Header

ஈஸி பிஸினஸ், எளிதில் லாபம் !

ஈஸி பிஸினஸ், எளிதில் லாபம் !


கையில் சில லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது; ஏதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று ஆசை. ஆனால், எந்த பிஸினஸை செய்வது என்று முடிவெடுப்பதில் குழப்பம். தவிர, ஆட்களை நிர்வாகம் செய்யத் தெரியுமே ஒழிய, எந்த தொழிலும் முழுவதுமாகத் தெரியாது... என்று சொல்பவரா நீங்கள்?

நோ ப்ராப்ளம், கைவசமிருக்கும் பணத்தை வைத்து நீங்கள் எளிதில் பிஸினஸ் தொடங்கலாம். கணிசமாக லாபமும் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்யவேண்டிய தொழில், அதற்குத் தேவைப்படும் இயந்திரங்கள், தொழில்நுட்பம், ஆட்கள், மார்க்கெட்டிங் என அத்தனை விஷயங்களும் உங்களுக்குத் தந்துவிடுவார்கள். உங்கள் வேலை, கல்லாவில் உட்கார்ந்தபடி ஆட்களை நிர்வாகம் செய்து, அசத்தவேண்டியதுதான். இதைத்தான் ஃப்ரான்சைஸ் பிஸினஸ் என்கிறோம்.

ஒரு பெரிய நிறுவனம் நேரடியாக முதலீடு செய்ய முடியாத இடங்களில் அவர்களது சார்பாக அந்தத் தொழிலை நாம் ஏற்று நடத்துவதுதான் ஃப்ரான்சைஸ் பிஸினஸ். வேறு மாதிரியாகச் சொல்லவேண்டும் எனில், அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனமே செய்து அதை சொந்தத் தொழில்போல நிர்வகித்து அதிலிருந்து கிடைக்கும் லாபத்தில் பங்குப் போட்டுக்கொள்வது. பெரிய அளவில் தொழில் செய்த அனுபவம் இல்லாதவர்கள், ஏற்கெனவே நல்ல பெயரோடு அல்லது வியாபார வாய்ப்புகளோடு இருக்கும் நிறுவனங்களுடன் கைகோத்து, அவர்களின் கிளையை உங்களூரில் அல்லது பகுதியில் ஆரம்பிப்பதுதான் ஃப்ரான்சைஸ் பிஸினஸ்.

ஏன் ஃப்ரான்சைஸ்?

''புதிதாக ஒரு தொழில் தொடங்க திட்டமிடும்போது இருக்கும் ஆரம்ப கட்ட பயம், ஃப்ரான்சைஸ் எடுப்பதில் கிடையாது'' என்கிறார், அழகு நிலைய துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகளை வழங்கிவரும் கிரீன் டிரண்ட்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன்.



''பெரிய அளவில் தொழில் அனுபவம் இல்லாதவர்கள், புதிதாக தொழில் தொடங்கும்போது ஃப்ரான்சைஸ் தொழில்களைத் தேர்வு செய்யலாம். இதில் முதலீடு செய்த தொகையில் இத்தனை சதவிகிதம் லாபம் என்று சொல்வதைவிட, ஃப்ரான்சைஸி எடுப்பவர் தொழிலில் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்து லாபத்தின் அளவு மாறுபடும். பொதுவாக, புதிதாக தொழில் தொடங்கி தங்களது பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க நீண்டகாலம் பிடிக்கும். இதற்கு நிறையகாலத்தைச் செலவிடுவதைவிட, மக்கள் மனதில் இடம்பிடித்த, அவர்களுக்குப் பரிட்சயமான பிராண்டுகள் சார்ந்த தொழிலில் இறங்கினால் நேரடியாகத் தொழிலில் முழுக் கவனத்தையும் செலுத்தலாம். தவிர, பிராண்ட் மேம்பாடு சார்ந்த விஷயங்களை நிறுவனமே மேற்கொண்டுவிடுவதால் எந்த டென்ஷனும் தொழில்முனைவோருக்கு இல்லை'' என்கிறார் இவர்.

