Header

பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி, சைக்கிள் பிராண்ட்.

பேக்கிங் தந்த வெற்றி - ஆர்.என். மூர்த்தி, சைக்கிள் பிராண்ட்.





அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எனது அப்பா தொடங்கிய நிறுவனம் இது என்றாலும், அப்பாவுக்குப் பிறகுதான் பல திருப்புமுனைகளை நாங்கள் சந்தித்தோம். எங்களுக்குப் பூர்வீகம் கர்நாடகம் என்றாலும் அப்பாவும், அம்மாவும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். என் அப்பா, பெரியகுளத்தில் பள்ளிப்படிப்பையும், மதுரையில் கல்லூரி படிப்பையும் முடித்தார். ஐந்து பேரை டைப்ரைட்டிங் கோர்ஸ் சேர்த்துவிட்டு, அதற்கு கமிஷனாக இவர் அந்த கோர்ஸை இலவசமாகப் படிப்பார்.

யாரும் செய்யாத வேலைகளைச் செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கூர்க் காப்பி தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கும் வேலையைச் செய்ய கர்நாடகம் வந்தார். அப்போது மைசூரில் அகர்பத்திக்கு இருந்த மோகத்தைப் பார்த்து அந்த தொழிலில் இறங்கினார். இப்படி ஆரம்பமானதுதான் எங்கள் நிறுவனம்.

எங்களது ஊதுபத்திகளுக்கு வாசனை சேர்ப்பதற்கு பிறர் தயாரித்து கொடுக்கும் வாசனைத் திரவியங்களை வாங்காமல் நாங்களே நேரடியாகத் தயாரிக்கும் திரவியங்களை பயன்படுத்தியதே எங்கள் முதல் திருப்புமுனை. வெளிநாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிப்பது தொடர்பான புத்தகங்கள், பயிற்சிகள் என இப்போதும் இந்த முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம்.

எல்லா மொழிகளிலும், எல்லா மக்களுக்கும் எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காக சைக்கிளை டிரேட் மார்க்காக வைத்தது எங்கள் இரண்டாவது திருப்புமுனை. நாங்கள் மொத்த விற்பனை செய்தாலும், ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி அப்பா தனியாக ஆர்டர் பிடித்து வருவார். அப்பாவுக்குப் பிறகு நானும், அண்ணனும் அந்த வேலையை இன்றும் செய்து வருகிறோம்.

எங்கள் மூன்றாவது திருப்புமுனை நாங்கள் செய்த பேக்கிங் யுக்தி. பொதுவாக ஊதுபத்தியின் விலையைவிட அதை பேக்கிங் செய்ய அதிகம் செலவாகும். நாங்கள் பேக்கிங்கை சாதாரண டிஷ்யூ பேப்பருக்கு மாற்றி, குறைந்த விலையில் தரமான ஊதுபத்திகளை அளித்தோம்.

இந்த யுக்திகளும் திருப்புமுனைகளும் குடும்பத் தொழிலிலிருந்து எங்களை தொழில் குடும்பமாக மாற்றியது. அப்பா ஏற்படுத்தித் தந்த அடித்தளம் எங்களுக்கு ஆணிவேர் என்றாலும், எங்களது உழைப்பு அந்த செடியில் பூக்களாக மலர்ந்து நிற்கிறது!