Header

கனவு காணுங்கள், வெற்றி பெறுங்கள் - " டேக் இட் ஹோம் "

கனவு காணுங்கள், வெற்றி பெறுங்கள் - டேக் இட் ஹோம்



ரஷ்மி பன்ஸாலின் மற்றுமொரு பெஸ்ட் செல்லர், சமீபத்தில் புத்தகக் கடைகளின் ஷெல்ஃப்களை அலங்கரித்துவரும் 'டேக் மீ ஹோம்’. சிறுநகரவாசிகளின் பெருங்கனவு பற்றியும், அவர்கள் அடைந்த மகத்தான வெற்றி குறித்தும் ஏறக்குறைய 360 பக்கங்களில் விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ரஷ்மி. சாதிக்க வேண்டும் என்கிற வேட்கை உள்ளவர்களுக்கு 'தீனி’போடும் வகையில் எளிமையாக எழுதப் பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.

சிறிய நகரங்களில் ஆரம்பித்த பல தொழில்களும், அதை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவர்களும் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கின்றனர். இதில் இருபதுபேருடைய வெற்றியும், வெற்றியின் இலக்கை அடைய அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், கஷ்டங்களும் கூறப்பட்டிருப்பதுடன் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்பதை இந்த இருபதுபேரும் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு அம்சமாகும்.

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் ஆஸ்ட்ரான் சினிமா அரங்கில் சிப்ஸ் விற்றுவந்த விரானி சகோதரர்கள்,  இன்றைக்கு ரூ.1,000 கோடிக்கு விற்பனையாகிவரும் 'பாலாஜி வேஃபர்ஸ்’ நிறுவனத்தின் முதலாளிகள்!



விவசாயத்தை நம்பியே இனி குடும்பம் நடத்த முடியாது என்பதால் சந்துபாயின் அப்பா 1972-ம் ஆண்டு தனது மூதாதையர்களின் சொத்தான விளைநிலத்தை விற்றுவந்த ரூ.20,000-த்தை தனது மூன்று மகன்களிடம் கொடுத்து, இதை வைத்து ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று தர, அவர்கள் உரத் தொழிலை ஆரம்பித்தார்கள். போதுமான அனுபவம் இல்லாத காரணத்தினால் அதை மூடும்படி ஆயிற்று. அதற்குப்பிறகு 1974-ல் ஆஸ்ட்ரான் சினிமா ஆரம்பித்த புதிதில் அங்குள்ள கேன்டீனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதன்பின் பல சிறிய முயற்சிகள் அவர்களுக்கு நம்பிக்கை தர, 1980-களில் பாலாஜி வேஃபர்ஸை ஆரம்பித்தார்கள். இதன்பிறகு, விரானி சகோதர்களுக்கு ஒரே வெற்றி மயம்தான்!

விரானி சகோதரர்களைப் போல, இன்னொரு வெற்றிக் கதை, 'ஜெய்ப்பூர் ரக்ஸ்’ (விரிப்புகள்) புகழ் நந்த் கிஷோர் சௌத்ரி யினுடையது. இன்றைக்கு இவர் இந்தியா முழுவதும் 40,000 நெசவாளர்களை ஒருங்கிணைத்து அவர்களது தயாரிப்புகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இதற்கு 22 கிளைகள் இருக்கின்றன.

1978-ம் ஆண்டு ரூ.5,000 கடன் வாங்கி ஆரம்பிக்கப்பட்ட தொழில் இன்றைக்கு ரூ.104 கோடி டேர்னோவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பதுடன் அமெரிக்கா விலும் தனது நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறது. மேலாண்மை குருவான

சி.கே.ப்ரகலாத்தை ஒரு 'கேஸ் ஸ்டடி’க்காகச் சந்திக்கும்போது, 'நீங்கள் ஏழைகளைப் பணக்காரர் களுடன் இணைப்பவர் (ஜெய்ப்பூர் விரிப்புகள் வசதி படைத்தவர்களின் மத்தியில் மிகவும் பிரபலம்!)’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வளர்ச்சியடைவதற்கு சௌத்ரி சொல்லும் அறிவுரை: 'எதுவொன்றையும் ஆரம்பிக்கும் முன்பாக, உங்களை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைகொள்ளாதீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு அதன்மூலம் உங்களை நீங்கள் கண்டுபிடியுங்கள். மேற்கல்வி அறிவைக்கொடுக்கும்; ஆனால், நடைமுறை வாழ்வைக் கற்றுத்தராது. எனவே, உங்கள் படிப்பின் மீது கர்வம் கொள்ளா தீர்கள்.''

