புகொள்ள உங்களுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும், உங்கள் தொழிலுக்கு பணம் வேண்டும் என்றால் யாரை தொடர்புகொள்ள வேண்டும், உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்ட பணம் வைத்திருக்கும் ஒருவரை எப்படி சென்றடைவது என்பதாவது  தெரியுமா என்ற அதிரடியான கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர் ஜூடி ராபினெட்.

எப்படி எலெக்ட்ரிக் கேபிள்கள் வீட்டில் சுவற்றுக்குள் பதிந்து வைத்து ஒரு இடத்தில் சுவிட்சைப் போட்டால் மற்றொரு இடத்தில் லைட் எரிகிறதோ அதேபோல கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதுதான் இந்த பிசினஸ் நெட்வொர்க்கும். நீங்கள் இந்த நெட்வொர்க்கில் இருந்தீர்கள் என்றால் பணம், மீட்டிங் இன்விடேஷன், தகவல், பிசினஸ் டீல்கள் போன்றவை உங்களைத் தேடிவரும். இல்லையென்றால் அப்படி ஒரு நெட்வொர்க் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.

என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் பெரிய தொழில் செய்தாலுமே பிசினஸ் நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்வதற்கான நிலையான வழிமுறைகள் ஏதும் இதுவரை இல்லாமலேயே இருக்கிறது. அவரவர்கள் அவரவர் திறமைக்கும் எண்ணத்துக்கும்  ஏற்ப இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.

நிஜத்தில் பிசினஸில் இருப்பவர் களுக்கு இதுபோன்ற நெட்வொர்க்கை கண்டறியவும், உருவாக்கவும், நெட்வொர்க்கை மேனேஜ் செய்யவும் வழிவகைகள் சொல்லப்படவேண்டும். அதைச் சொல்லும் எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்கிறார் ஆசிரியர்.
ஏறக்குறைய 25 வருடமாக நெட்வொர்க்கிங் பற்றிய விஷயங்களை கூர்ந்து கவனித்துவரும் ஆசிரியர் ஒரு பவர் கனெக்ட்டர் என்று அழைக்கப் படுகிறார். ஆசிரியர் முதலில் குறிப்பிடுவது நெட்வொர்க் செய்ய நினைக்கும்போது பெரும்பாலானோர் செய்யும் ஐந்து தவறுகளை. முதலாவதாக, தவறான இடத்தில் நெட்வொர்க் செய்வது. நெட்வொர்க்கிங் என்பது நீங்கள் சரியான இடங்களில் உள்ள சரியான மனிதர்களிடம் இணைத்துக் கொள்வதுதானேயொழிய வேறொன்றுமில்லை என்கின்றார்.

இரண்டாவது, தங்களுடைய இலக்குக்கும் தாங்கள் இருக்கும் நெட்வொர்க்குக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது.  அதாவது, நெட்வொர்க் நம்மை சப்போர்ட் பண்ணுவதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளாமல் நெட்வொர்க்கை நாம் சப்போர்ட் பண்ணும்படியாக இருக்கும்படி சிக்கிக்கொள்வது.

மூன்றாவதாக, நல்ல நெட்வொர்க்கில் இருந்த போதிலும் அதை எப்படி இணைத்து அதன்மூலம் முழுப்பலனை அடைவது என்பதை தெரிந்துவைத்துக் கொள்ளாமல் இருப்பது.

நெட்வொர்க்கில் இருக்கும் அனைவருமே உதவுகிற வகையில் பவர் உள்ளவராகவே இருப்பார்கள். ஆனால், நம்மால் அவர்களை தெளிவாக பயன்களை கேட்டுப் பெறமுடியாத நிலையில் இருப்போம் என்கிறார் ஆசிரியர்.



நான்காவதாக, நெட்வொர்க்கை எப்படி செம்மைப்படுத்திக்கொள்வது என்பது தெரியாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். நெட்வொர்க் செய்கிறேன் பேர்வழி என்று மிகப் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொண்டுவிடுவோம். ஆனால், தேவை என்று ஏற்படும்போது யாரிடம் கேட்பது என்பதை முடிவு செய்ய முடியாமலும் தொடர்புகொள்ள தயங்கி நிற்கும் நிலைமையும் ஏற்படும்  என்கிறார் ஆசிரியர்.

ஐந்தாவதாக, ஆசிரியர் சொல்வது ஹைவேல்யூ மற்றும் லாங்-டேர்ம் நெட்வொர்க்கை ஏற்படுத்திக்கொள்ளாமல் தற்காலிகமாக செயல்படும் பல்வேறு நெட்வொர்க்குகளை கொண்டிருப்பது என்பதை. சரியான திட்டமிடுதலின் மூலமே நெட்வொர்க்கை செம்மைப்படுத்தி, அதிக பலன் தரும் வகையிலும் நீண்டகால அடிப்படையில் உதவும் வகையிலும் நம்முடைய நெட்வொர்க்கை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.