''தொழிலில் முன்அனுபவம் இருக்க வேண்டும் என்பதில்லை; தொழில் முனைப்பும், ஆர்வமும், சிறிய முதலீடும் இருந்தாலும் ஃப்ரான்சைஸ் பிஸினஸில் வெற்றிகரமாக வலம் வரலாம்'' என்கிறார், பால் மற்றும் பால் பொருட்கள் துறையில் முன்னணி நிறுவனமான ஹட்சன் நிறுவன இயக்குநர் சந்திரமோகன். இந்நிறுவனத்தின் ஐஸ்கிரீம் பிராண்ட்-ஆன ஐபாக்கோவிற்கு ஃப்ரான்சைஸி எடுக்க வெறும் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு போட்டாலே போதுமாம்.


அதேசமயத்தில், தொழிலில் அனுபவத்திற்கு முன்னுரிமை அளித்தும் சில நிறுவனங்கள் ஃப்ரான்சைஸ்  வாய்ப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, உணவுப் பொருள் துறையில் இந்த வகையில்தான் ஃப்ரான்சைஸ் தரப்படுகின்றன. உணவுப் பொருள் துறையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான எம்.ஜி.எம். நிறுவனத்தின் மேரி பிரவுன் ஃப்ரான்சைஸ் மேலாளர் சி.ஆர்தர் ஹில், ''மக்கள் புதுப்புது உணவுகளை சாப்பிட விரும்புகின்றனர். அதற்கேற்ப நாமும் உணவுகளை வழங்கவேண்டும். சாதாரணமாக எல்லோரும் ஓட்டல் தொடங்கி, அதில் வெற்றி கண்டுவிட முடியாது. தவிர, ஓர் உணவகம் ஆரம்பிக்கும்போது அதற்கான அத்தனை வசதிகளையும் தந்துவிட முடியாது. ஆனால், ஏற்கெனவே இத்துறையில் நிபுணத்துவம்கொண்ட பிராண்ட் நிறுவனங்களுடன் நீங்கள் கூட்டு சேரும்போது இதையெல்லாம் நீங்கள் எளிதாகச் செய்துவிட முடியும்'' என்கிறார் அவர்.



ஃப்ரான்சைஸ் தொழில் வாய்ப்பில் எந்த விஷயங்கள் முக்கியமானது? தொழிலை வெற்றிகரமாக நடத்த கடைப்பிடிக்க வேண்டியவை என்ன என்பதை இனி பார்ப்போம்.

தொடக்க நிலை!

புதிதாக ஒரு தொழில் தொடங்கத் திட்டமிடும்போது குறிப்பிட்ட ஏரியாவில் எந்த அளவுக்கு வெற்றி பெறுவோம் என யோசிப்போம். வெற்றிக்குத் தேவையான ஆய்வுகளை செய்யத் தவறுவோம். தவிர, திட்ட மதிப்பு, ஆரம்பச் செலவுகள், நம் டார்கெட் வாடிக்கையாளர்கள், விளம்பரம் என தொழிலுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிடுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஃப்ரான்சைஸ் வழங்கும் நிறுவனங்கள் இதை சரியாகச் செய்கின்றன. வியாபார வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை ஆராய்ந்து, அதற்கேற்ப திட்ட மதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் நமக்கு வழங்கிவிடும். இதனால் ஆரம்பகட்ட குழப்பங்கள் இருக்காது.



முதலீடு!

எந்தத் துறை சார்ந்த தொழில், அதன் விற்பனை வியாபார வாய்ப்புகள் எப்படி என்பதைப் பொறுத்து முதலீட்டில் வித்தியாசம் இருக்கும். குறிப்பாக, உணவுப் பொருட்கள் விற்பனை, உடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனை, கல்வி, தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் என்ன வாய்ப்பு உள்ளது?, எவ்வளவு முதலீடு செய்தால் நிறுவனத்தின் ஃப்ரான்சைஸி எடுக்க முடியும் என்பதை நிறுவனங்களே வெளிப்படையாக அறிவிக்கின்றன. தவிர, இந்த முதலீட்டை எத்தனை வருடங்களில், மாதங்களில் திரும்ப எடுக்கலாம் என்கிற உத்தரவாதங்கள் அளிக்கும். ஆனால், நமது தொழில்முனைவைப் பொறுத்து இதில் வித்தியாசங்கள் இருக்கலாம்.



