Header

பிசினஸில் ஜெயிக்க வைக்கும் திறமைகள்! - Entrepreneurial Strengths Finder

பிசினஸில் ஜெயிக்க வைக்கும் திறமைகள்! - Entrepreneurial Strengths Finder


உங்கள் நிறுவனத்தைப் பற்றி பெருமையாகவும், தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் வெளி உலகில் பேசுவது, உங்களை வெற்றிகரமான பிசினஸ்மேனாக அடையாளப்படுத்தும்!

புத்தகத்தின் பெயர்: என்ட்ரப்ரெனெரியல் ஸ்ட்ரெங்த்ஸ் ஃபைன்டர் (Entrepreneurial Strengths Finder)

ஆசிரியர்கள்: ஜிம் கிளிஃப்டன், சங்கீத பரத்வாஜ் பாதல் (Jim Clifton, Sangeeta Bharadwaj Badal)

பதிப்பகம்: Gallup Press

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, ‘ஒரு குழந்தை ஏதாவது ஒரு விளையாட்டை நன்றாக விளையாடினால், அந்தத் திறமையைக் கண்டறிந்து அதனை நாளடைவில் நல்ல பயிற்சி களைக் கொடுத்து பெரிய புரொஃபஷனல் ப்ளேயாராக மாற்ற வழி இருக்கிறது. ஆனால், வியாபாரம் செய்யத் தெரிந்த மனிதர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை வளர்க்க மிகக் குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன’ என்ற ஆதங்கத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.



புத்தகத்தின் ஓர் ஆசிரியரான ஜிம் கிளிஃப்டன், தொழில்முனைவோருக்கான அனலிடிக்ஸ் வழியிலான அட்வைஸ் மற்றும் மக்கள் கருத்துக் களைக் கணித்துத் தரும் ‘கேலப்’ எனும் அமெரிக்க நிறுவனத்தில் தலைவராக இருந்தவர். தொழில் துறையில் சுமார் 40 வருட அனுபவம் கொண்டவர். அவருடைய நாற்பது வருட அனுபவத்தில் அவர் கண்டதாகச் சொல்வது, ஒரு திறமைசாலியான தலைவன் (லீடர்) தோல்வியைச் சந்திப்பதற்குக் காரணமானது எது என்றால், அவர்களுடைய எண்ணமேதான்.  அதிலும், அவர்கள் முழுமையாக நம்பும் விஷயம் குறித்த அவர்களுடைய எண்ணம் தவறாக இருக்கும்போது அத்தனை விஷயங்களுமே தவறாகிப் போய்விடுகிறது. அந்தத் தவறான எண்ணத்துடன் நிர்வாக மேலாண்மையில் ஈடுபாட்டை அதிகப்படுத்தும்போது தோல்வி என்பது தாறுமாறான வேகத்தில் அவர்களை நோக்கி வந்துவிடுகிறது என்கிறார்.

உதாரணமாக, மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வேகமாகத் தனது பிசினஸை விரிவாக்கம் செய்து வந்தபோது பல போட்டியாளர்களும் அதன்  வெற்றிக்குக் காரணம் என நினைத்தது,  வாடிக்கை யாளர்கள் ஆர்டர் செய்த உணவுப் பொருட்களை வேகமாகத் தருவது  என்பதே. அதனால், பல போட்டியாளர்களும் மெக்டொனால்ஸைவிட அதிவேகத்தில் உணவை  சப்ளை செய்வதற்கான வழிவகைகளைக் கண்டறிய முயன்று அதில் வெற்றியும் பெற்று நடைமுறைபடுத்தினார்கள். ஆனாலும், அவர்களால் வெற்றிபெற முடிய வில்லை. பின்னர்தான் தெரிந்தது மெக்டொனால் ஸின் வெற்றிக்குக் காரணம், மக்கள் விரும்பும் வண்ணம் இருக்கும் அதன் சுவைதான்.