பிசினஸில் கிடைத்த ஃப்ரண்ட்ஷிப், ஃப்ரண்ட்ஷிப்பால் கிடைத்த பிசினஸைவிட சிறந்தது என்கிறார் ஆசிரியர். இதெல்லாம் சும்மா புத்தக அறிவுரை,  நானெல்லாம் நல்ல நெட்வொர்க்கில் இருக்கிறேன் என்கிறீர்களா? ஒரு நிமிடம் இந்தக் கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பின்வரும் கேள்விகளைக் கேட்கிறார்.  தற்போது இருக்கும் நெட்வொர்க்கில் இருப்பவர் களில் எத்தனை பேரை ஸ்ட்ராட்டஜிக் நெட்வொர்க் என்பீர்கள்? அதாவது,  இவர்களில் எத்தனை பேருக்கு உதவுவதாலும், உதவியைப் பெறுவதாலும் உங்கள் இருவரின் மதிப்பு உயரும் என்று உங்களால் அடித்துக் கூறமுடியும்?

உங்கள் நெட்வொர்க்கில் இருப்பவர்கள் எத்தனை பேருடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்; எத்தனை பேருக்கு நீங்கள் மதிப்பைக் கூட்டும் அளவுக்கான விஷயங்களைச் செய்கிறீர்கள்? உங்கள் நெட்வொர்க்கில் இருப்பவர்களுடைய நெட்வொர்க்கை பற்றி எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும்.  அவர்களுடைய பழக்கங்கள் எந்த அளவுக்கு காரியம் சாதிக்கும் என்பது உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

ஒரு முக்கிய புள்ளியையோ, அரசியல்வாதியையோ சந்திக்க வேண்டியிருக்கும் சூழலில் எவ்வளவு சீக்கிரமாக உங்கள் நெட்வொர்க் அந்தச் சந்திப்பை ஏற்படுத்தவல்லதாக இருக்கும். 24 மணி நேரத்துக்குள்  அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தந்துவிடுமா? தற்போது இருக்கும் நெட்வொர்க்கில் இவர்களுடைய தொடர்பை இன்னும் வளர்த்துக் கொண்டால் நான் பயன் பெறுவேன் என்ற லிஸ்ட்டில் உங்களிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்கள் நெட்வொர்க்கை ஸ்ட்ராட்டஜிக் காக பயன்படுத்த உங்களிடம் பிளான் ஏதும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அது எப்படி வேலை செய்கிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் இருந்தால் மட்டுமே உங்களுடைய தற்போதைய நெட்வொர்க் சரியானது என்று சொல்லலாம் என்று சொல்கிறார் ஆசிரியர். பணம், பழக்கம், பவர், இன்ஃப்ளூயன்ஸ் என்ற அனைத்துக்குமே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இவையனைத்துக்கும் உதவும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீங்கள் உதவிகளைச் செய்துவந்தீர்கள் என்றால் அவர்களும் உங்களுக்கு உதவவே செய்வார்கள் என்கிறார் ஆசிரியர்.

ஏனென்றால், உங்கள் நெட்வொர்க்கின் மதிப்பு அவர்கள் நெட்வொர்க்கின் மதிப்பினால் மிகவேகமாக அதிகரிக்கின்றது என்கிறார். வெற்றிகரமான நெட்வொர்க் உறவை வைத்துக்கொள்ள உண்மையாகவும், நம்பிக்கை யாகவும், மரியாதையுடனும், அரவணைப்புடனும், சொல்வதை பொறுமையுடன் கேட்கும் குணத்துடனும், ஈடுபாட்டுடனும், புத்திசாலித் தனத்துடனும், பழகுவதற்கு சுலபமான குணத்துடனும், சுலபத்தில் மற்றவர்களுடன் இணைந்து கொள்ளும் பழக்கத்துடனும் ஒருவர் இருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். நான் எங்கே நெட்வொர்க் செய்துகொள்வது என்றெல்லாம் கவலைப் படாதீர்கள். அடுத்தவர்கள் நலனில் கொஞ்சம் அதீத கவனம் கொண்டவராக நீங்கள் இருக்கவேண்டும் என்கிறார்.

எப்படி புதியவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். இன்றைக்கு உங்களுக்கு நன்கு பழக்கமான வர்கள் எல்லாருமே முதலில் புதியவர்கள்தானே என்பதை நினைவில்கொண்டு செயலாற்றுங்கள் என்கிறார் ஆசிரியர்.

 என்னிடம் என்ன  இருக்கிறது, அடுத்தவர்கள் என்னிடம் எதிர்பார்க்க என்கிறீர்களா? என்று கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். உங்களிடம் நிச்சயமாய் அடுத்தவர்களுக்குத் தர ஏதாவது ஒன்று இருக்கும் என்று அடித்துச்சொல்கிறார் ஆசிரியர்.

நான் என்ன தந்தாலும், யாருக்கு என்னைப் பிடிக்கப் போகுது; அவர்களெல்லாம் பெரிய ஆட்கள் என்று சொல்லும் ரகமா நீங்கள்? முதலில், உங்களுக்கு அவர்களைப் பிடிக்க வேண்டும். அப்புறமாக அவர்களுக்கு உங்களை நிச்சயமாய் பிடித்துப்போகும்.

கல்லூரிப் படிப்பை முடித்து கேரியரை ஆரம்பிக்கும் மாணவராக இருந்தாலும் சரி, சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும் அனுபவஸ்தராக இருந்தாலும் சரி, நெட்வொர்க்கிங் மூலம் தங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதையும், அந்த நெட்வொர்க்கை எப்படி பெறுவது எப்படி என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ள புத்தகம் இது.

முன்னேற்றம் விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.