ஒப்பந்தங்கள்!

தொழில் தொடங்கும்முன், ஃப்ரான்சைஸ் அடிப்படைகளை ஏற்று நடத்துவதற்குரிய வகையில் ஒப்பந்தம் போடப்படும். முக்கியமாக, ஃப்ரான்சைஸ் வழங்கும் நிறுவனம் நிர்ணயித்துள்ள ஒப்பந்த ஷரத்துகள்படிதான் ஃப்ரான்சைஸி இயங்கவேண்டும். இதுதான் இந்த தொழிலின் அடிப்படை என்று சொல்லலாம். ஏனெனில், நிறுவனம் உத்தரவாதப்படுத்தும் சேவை அல்லது அனுபவத்தில் தொழில்முனைவோர் சமரசம் செய்துகொள்ளும்போதோ அல்லது வாடிக்கையாளர் வித்தியாசத்தை உணரும்போதோ நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு குறையும் என்பதால் ஒப்பந்தத்தில் உள்ளபடி அனைத்தும் கடைப்பிடிப்பதுதான் முதன்மையானதாகப் பார்க்கப் படுகிறது.

கட்டமைப்பு வசதிகள்!

ஃப்ரான்சைஸ் வழங்கும் நிறுவனம் தனது எல்லாக் கிளைகளுக்கும் ஒரேமாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வைத்திருக்கும். இருக்கைகள், வண்ணம், அலங்காரம் மற்றும் அமைப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும். காரணம், இந்நிறுவனம் எங்கு இருந்தாலும் ஒரே மாதிரியான தரம் (ஸ்டாண்டர்டு) இருக்கும் என வாடிக்கையாளர்களை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதற்கு ஏற்ப தொழில் தொடங்கும்போதே இந்த வேலைகளை நிறுவனமே செய்துதரும் அல்லது நிறுவனம் தரும் திட்டத்தின் அடிப்படையில் இந்த வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஆனால், வாடிக்கையாளர்கள் ஒரேமாதிரியான அமைப்பைப் பார்த்து சலிப்படையாமல் இருக்க சில நிறுவனங்கள் இந்த அமைப்பை அடிக்கடி மாற்ற ஆலோசனை தரும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும்.



ஊழியர்கள்!

ஃப்ரான்சைஸ் எடுப்பதால் அந்தக் கிளைக்கு நீங்களே உண்மையான உரிமையாளர். இதன் அடிப்படையில் பணியாளர்களை நீங்களே நியமித்துக்கொள்ளலாம். சில நிறுவனங்களில் பணியாளர் களை நிறுவனமே அனுப்பி வைக்கும். பொதுவாக, ஃப்ரான்சைஸ் வழங்கும் அனைத்து நிறுவனங்களுமே அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்குப் பயிற்சிகளை அளித்துவிடும். ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும், வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதுபோன்ற அடிப்படை பயிற்சிகளும், அவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், அவ்வப்போதைய புதிய அறிமுகங்கள் மற்றும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப இந்தப் பயிற்சிகளும் அடங்கும். மேலும், எத்தனை பணியாளர்கள் தேவை, அவர்களின் உடை எப்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களிலும் நிறுவனம் கவனம் செலுத்தும் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனமே அதை வழங்கிவிடும்.

நிர்வாகம்!

