Header

தி செல்ஃப் மேட் பில்லினியர் எஃபெக்ட் (The Self-Made Billionaire Effect)

பெரும் பணக்காரர் ஆகும் சூட்சுமங்கள்!

புத்தகத்தின் பெயர்: தி செல்ஃப் மேட் பில்லினியர் எஃபெக்ட் (The Self-Made Billionaire Effect)

ஆசிரியர்: ஜான் வயோக்லா, மிட்ச் கோஹன் (John Sviokla, Mitch Cohen)

வெளியீடு: பென்குவின் புக்ஸ் லிமிடெட்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ஜான் வயோக்லா மற்றும் மிட்ச் கோஹன் எழுதிய ‘தி செல்ப்-மேட்  பில்லினியர் எஃபெக்ட்’ எனும் புத்தகத்தை. சுயமுயற்சியினால் பில்லியன் டாலர்கள் சம்பாதித்தவர்கள் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைச் சொல்லும் புத்தகம் இது.



பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து, அந்த நிறுவனங்களின் கட்டமைப்பு பிடிக்காமல் வேலையைத் துறந்து, தொழில் செய்து பில்லினியர் ஆகியவர்கள் சிலர். சிலரோ வேலை பார்க்கும் நிறுவனம் அவர்களை வேலையை விட்டு நீக்கியதால், தொழில் துவங்கி வெற்றி பெற்று பில்லினியர் ஆனவர்கள்.

இந்த இருவகை நபர்களும் வேலை பார்த்த நிறுவனங்கள், இவர்களையும் இவர்களுடைய ஐடியாவையும் உபயோகித்து, இவர்கள் சம்பாதித்த பில்லியன்களை ஏன் சம்பாதிக்கவில்லை என்ற கேள்வி மனதில் வருகிறது இல்லையா? ஏன் இதை அந்த நிறுவனங்கள் செய்யவில்லை என்ற கேள்விக்கான பதில் ஒன்றுதான். ஒவ்வொரு நிறுவனத்திலும் இதுபோன்ற ஐடியாக்களை கொண்டிருப்ப வர்கள் பலரும் இருக்கவே செய்கின்றனர். ஆனால், இந்த பில்லியனர்கள் அவர்களுடைய ஐடியாக்களை செயலாக்கி பில்லியன்கள் சம்பாதித்தனர். அவர்களை வேலைக்கு வைத்திருந்த நிறுவனங்களோ, அந்த ஐடியாக்களை செயலாக்க முனையவில்லை என்பதுதான்.

இன்றைய நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு இருக்கும் முதல் சிக்கலே தொடர்ந்து சம்பாத்தியத்தை அதிகப்படுத்திக் கொண்டே போவது எப்படி என்பதுதான். இந்த சிக்கலை சமாளிக்க தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய முடிவெடுக்கும் திறனைக்கொண்டு,நல்ல திறமையான நபர்களை பணிக்கு அமர்த்தி வேலை வாங்குவதன் மூலம் சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முயல்கின்றனர். இந்த முடிவெடுக்கும் திறன் எல்லாம் எப்போது வெற்றி பெறும்?



