Header

வீட்டுக் கடன் வட்டி மூன்று வகை!

வீட்டுக் கடன் வட்டி மூன்று வகை!

வீட்டுக் கடனைப் பொறுத்தவரைக்கும், நிலையானது , மாறுபடும் , கலவை  அப்படின்னு மொத்தம் மூணு வகையான வட்டி வகைகள் இருக்கு. கடன் வாங்கும்-போது நிர்ணயிக்கப்படுற வட்டி, குறிப்பிட்ட வருஷத்துக்கு (3 அல்லது 5 வருஷம்) மாறாம இருக்குறதுதான் நிலையான வட்டி விகிதம். அதுக்குப் பிறகு கடன் சந்தையோட வட்டிக்கு ஏத்தமாதிரி உங்க கடனோட வட்டியும் மாறிடும்.

மாறுபடும் வட்டின்னா, கடன் சந்தையோட வட்டி விகித ஏற்றஇறக்கத்துக்கு ஏத்த மாதிரி மாறும். முழு காலத்துக்கும் ஒரே அளவுக்கு தவணை இருக்காது. சில நூறு ரூபாய்கள் கூடலாம், குறையலாம். இதைச் சமாளிக்க முடியும்ங்குறவங்க இந்த பக்கம் போகலாம்.

கடன்ல ஒரு பகுதி நிலையான வட்டி விகிதத்துலயும், மீதி மாறுபடும் வட்டி விகிதத்துலயும் இருக்குறதுதான் கலவை. எந்த வட்டி விகிதத்துல எவ்வளவு சதவிகிதம் இருக்கணும்ங்குறதை தேர்ந்தெடுக்கிற ஆப்ஷனும் இருக்கு. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் துணிஞ்சவங்களுக்கு இது சரியா இருக்கும்.

வழக்கமா, நிலையான வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதத்தை விட 1-2% அதிகமா இருக்கும். அதனால மாறுபடும் வட்டி விகிதம்தான் லாபகரமானதா இருக்கும். வட்டி விகிதம் உயரும்போது, குறிப்பிட்ட வருஷத்துக்கு ஒரு தடவை நிலையான வட்டியும் அதிகரிச்சுடும். அப்போ உள்ள நிலைமைக்குத் தகுந்த மாதிரி வட்டியும் அதிகமா வசூலிப்பாங்க. இந்த ரிஸ்க் எல்லாம் தேவையான்னு நினைக்கிறவங்க, கண்ணை மூடிக்கிட்டு, கலவை வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். நடைமுறையில வீட்டுக் கடன் வாங்கியிருக்குறதுல சுமார் 85% பேர், மாறுபடும் வட்டி விகிதத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாங்க.

ஒருவேளை நீங்க நிலையான வட்டி விகிதத்தை செலக்ட் பண்ணியிருக்கீங்கன்னு வைங்க. அதுக்குப் பிறகு வட்டி விகிதம் குறைஞ்சு மாறுபடும் வட்டி விகிதமும் கம்மியானா, நீங்க நிலையான வட்டியிலேர்ந்து மாறுபடும் வட்டிக்கு மாறிக்கிறது லாபமானது. வட்டி விகிதம் எதிர்காலத்துல ரொம்ப அதிகரிக்கப் போற மாதிரியான சூழ்நிலை இருந்தா, அப்போ மாறுபடும் வட்டியிலேர்ந்து நிலையான வட்டிக்கு மாறிக்கிறது ஆதாயம். இந்த மாற்றத்துக்கு, பாக்கி இருக்குற கடன் தொகையில 1-2% அளவுக்கு கட்டணமா செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் ரெண்டொரு தடவை இலவசமா மாற்றிக்கிறதுக்கு அனுமதிக்குது. நீங்க கடன் வாங்குற பேங்க்குல எப்படின்னு தெளிவா விசாரிச்சுக்கோங்க.

பொதுவா நாட்டுல பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதை வைச்சு நீங்க வட்டி விகிதத்தை தேர்வு செய்யலாம். பண வீக்க விகிதம் அதிகமா இருந்தா, நிலையான வட்டியையும், குறைவா இருந்தா, மாறுபடும் வட்டி விகிதத்தையும் தேர்ந்தெடுக்கிறது நல்லது.