நிர்வாகம் உங்கள் பொறுப்பில் இருந்தாலும், அதை மேலாண்மை செய்வது ஃப்ரான்சைஸ் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பாகிவிடும். தினசரி வியாபார, சேவை நடவடிக்கைகள், கையிருப்பு, ஃப்ரான்சைஸி  தேவைகள் போன்றவற்றை நிறுவனம் கண்காணிக்கும். மேலும், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தவிர, கணக்குகள் நிர்வாகம், ஐ.டி தொழில்நுட்பம் போன்றவையும் நிறுவனம் கண்காணிக்கும். குறிப்பிட்ட ஃப்ரான்சைஸியின் பொறுப்பாளராக நீங்கள் இருந்தாலும் அவற்றின் முழுக் கட்டுப்பாடும் நிறுவனம் வைத்திருக்கும்.

விநியோகம்!



ஃப்ரான்சைஸிக்குத் தேவையான விளம்பர போர்டுகள், துண்டறிக்கைகள், அலங்காரப் பொருட்கள் என அடிப்படை மேம்பாடு வசதிகள் என அனைத்துப் பொருட்களையும் நிறுவனமே அளித்துவிடும். தவிர, உணவக ஃப்ரான்சைஸ் என்றால் உணவுத் தயாரிப்பு தொழில்நுட்பம், அதற்கு தேவையான பொருட்கள், காம்போ திட்ட இலவசங்கள் என அனைத்தையும் நிறுவனமே வழங்கிவிடும். கல்வி நிலைய ஃப்ரான்சைஸ் என்கிறபோது பாடத் திட்டங்கள், அதனுடைய உபகரணங்கள் என தொடர்புடைய பொருட்களை நிறுவனமே வழங்கிவிடும். ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் என்றால் சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் அதற்கு ஏற்ப குளிர்சாதனப் பெட்டிகள் போன்றவற்றையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே வழங்கிவிடும். இதற்கான கட்டணங்களை மட்டும் நாம் கட்டினால்போதும்.

இடம்!

நீங்கள் தேர்வு செய்யும் இடத்தைப் பொறுத்து தான் பல நிறுவனங்களின் ஃப்ரான்சைஸ் உங்களுக்குக் கிடைக்கும். எவ்வளவு சதுர அடி இடம், எந்தப் பகுதியில் இருக்கவேண்டும், மக்கள் நெருக்கம், போக்குவரத்து வசதி, பார்க்கிங் வசதி என இடம் சார்ந்த விஷயங்களை கணக்கில் எடுத்தே ஃப்ரான்சைஸ் கிடைக்கும். இதை அந்தந்த நிறுவனத்திலிருந்து நேரடி ஆய்வுக்குப் பிறகே தீர்மானிப்பார்கள்.

இடவசதி அதிகமாக இருக்கிறது; ஆனால், மக்கள் நெருக்கம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு செலவு செய்தும் பலனிருக்காது. அதுபோல, சில உணவகங்கள் சிறிய அளவிலான ஃப்ரான்சைஸ் வாய்ப்புகளையும் வழங்குகிறது. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் இதுபோல தொழில்களைத் திட்டமிடலாம்.

தொடர்ச்சியான உதவிகள்!

ஃப்ரான்சைஸ் எடுப்பதற்குமுன் நாம் தொடங்கப்போகும் பகுதியில் இதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை ஆராயவேண்டும். எந்த ஊருக்கு எந்தத் தொழில் தொடங்கினால் லாபமாக இருக்கும் என்பது முதல் ஆய்வாக இருக்கவேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அந்தப் பகுதியில் எந்த அளவில் பிரபலமாக உள்ளது, அது நமக்கு சாதகமாக இருக்குமா என்று பார்க்கவேண்டும். வளர்ந்து வரும் நகரங்களில் நீங்கள்தான் அந்த பிராண்டை கொண்டு செல்லமுடியும் எனும்போது, நிறுவனத்திடமிருந்து கூடுதல் உதவிகளைக் கேட்கலாம். அல்லது தொழில் தொய்வாக இருக்கிறது என்கிறபோது வேறு உதவிகளைக் கேட்கலாம்.



லாபம்!