இந்தப் புத்தகத்தில் 'பைத்தியக்கார ஆண்கள்’ என்று ஒரு பிரிவு. அதில் இடம்பெற்றிருப்பவர் பெண்களின் 'நலம்’ விரும்பியான முருகானந்தம். கோவைக்கு அருகில் பாப்பாநாயக்கன் புதூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த  இவருக்கு ஆரம்பத்திலேயே அறிவியல் பாடத்தில் ஒரு பிடிப்பு. சிறுவனாக இருக்கும்போதே பல சின்ன, சின்ன வியாபாரம் செய்து அந்த அனுபவங்களையே ஆசானாகக் கொண்டவர்.

1988-ம் ஆண்டு ஒருநாள், இவரது மனைவி சாந்தி கையில் மறைத்து எதையோ கொண்டு சென்றதைப் பார்த்த அந்தத் தருணம் இவர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட உதவியது. அவர் மனைவியிடம், அது என்ன, என்று கேட்க அவர், 'இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று சொல்ல, அவர் விடாமல் மனைவி பின்னாலேயே சென்று வற்புறுத்திக் கேட்க, தன் கையிலிருந்த அழுக்கான துணி ஒன்றைக் காண்பித்திருக்கிறார். அப்போதுதான் சந்தையில் கிடைக்கும் சானிட்டரி நாப்கின் விலை அதிகம் என்பதால் சுத்தமில்லாத துணியை பயன்படுத்துகிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.

சுகாதார முறையற்ற இந்த முறைக்கு மாற்றாக நாமே ஏன் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரித்து விற்பனை செய்யக் கூடாது? என நினைத்து அதற்கான முயற்சியில் இறங் கினார். இன்றைக்கு ஏழை மற்றும் கிராமப்புற பெண்களும் உபயோகிக்கும்படி தரமான சானிட்டரி நாப்கினை (ரூ.15-க்கு 10 நாப்கின்கள், ஒரு நாப்கினுக்கு 50 பைசா ஆதாயம்!) தயாரித்து விற்பனை செய்கிறார்.

''நான் பிறப்பதற்கு முன் 5-10% பெண்கள்தான் சானிட்டரி நாப்கினை பயன்படுத்தி னார்கள். ஆனால், நான் கண்டுபிடித்திருக்கும் இயந்திரத்தால் இன்னும் 10, 15, 20 ஆண்டுகளில் அனைத்து பெண்களும்



உபயோகிக்கும் நிலை வரும். என் வாழ்வின் குறிக்கோள் நிறைவேறிவிடும்' என்கிறார் முருகானந்தம்.

2009-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரங் கள் உ.பி. பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, ஹரியானா மாநிலங் களில் நிறுவப்பட்டு 2.5 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றி ருக்கிறது. இந்த நாப்கினைத் தயாரித்து விற்பவர்கள் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்கள்.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு தமிழர் மதுராந்தகத்தில் பிறந்து புதுச்சேரியில் 'இன்டெக்ரா சாஃப்ட்வேர் சர்வீசஸ்’ நடத்திவரும் ஸ்ரீராம் சுப்ரமண்யா.

இவருடைய இன்டெக்ரா உலகளவில் பிரசுரத் துறைக்கென்று (பப்ளிஷிங்) உள்ள பி.பி.ஓ.களில் தலைசிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தப் புத்தகத்தின் இறுதியில் 'ஸ்டார்ட்-அப்’ வளங்கள் (resources) குறித்த தகவல்களும் தரப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை கடைகளில் பார்த்தால், 'டேக் இட் ஹோம்’!