மேலே சொன்ன உதாரணத்தில், தொழில் முனைவோர்கள் அவர்கள் நினைத்ததைச் செய்து முடித்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து லாபம் பெறமுடியும் என்பது மட்டும் நடக்கவில்லை. இதுபோன்ற பல தவறுகளைத் தொழில் முனைவோரும், நிறுவனத் தலைவர்களும் செய்யவே செய்கிறார்கள். தொழில் முனைவோர் கள் புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயம், செய்யும் தொழிலில் புதுமைகள் அவசியம்தான். ஆனால், வெற்றி என்ற மேஜிக் நடக்க சூப்பர் பிசினஸ்களை உருவாக்கத் தெரிந்த திறமை வாய்ந்த தொழில்முனைவோர்களே முக்கியம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

என்னதான் இன்னோவேஷன்கள் செய்யப் பட்டாலும், அதை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து காசாக்க முடியாவிட்டால் அதனால் ஒரு பலனும் இல்லை என்கிறார்கள். இன்னோ வேஷன்களைச் செய்பவர்கள் சிந்தனையாளர் கள் மட்டுமே. ஒரு பிரச்னையை எடுத்து அதை எளிமைப்படுத்தவோ அல்லது புதியதாய் ஒன்றை உருவாக்கவோ முடிந்தவர்கள். அவர்கள் செய்த இன்னோவேஷன்களுக்குச் செயல்வடிவம் தருவார்கள் தொழில்முனைவோர்கள் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.



பல தொழில்முனைவோர்கள் ஆசிரியரிடம் கேட்கும் ஒரு கேள்வி, இன்னோவேஷனும் தொழில்முனைவும் முட்டையும் கோழியும் போன்ற ஒன்றல்லவா என்பதுதான் என்று சொல்லும் ஆசிரியர்கள், அது சரியான ஒப்பீடு அல்ல என்கின்றனர். இந்த இரண்டுக்கும் சரியான ஒப்பீடு என்பது ஒரு குதிரையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வண்டியுமாகும் என்கின்றனர். தொழில்முனைவோர் என்பவர் குதிரையைப் போன்றவர். இன்னோவேஷன் அதனுடன் இணைக்கப்பட்ட வண்டியைப் போன்றது. குதிரை வண்டியை இழுத்துச் செல்லுமே தவிர, வெறும் வண்டி தானாக நகராது என்கின்றனர்.

என்னதான் சூப்பர் ஐடியாவே ஆனாலும் அதை வியாபாரமாக்கி காசாக்க வேண்டுமே என்கின்றனர் ஆசிரியர்கள். ஐடியாக்கள் நிறைய இன்றைக்குக் கிடைக்கின்றன. ஆனால், அதைத் தொழிலாக்கி காசாக்க ஆள் கிடைப்பதேயில்லை என்று சொல்லும் ஆசிரியர்கள்,  இந்தப் புத்தகத் தில் புதிய தொழில்முனைவோரைக் கண்டறிந்து ஊக்குவிக்கத் தலைவர்கள் என்ன செய்யவேண்டும் என்று பத்து வழிமுறைகளைச் சொல்லியுள்ளனர். அதேபோல், தொழில்முனைவோர் வெற்றிகர மாகத் திகழத் தேவையான பத்துத் திறமைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டும், அதுகுறித்து விளக்கமான கருத்துக்களையும் கூறியுள்ளனர் ஆசிரியர்கள்.