பொதுவாக, ஃப்ரான்சைஸ் தொழில்களைப் பொறுத்தவரை முதலீட்டு அடிப்படையில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. நமது உழைப்பு, பிராண்ட் விளம்பரங்களைப் பொறுத்து நமக்கு வருமான வாய்ப்புகள் உள்ளது. சில தொழில்களில் உடனடியான லாப வாய்ப்புகள் இல்லையென்றாலும் அடுத்தடுத்த மாதங்களில் லாபம் பார்த்துவிட முடியும். எனவே, குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளிகளில் முதலீட்டை திரும்ப எடுத்துவிடும் வாய்ப்பும் உள்ளது.

வேறு பொருட்கள்!

ஃப்ரான்சைஸ் நிறுவனம் தொடங்குகிறோம் என்றால் அந்த குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டும்தான் வழங்கவேண்டும். நமது விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை/சேவைகளை வழங்கக்கூடாது. நிறுவனத்தின் பொருட்கள்/ சேவைகளை தரும்போது மட்டுமே நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு குறையாமல் இருக்கும். நிறுவனம் இந்த விஷயங்களை கவனிக்காது என்கிற எண்ணத்தில் நாம் வேறு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்போது ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தை மீறிவிடுகிறோம். இதன் அடிப்படையில் ஃப்ரான்சைஸ் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

பொறுப்புகள்!

முதலீடு செய்து, பிஸினஸ் நடத்துவதால் மட்டுமே லாபம் கிடைத்துவிடாது. எந்தத் துறையில் நீங்கள் ஃப்ரான்சைஸ் எடுத்திருக்கிறீர்களோ, அதற்கேற்ப நமது உழைப்பை செலுத்தவேண்டும். ஏற்கெனவே அந்நிறுவனம் ஏற்படுத்தி வைத்துள்ள பிராண்ட் மதிப்பினால்தான் வாடிக்கையாளர்கள் நமது நிறுவனத்தைத் தேடி வருகிறார்கள். அந்த மதிப்பை தக்க வைப்பதும், வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அறிவித்துள்ளபடி சேவைகளை வழங்குவதும் ஃப்ரான்சைஸி எடுத்தவருடைய முக்கிய கடமையாகும். ஃப்ரான்சைஸ் தரும் முன் எல்ல பரிசோதனை முயற்சிகளையும் நிறுவனம் தன்னுடைய சொந்த அவுட்லெட்களில் பரிசோதித்த பின்னரே ஃப்ரான்சைஸ் தரும். எனவே, புதிய முயற்சிகளை ஏற்றுக்கொள்வதும், அதை செயல்படுத்துவதும் அவசியம்.

ஆனால், நிறுவனம் பொதுவாக வழங்கும் சில அறிவிப்புகளை நமது தேவைகேற்ப மறுக்கவும் செய்யலாம். குறிப்பாக, இலவசம் மற்றும் தள்ளுபடி அறிவிப்புகள் வரும்போது நமது பகுதியின் வாடிக்கையாளர்களை கருத்தில்கொண்டு அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தவிர்க்கவோ செய்யலாம்.

குறிப்பாக, உயர்ரக ஆடைகள் ஃப்ரான்சைஸ் நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றலாம்.  ஆனால், நிறுவனம் உங்களின் விற்பனை அளவை பொறுத்தே இதை முடிவெடுக்கும். அதுபோல சீஸனுக்கேற்ப உங்களது தேவைகளை முன்கூட்டியே முடிவு செய்யவேண்டும். கோடைகாலத்தில்  அதிகமான குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம்  விற்பனையாகும்; பண்டிகை காலங்களில் துணிவகைகள் என முன்கூட்டியே திட்டமிட்டு நிறுவனத்திற்கு தேவையான ஆர்டர்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் நிறுவனம் உங்கள் தேவைகேற்ப திட்டமிடும்.

ஆக, ஓரளவு உஷாராகச் செய்தால் ஃப்ரான்சைஸ் பிஸினஸ் உங்களுக்கு நிச்சயம் கைதரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஓரளவு பணம் வைத்திருப்பவர்கள், இந்தப் புதிய தொழில்முயற்சியை மேற்கொள்ளலாமே!