Header

எங்கே தோற்றுவிடுவோமோ?', 'நம்மைக் கேலி செய்வார்களோ?' என தயங்குபவரா நீங்கள்?

'எங்கே தோற்றுவிடுவோமோ?', 'நம்மைக் கேலி செய்வார்களோ?' என தயங்குபவரா நீங்கள்?



"தீதும் நன்றும் பிறர் தர வாரா!" என்பதன் பொருள், நாம் செய்யும் செயல்களின் பலனைத்தான் நாம் அனுபவிக்கிறோம். வேறு யாருடைய செயலும் நம்மைத் தாக்குவது கிடையாது. எந்த ஒரு செயலுமே, எடுத்தவுடன் நமக்குப் பலனைத் தராது. பெரும் புகழாக இருந்தாலும் சரி, நம்மைச் சாய்க்க வல்ல பழியாக இருந்தாலும் சரி, காலம் கடந்தே அது நமக்கு கிடைக்கும். இப்படி பெயரையும் புகழையும் அடைய பொறுமை மிகவும் அவசியமாக இருக்கிறது. வெற்றியின் உச்சத்தை அடைந்த இவர்களும் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தவர்களே

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein):

ஒலி, ஒளி, வெளி(space), விசை, நேரம் ஆகியவை பற்றிய பல கருத்துக்களை சுக்குனூறாக உடைத்து, இயற்பியலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது ஐன்ஸ்டீன்தான். ஆனால், இயற்பியலில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்த இவர் கொடுத்த விலை தன் குடும்பமும் உடல்நலனும்தான். மாறாக, முதலில் பைத்தியக்காரன் என அழைக்கப்பட்டார் ஐன்ஸ்டீன். இவர் கூறுவதை யாரும் கண்டுகொள்ள மாட்டாகள். ஐன்ஸ்டீன் என்றால் ஜீனியஸ் என நாம் இன்று கூறுகிறோம்.

ஆனால், அவர் படிக்கும் காலத்தில் யாரும் அப்படிக் கூறவில்லை. யாரும் அவரை ஊக்கப்படுத்தவும் இல்லை. 4 வயது வரை இவருக்குப் பேச்சு வரவில்லை; 7 வயது வரை இவருக்கு வாசிக்கத் தெரியாது. ஆனாலும், இவர் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றைக் கற்றார். தன்னைச் சுற்றி நடப்பவையை கவனித்துக் கொண்டே இருந்தார். பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலும், மேலும் சிரமப்பட்டு தன் கல்லூரிப் படிப்பை முடித்தார். பேராசியர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாததால், இவருக்கு ஆசிரியர் வேலையும் கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த வேலைக்குச் சென்றார்.



"சோம்பேரித்தனமான நாய்!" எனப் பேராசிரியர் ஒருவர் திட்டுகையில், அவருக்குத் தெரியவில்லை, தான் நடத்திக் கொண்டு இருக்கும் இயற்பியல் பாடத்திலேயே இவன் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறான் என்று. ஆம், இவரது Theory of relativity (E=mc^2) இயற்பியலின் பார்வையையே மாற்றியது. மேலும், அணுகுண்டு, போட்டான்ஸ் என உலகை உலுக்கிய பல பொருட்களின் மூளை இவருடையதுதான். இவரைப் பலர் மூடன் என்றும் பைத்தியக்காரன் என்றும் கூறியபோதும், நிதானமாக தன் வேலையை மட்டும் செய்து வந்தார். இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.

காரணம், அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. இத்தனை தடைகளையும் தாண்டி தன் முழு சிந்தனையையும் ஏதாவது கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். நம்மை யார் எவ்வாறு பேசினாலும், எவ்வாறு நடத்தினாலும்; நம் குறிக்கோளை அடைய முயற்சிப்பதும், நம் மனதிற்குச் சரியெனப் படுவதைச் செய்வதும், பலனுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமாயினும் காத்திருப்பதும் நம்மை வெற்றியின் வாசலிற்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதைக் கூறாமல் வாழ்ந்து காட்டியவர் இவர்.

