Header

ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்!

ஹோம் பட்ஜெட் : வரவுக்குள் செலவை அடக்கும் ரகசியங்கள்!

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!



பட்ஜெட் போடுவதன் அவசியம் குறித்து கடந்த வாரம் ஹோம் பட்ஜெட் பகுதியில் விளக்கமாக எடுத்துச் சொன்ன நிதி ஆலோசகர் அனிதா ஆர். பட், அதில் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்களை சொல்கிறார்.

''உங்களது மாதச் செலவுகளை முதலில் பட்டியல் போடுங்கள். அதாவது, வாடகை, மின்சாரக் கட்டணம், பால் செலவு, இ.எம்.ஐ., போன் பில், இன்ஷூரன்ஸ் என அனைத்தும் இந்த பட்டியலில் இடம்பெற வேண்டும். மேலும், இந்தச் செலவுகளுக்கான பணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்துவதே நல்லது. அப்போதுதான் எதற்கு, எவ்வளவு கட்டணம் செலுத்தியுள்ளோம் என்பதைத் தெளிவாகக் கண்காணிக்க முடியும்.

இதில், வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படும் செலவுகள் எது என்று கவனிக்க வேண்டும். அதாவது, பள்ளிக் கட்டணம், பத்திரிக்கைகளின் சந்தா தொகை, இன்ஷூரன்ஸ் பிரீமியம் என அனைத்தையும் பட்டியலிட்டு, அந்தச் செலவுகளை 12 மாதத்துக்குப் பிரித்து, அதற்கான தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மொத்தமாக பணம் கட்டும்போது கஷ்டமாக இருக்காது. ஆர்.டி. அல்லது லிக்விட் பண்டில் முதலீடு மூலம் இந்த செலவுகளுக்கான பணத்தைச் சேர்க்கலாம்.

அடுத்து, மாதத்தில் சிலவேளைகளில் மட்டும் செய்யப்படும் செலவுகளை பட்டியலிட வேண்டும். அதாவது, ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது, புதுத் துணிமணிகளை வாங்குவது, சினிமாவுக்குப் போவது என அனைத்தையும் பட்டியலிட வேண்டும். இந்தச் செலவுகளை ஒவ்வொரு மாதமும்  பட்ஜெட்டில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் இது அத்தியாவசியமான செலவு அல்ல.



மாத வருமானத்தையும் செலவையும் பட்டியலிட்டபின், செலவானது வருமானத்தைவிட அதிகமாக இருக்கும்போது எந்தெந்தச் செலவுகளை குறைக்கலாம் என்பதை குடும்பத்தினருடன் சேர்ந்து முடிவெடுக்கலாம். இந்தசமயத்தில் குழந்தைகள் கட்டாயம் உடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல, திடீர் செலவுகளுக்காக பணத்தை ஒதுக்கி வைப்பது முக்கியம். பெரும்பாலானவர்கள் இந்தப் பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என நினைப்பதோடு சரி, இன்னும் சிலர் எடுத்துவைத்த பணத்தை வேறு காரணத்துக்காக செலவழித்துவிடுவார்கள். எனவே, சம்பளம் வந்ததும் அவசரத் தேவைகளுக்கான பணத்தைத் திரும்ப எடுக்காதவாறு வேறு ஒரு கணக்கில் வைத்துவிடுவது நல்லது. இந்தப் பணத்தை லிக்விட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்துவைக்கலாம். அவசரச் செலவுகளுக்கு போக மீதமுள்ள பணத்தில் பட்ஜெட் போடலாம்.



கணவன் - மனைவி என இருவர் சம்பாதிக்கும் வீட்டில் கணவன், மனைவி இணைந்து பட்ஜெட் போடுவதுதான் நல்லது. அதாவது, மொத்த சம்பளத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ப செலவுகளைப் பகிர்ந்துகொள்வது அவசியம். மேலும், வரவு-செலவு கணக்கு உங்கள் பெற்றோர் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. அப்போதுதான், தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க முடியும். அவர்கள் உங்களை எப்போதும் கவனித்து எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.

வேண்டாமே கிரெடிட் கார்டு!

பணத்தில் மனக்கட்டுபாடு இல்லாதவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இல்லையெனில் அளவுக்கு அதிகமாக செலவழிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இப்படிப்பட்டவர்கள் வெளியே செல்லும்போது செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு தேவையான தொகையை மட்டும் கையில் எடுத்துச் செல்லலாம். இப்படி செய்வதால் தேவையற்ற செலவுகளை செய்வது குறையும்.

கல்விக் கட்டணத்தை சமாளிக்க!

பட்ஜெட்டில் கல்விக் கட்டணத்துக்கு கட்டாயமாக குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் கல்விக்கான செலவு என்பது லட்சங்களில்தான் உள்ளது. எல்.கே.ஜி. சேர்க்கக்கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, இதற்கான திட்டமிடல் என்பதை முன்கூட்டியே ஆரம்பிப்பது நல்லது.

மேலும், சமீபத்தில் திருமணமானவர்கள் இப்போதிலிருந்தே சேமிக்க ஆரம்பித்துவிடுவதுதான் சிறந்தது. இதற்கென குறிப்பிட்ட தொகையை ஆர்.டி. அல்லது லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைக்கலாம். ஈக்விட்டி சார்ந்த திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஈக்விட்டி திட்டங்கள் சந்தையின் ஏற்ற, இறக்கங்களை அப்படியே பிரதிபலிக்கும். பள்ளிக் கட்டணத்துக்கு அதிகபட்சமாக 3 - 4 வருடம் முதலீடு செய்வோம். உங்களுக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் சந்தை இறக்கத்தில் இருந்தால், நீங்கள் எதிர்பார்த்த தொகைக் கிடைக்காது. தவிர, இது கட்டாயம் தேவைப்படும் தொகை என்பதால் இதில் ரிஸ்க் எடுக்கக் கூடாது.

கல்விக் கட்டணம் என்பது எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருக்காது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளி, அதற்காக வீடு மாறவேண்டியிருந்தால் அதற்கு ஆகும் செலவு என அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது.



பள்ளி அல்லது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் எனில் அவர்களுக்கான கட்டணத்தை வருடத்தின் (மே அல்லது ஜுன் மாதம்) தொடக்கத்திலிருந்தே ஆர்.டி. அல்லது லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஆர்.டி.யில் முதலீடு செய்கிறோம் எனில், 12 மாதங்களுக்குப்பின் 36 ஆயிரம் ரூபாய் சேர்ந்திருக்கும். இதற்கு வட்டி 9% கிடைத்தால்கூட சுமார் ரூ.1750  வருமானம் கிடைக்கும். இந்த தொகையில் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகம், ஷ§ போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

ஈஸி இன்ஷூரன்ஸ்!

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தும் தொகை தேவையில்லாத செலவு என நினைக்கத் தேவையில்லை. ஏனெனில், மருத்துவச் செலவுகள் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணிக்க முடியாது. தவிர, தற்போது ஒருமுறை டாக்டரிடம் போனாலே 500 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்தச் செலவிலிருந்து  தப்பிக்கவேண்டும் எனில், நாம் அவசியம் மெடிக்ளைம் பாலிசியை வைத்திருக்க வேண்டும். உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் 3 - 5 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.''