முதலாவது திறமை என்பது பிசினஸ் ஃபோகஸ் என்று சொல்லும் ஆசிரியர்கள், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் அனைவருமே பணம் என்பதன் மீது தீராத காதல் கொண்டிருப் பார்கள் என்கின்றனர். இது எப்படி என் லாபத்தைப் பாதிக்கும் என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள் இந்தவகை மனிதர்கள். எந்த ஒரு விஷயமும் அதிக செலவுக்கு வழிவகுத்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். ஆனால், செலவைக் குறைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, வாடிக்கையாளர்களின் நலனை மறந்துவிடக் கூடாது என்கின்றனர் ஆசிரியர்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு டெட்லைன் குறிப்பது, தன்னுடைய நேரத்தை சரிவர நிர்வகிப்பது, தன்னுடைய தொலைநோக்கு பார்வையில் என்னென்ன நிகழவேண்டும் என்று நினைக் கிறார்களோ அவற்றை எழுதிவைத்துக் கொண்டு அவ்வப்போது அவற்றை சரி பார்த்துக்கொள்வது, பணியாளர்களிடம் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் நாம் எந்த இலக்கினை அடைய வேண்டும் என்பதை அடிக்கடி தெரியப்படுத்திக் கொண்டேயிருப்பது, லாபநோக்கில் கவனம் வைக்கும்போதும் மனிதநேயம் அடிபடாமல் பார்த்துக்கொள்வது, சாத்தியமான இலக்குகளை மட்டுமே நிர்ணயித்துக்கொண்டு அதற்குத் தேவையான அனைத்தையும் தெரிந்துகொண்டு செயல்படுவது போன்ற செயல்கள் இந்தத் திறனை வளர்க்க மிக, மிக உதவும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இரண்டாவதாக ஆசிரியர் சொல்வது நம்பிக்கையை. உங்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்புறம் என்ன, நல்ல நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்துங்கள் என்கின்றனர். வெற்றிகரமான தொழில்முனையும் நபராய் நான் திகழ்வேன் என்ற நம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பியுங்கள் என்கிறார்கள். எந்த விஷயத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது, நல்ல தெளிவான ஆராய்ச்சி களைச் செய்து திட்டமிடுவது, வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று புதைகுழியில் விழாமல் இருப்பது போன்றவை இந்த குணாதிசயத்தை வளர்த்துக்கொள்ள உதவும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

மூன்றாவதாக, நல்லதொரு க்ரியேட்டிவ் சிந்தனையாளராக இருக்கும் குணாதிசயத்தை. வாடிக்கையாளரின் இன்றைய தேவையையும்; நாளைய தேவையையும் உணர்ந்து நடுநிலைப் படுத்தி சிந்தித்தல், நம் ஐடியாக்களை எப்படி எடைபோடுவது என்பதையும் கண்டறிதல், ஒரு சிம்பிளான நிர்வாக முறையைக் கடைப்பிடித்தல், இன்னோவேஷன்களைச் செய்யத் தேவையான விஷயங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது போன்றவை இந்தவகை குணாதிசயத்தை வளர்த்துக்கொள்ள உதவும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நான்காவதாக, டெலிகேஷன் எனும் மற்றவர் களுக்கு தரும் அதிகார ஒப்படைப்புதனை. ஐந்தாவதாக, பணியாளர்கள் நிறுவனத்துக்கு நல்லதொரு பங்களிப்பைத் தருவதற்கான மன உறுதியை வளர்க்க பாடுபட வேண்டும். ஆறாவதாக, உன் வாழ்க்கை உன்கையில் என்று தன்னைத்தானே நம்பி செயல்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது. ஏழாவதாக, எப்போதும் தான் இருக்கும் தொழில் குறித்த முழு அறிவையும் பெற்றும், எப்போதுமே தன் தொழிலில் நடக்கும் விஷயங் களை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவராயும் திகழ்வது.

எட்டாவதாக, உங்கள் நிறுவனத்தைப் பற்றி பெருமையாகவும் தெளிவாகவும் தன்னம்பிக்கை யுடனும் வெளி உலகில் பேசுவது. ஒன்பதாவதாக, சரியானதொரு நெட்வொர்க்கில் தொடர்ந்து இருந்துகொண்டேயிருப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்துவருவது.

பத்தாவதாக, மேலே சொன்ன அனைத்திலும் திறமையை வளர்த்துக்கொண்டு சரியானதொரு ரிஸ்க் எடுக்கும் மனநிலையிலும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

எந்த வகை ரிஸ்க்கை எடுக்கலாம், எதனை எடுக்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுதல், கொஞ்சம் கொஞ்சமாய் எடுக்கும் ரிஸ்க்கை அதிகரித்துக்கொண்டே போவது எப்படி என்பதை அறிந்துகொள்ளல், சூதாட்டம் போன்ற ரிஸ்க்கை எடுக்காமலும், தேவை இல்லாத /முக்கியமானதாக இல்லாத புராஜெக்ட்டு களை சட்டென முடிவுக்கு கொண்டுவர தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.