Header

இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி?

இ-கிஃப்ட் வவுச்சர்...ஏன்... என்ன... எப்படி?



குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு பண்டிகை காலங்களில் கிஃப்ட் கொடுப்பது வழக்கம். வழக்கமாக, கிஃப்ட் என்பதை நாமே நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்கிக் கொடுப்போம் அல்லது பணமாகத் தருவோம். பல நேரங்களில் நாம் தரும் கிஃப்ட், பெறுகிற நபருக்குப் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. அதே போல, பணமாகத் தரும்போது அதை வாங்குவதற்குப் பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இதைத் தவிர்க்கவே கிஃப்ட் வவுச்சர் உள்ளன. இதிலும் அடுத்த கட்டமாக இ-கிஃப்ட் வவுச்சர்கள் தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த இ-கிஃப்ட் வவுச்சர்களைப் பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

குறிப்பிட்ட கடைகளில் மட்டும் பயன்படுத்தும் வகையிலான இ-கிஃப்ட் வவுச்சர்கள், அனைத்துக் கடைகளிலும் பயன்படுத்தக்கூடிய வவுச்சர்கள், ஆன்லைனில் மட்டும் பயன்படுத்தக் கூடிய வவுச்சர்கள் எனப் பல வகையில் வவுச்சர்கள் கிடைக்கின்றன.



1. பெரும்பாலான இ-காமர்ஸ் இணையதளங்களில் இ-கிஃப்ட் வவுச்சர் கிடைக்கிறது. இதில் கிஃப்ட் வவுச்சர்களை இ-மெயில் மூலமாக அனுப்ப முடியும். அதாவது, யாருக்கு கிஃப்ட் தர விரும்புகிறோமோ, அவர்களின் இ-மெயில் ஐடியை வவுச்சர் வாங்கும்போது கொடுத்தால் போதும். கிஃப்ட் வவுச்சர் நேரடியாக, அவரின் மெயிலுக்குச் சென்றுவிடும்.

2. இ-கிஃப்ட் வவுச்சர்களை மெயில் மூலமாகத்தான் அனுப்ப முடியும். எனவே, நீங்கள் கிஃப்ட் கொடுக்கும் நபர் பயன்படுத்தும் மெயில் ஐடியை சரியாகப் பயன்படுத்துவது நல்லது.

3. இ-கிஃப்ட் வவுச்சர்களை விற்பனை செய்யும் இ- காமர்ஸ் நிறுவனங்கள் ஆர்பிஐயின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதனால் கிஃப்ட் வவுச்சரை பரிசாக பெறுபவருக்கான கேஒய்சிகள் சரியாக உள்ளதா என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் கேட்க வாய்ப்புள்ளது. அதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அந்த வவுச்சரை ரத்து செய்யும் அதிகாரம் வவுச்சரை வழங்கிய நிறுவனத்துக்கு உண்டு.

4. ஒவ்வொரு நிறுவனத்தின் இ-கிஃப்ட் வவுச்சருக்கும் தனித்தனி விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகள் என்ன என்பதைப் பார்த்து வவுச்சர்களை வாங்குவது நல்லது. அதாவது, இ-வவுச்சர் தொகையைவிட அதிகமான தொகைக்குப் பொருள்கள் வாங்கும்போது மீதமுள்ள தொகையை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலமாகத்தான் செலுத்த முடியும். கேஷ் ஆன் டெலிவரி முறையைப் பயன்படுத்த முடியாது. இதுபோன்று ஒவ்வொரு கிஃப்ட் வவுச்சர்களுக்கும் பல நிபந்தனைகள் உண்டு.

5. அனைத்து விதமான வவுச்சர்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்தும் வகையில் இருக்கும். அந்த கால அளவு எவ்வளவு என்பதைக் கவனிப்பது அவசியம். ஏனெனில் கால அளவு முடிந்தபிறகு அந்த கிஃப்ட் வுவச்சர்களைப் பயன்படுத்த முடியாது. பணம் திரும்பவும் கிடைக்காது. மேலும் அதை வேறு வவுச்சராகவும் பெற முடியாது.

6. அதிகபட்சமாக ஒருவர் எத்தனை வவுச்சர்களை வாங்க முடியும் என்பதில் கட்டுப்பாடு உள்ளது. அதாவது, சில நிறுவனங்களில் அதிகபட்சமாக 15 வவுச்சர்களை மட்டும்தான் வாங்க முடியும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

7. இ-கிஃப்ட் வவுச்சரை எடுப்பதற்கு முன் யாருக்கு, எவ்வளவு தொகை தரப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வது நல்லது. ஏனெனில் இ-வவுச்சரை ரத்து செய்ய முடியாது.

8. இ-கிஃப்ட் வவுச்சர்கள் மூலம் பொருட்களை வாங்கும்போது ஒரு ஆர்டருக்கு அதிகபட்சம் 3 வவுச்சர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

9. சில இ-கிஃப்ட் வவுச்சர்களைக் கடைகளில் பயன்படுத்த முடியும். அந்த சமயங்களில் வவுச்சரை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

10. இ-கிஃப்ட் வவுச்சர் தொகையின் மதிப்புக்கு ஈடான பொருட்களை ஒரே முறையில் வாங்கிவிட வேண்டும். உதாரணமாக, ரூ.2,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சரில்  1,000 ரூபாய்க்குப் பொருட்கள் வாங்கினால், மீதம் 1,000 ரூபாயை பிறகு பயன்படுத்த முடியாது. வவுச்சரின் மதிப்பு, அதில் என்னென்ன பொருட்கள் வாங்க முடியும் என்பதை முன்பே திட்டமிட்டு, அதன்பிறகு வவுச்சரைப் பயன்படுத்துவது நல்லது.