தொழில் நடத்தும் சூழலில் சட்டதிட்டங்கள் (அரசாங்க சட்டங்கள், டெக்னாலஜி, வாடிக்கையாளர் மனநிலை போன்றவை இதில் உள்ளடங்கும்) எல்லாம் சரிவர வகுக்கப்பட்டு, மாற்றங்கள் ஓரளவுக்கு கணிக்கப்படும் அளவுக்கு இருக்கும்போது மட்டுமே என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆனால், இன்றைய சூழ்நிலைகளை கொஞ்சம் பாருங்கள். மாற்றம் என்பதே ஒரே சட்டமாக இருக்கிறது. இதில் முடிவெடுக்கும் திறன் எல்லாம் பெரிதாகப் பலனளிக்காமல் போய்விடுகிறது. அதனாலேயே பல பெரிய நிறுவனங்களுக்கு தங்களுடைய சம்பாத்தியத்தை நிலைநிறுத்திக் கொள்வது என்பதே பெரியதொரு சவாலாக இருக்கிறது. இதுவே புதிய முயற்சிகளுக்கு ஒரு தடைக்கல்லாகவும் ஆகிவிடுகிறது. ஆனால், செல்ப்-மேட் பில்லியனர்களோ, இந்த சவால்களை சுலபமாக சமாளித்துவிடுகின்றனர். மாற்றங்களை எதிர்கொள் கின்றனர். தங்கள் முன்னே இருக்கும் வாய்ப்புகளை கண் டறிந்து, அவற்றை உபயோகிக்கத் தேவையான திறனுடைய பணியாளர்கள் இல்லாதபோதும் கூட இந்த வகை நபர்கள் கொழுத்த லாபம் தரக்கூடிய திட்டங்களை செயலாக்கி பணம் சம்பாதித்துவிடும் திறனைக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் இவர்களைப் பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கும் ஆசிரியர்கள், பில்லியன் டாலர் சம்பாத்தியம் என்பது ஒன்றும் சாதாரணமில்லை. நீங்கள் ஒரு திறமையான மற்றும் பொறுப்பு நிறைந்த மனிதராக இருந்து, ஒரு வேலையையோ அல்லது ஒரு தொழிலையோ செய்து கொண்டிருந்தால்கூட, சில பல மில்லியன் டாலர்களை சம்பாதிக்கலாம். ஆனால், பில்லியன் டாலர்களை சம்பாதிப்பது என்பது இந்த ரூட்டில் சாத்தியமில்லாத ஒன்று என்றே சொல்லலாம்.

மில்லியன்கள் சம்பாதிப்பதற் கான நிறைய வழிகள் பல புத்தகங்களில் விளக்கப்பட்டும் இருக்கிறது. ஆனால், பில்லியன் டாலர் சம்பாதிப்பது என்பது குறித்த வழிகளை யாரும் ஆராயவில்லை. நேரடியான வழிகள் எதுவும் இதுவரை சொல்லப்பட்டதைப் போல் தெரியவில்லை. அதனாலேயே நாங்கள் செல்ஃப் மேட் பில்லியனர்கள் பலரின் பின்புலத்தையும் கண்டறிந்து அவர்களின் வழிவகைகள் குறித்து புத்தகம் எழுதியுள்ளோம் என்கின்றனர் ஆசிரியர்கள்.



அதிர்ஷ்டம் ஒருவர் பணம் சம்பாதிப்பதில் ஓரளவுக்கு கைகொடுக்கிறது என்றாலும், இதனால் மில்லியனர்களை மட்டுமே உருவாக்க முடியும். பில்லியனர் ஆகவேண்டும் என்றால், அதிர்ஷ்டத்தையும் தாண்டி நிறைய விஷயங்களை ஒருநபர் செய்ய வேண்டும் என்கின்றனர்.

பல பில்லியனர்களை ஆராய்ந்ததில் இவர்கள் கண்ட ஒரு முக்கிய விஷயம், பில்லியனர்கள் உலகம் இப்படித்தான் என்பதில் தெளிவாக இருக்கின்றனர் என்பதைத்தான். அதாவது,  இருப்பதை வைத்து எப்படி தொழில் செய்வது என்பதை தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டுள்ளனர் அவர்கள். அதுவும் தவிர, இவர்கள் முடிவெடுக்கும் திறன் பெரிய அளவில் ஒவ்வொரு முறையும் சரியாக இருந்துவிடுகிறது. முடிவெடுக்கும் திறன் சரியாக இருப்பதற்கு மூலகாரணம், இவர்கள் எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதை பூரணமாக உணர்ந்தவர்களாக இருப்பதுதான் என்கின்றனர்.