ஜே.கே.ரௌலிங்க் (J.K.Rowling):

ரௌலிங்க் அடிக்கடி கூறுவது, "நாம் யாரும் தோல்வியைப் பற்றிப் பேசுவது இல்லை!", என்பதுதான். ஆம், உண்மையிலேயே விடாமுயற்சி பற்றி பேசும் நமக்கு தோல்வியை எதிர்கொள்ளவோ, மீண்டும் நிதானமாக முயற்சிக்கவோ நேரமில்லை. தற்போது Harry Potter and the Cursed Child நாவலை வெளியிட உள்ளார். ஆனால், இவரது முதல் புத்தகத்தை வெளியிட ஏறத்தாழ 12 வெளியீட்டாளர்களின் திறக்காத கதவுகளைத் தட்டி இருக்கிறார்.



இதனால், மனமுடைந்து போகாமல், J.K.Rowling மேலும் முயற்சித்ததால், இந்நாவல் உலகிலேயே அதிகம் விற்பனையான நாவலானது. பிறகு இது பிரமாண்டமான படமாக எடுக்கப் பட்டது. ரௌலிங்க் தன் வாழ்வில் பல துயரங்களைச் சந்தித்த போதிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் எப்படி அதிலிருந்து வெளி வருவது என்று மட்டுமே சிந்தித்தார். அவரின் வெற்றிக்கும் இதுவே காரணம்.

கெப்ளர் (Johannes Kepler):

"வானத்திற்கு மேலே சொர்க்கம் உள்ளது. அங்கே உள்ள தேவர்களும், தேவதைகளும்தான் நம்மை இயக்குகிறார்கள். பூமி சுற்றுவது அவர்களால்தான்". இப்படி நம்பிக் கொண்டிருந்த காலத்தில்தான் தோன்றினார், கெப்ளர். அறிவியலும், மத நம்பிக்கையும் பின்னி பிணைந்திருந்த காலம் அது. அப்போதுதான், இவர் 'கோள் இயக்க விதி' (Laws of planetary motion) என்னும் விதியைக் கண்டுபிடித்தார். பூமியைப் போலத்தான் பிற கோள்களும் இயங்குகின்றன எனப் பிறருக்குப் புரிய வைப்பதற்கு இவருக்கு ஒரு நூற்றாண்டில் பாதி காலம் தேவைப்பட்டது!



இவரே கூறியிருக்கிறார், "புத்தகம் எழுதப்பட்டு விட்டது. இதை இப்போதோ சில நூற்றாண்டுகளுக்குப் பிறகோ யாரேனும் வாசிக்க கூடும். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. கடவுள் என்னைப் போன்ற பார்வையாளருக்காக ஏறத்தாழ 6,000 ஆண்டுகள் காத்திருந்ததைப் போல வாசகரும் காத்திருக்க நேரிடும்!". அவருக்கே தெரியும், தன்னுடைய முயற்சியின் பலனை பெற எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம் என... ஆனால், அவர் கடமையைத் தவறாமல் செய்தார். அவரின் காத்திருப்பின் முடிவே இன்று உலகில் அனைத்து புத்தகத்திலும் கெப்ளரைப் பற்றிய பாடம் அமைந்துள்ளது.

'எங்கே தோற்றுவிடுவோமோ?', 'நம்மைக் கேலி செய்வார்களோ?', எனப் பல தயக்கங்களால் புதிய முயற்சிகளைக் கைவிடக் கூடாது. அலெக்ஸாண்டர், "தயக்கம் தோல்வியின் அடையாளம்" என்று கூறியது தயங்கி நிற்கும் நமக்காகத்தான். மாவீரர் நெப்போலியன், "எனது அகராதியில் தோல்வி என்ற சொல்லே கிடையாது!", எனக் கூறியதற்கு காரணம் அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

வெற்றி மகுடம் சூடிக்கொண்ட ஒவ்வொருவரின் பின்னாலும் 1000 தோல்விகள் கதை கூறும். 1000 தோல்விகளைப் பொறுமையாக சந்தித்தால்தான் எப்படி வெற்றியடைய முடியும் என சிந்திக்க முடியும். தோல்வி, நமக்குச் சிந்தித்து செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தோல்வி எனும் மிகப் பெரிய ஆழியில் முங்கினால்தான் வெற்றி என்னும் முத்தை எடுக்க முடியும் என்பதை உணர்ந்து நீங்களும் ஒரு வெற்றியாளராக உருவாக வாழ்த்துக்கள்.