இந்த எதிர்கால அறிவினை வளர்ப்பது என்பது ஒன்றும் சாதாரணமான காரியம் இல்லை என்று சொல்லும் ஆசிரியர்கள், நரம்பியல் நிபுணர்கள் சொல்வதை மேற்கோள் காட்டுகின்றனர். முடிவெடுக்கும் திறனும், எதிர்காலம் குறித்த சரியான பார்வையும் (விஷன்) மூளையில் ஒன்றுக்கொன்று எதிர்புறத்தில் இருந்து நடக்கும் செயல்பாடுகளாகும் என நரம்பியல் மற்றும் மூளை செயல்பாட்டு ஆய்வுகள் சொல்கின்றன. அதனாலேயே ஒருவர் எந்த அளவுக்கு முடிவெடுக்கும் திறனில் திறமைசாலியாக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு எதிர்காலம் குறித்த பார்வை குறைவாக இருக்கிறது என்கின்றனர்.

ஆனால், செல்ஃப்-மேட் பில்லியனர்களில் பெரும் பான்மையானவர்கள் முடிவெடுக்கும் திறனிலும், எதிர்காலம் குறித்த கற்பனையிலும் தலை சிறந்தவர்களாக திகழ்ந்து உடல் ரீதியான கோட்பாடுகளை முறியடித்தவர்களாக இருக்கின்றனர் என்கின்றனர் ஆசிரியர்கள். எப்படி இது சாத்தியமாகிறது என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகம். முடிவெடுக்கும் திறமையையும் வளர்த்து, அதே சமயம் எதிர்காலம் குறித்த கற்பனைத் திறனையும் வளப்படுத்துவது என்பது ஒரு இரட்டைத்தன்மை. இந்த இரட்டைத்தன்மையை அடைய ஐந்து குணாதிசியங்களை செல்ஃப்-மேட் பில்லியனர்கள் கொண்டுள்ளனர் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

முதலாவதாக, இந்த வகை நபர்கள் மிகப் பெரிய வெற்றிபெறும் ஐடியாக்களை கண்டறியும் திறனை கொண்டிருக்கின்றார்கள். ஏனையவர்களோ மாற்றத்தை மட்டுமே கண்டு உணரும் திறன் கொண்டுள்ளனர். இந்த மிகப் பெரிய வெற்றிபெறும் ஐடியாவைப் பெற வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தை ஒரு வாடிக்கையாளராகவே மாறி உணர்ந்து அறிந்துகொள்ளும் திறனை செல்ஃப்-மேட் பில்லியனர்கள் தங்களிடம் கொண்டுள்ளனர்.

இரண்டாவதாக, பொறுமையுடன் கூடிய அவசரத்தை தங்கள் வசம் கொண்டுள்ளனர் இவர்கள். தேவைப்படும்போது படுமந்தமாகவும், தேவைப்படும் போது அதி வேகமாகவும் செயலாற்றும் தனித்திறமையை கொண்டுள்ளனர் இந்த பில்லியனர்கள்.

மூன்றாவதாக, சாதாரணமாக ஒரு தொழிலில் கண்டுபிடிப்புகளைச் செய்ய ஒரு பிரிவும், உற்பத்தி செய்வதற்கு ஒரு பிரிவும் இருக்கும். ஆனால், இந்த பில்லியனர்களிடத்திலோ உற்பத்தி செய்துகொண்டே கண்டுபிடிக்கும் திறன் இருக்கும்.

நான்காவதாக, ரிஸ்க் எடுக்கும் மனநிலை. கையில் இருப்பதை இழப்பதற்கு இவர்கள் பயப்படுவதேயில்லை. வெற்றியே கிடைத்தாலும் தப்பான பாதையில் சென்று குறைந்த சாதனைகளை செய்வதைவிட சரியான பாதையில் சென்று பெரிய வெற்றியை காணவேண்டும் என்ற கவலையே இவர்களுக்கு அதிகம் இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஐந்தாவதாக, தொழில் முனைவதில் ஒரு தலைவனாகவும் மற்றும் கூட்டாளியாகவும் (லீடர் மற்றும் பார்ட்னர்) திகழும் மனநிலையை கொண்டிருப்பார் கள். இந்த வகை குணாதிசியம்தான் அவர்களை பெரும் பணம் சம்பாதிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.
பணம் சம்பாதிக்க ஆசைப்படும் அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம் இது.