Header

குடும்பத்துக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!

முதல் முறை பாலிசி எடுப்பவர்கள் கவனத்துக்கு... குடும்பத்துக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!



குடும்ப நபர்களின் எதிர்கால பாதுகாப்பு தவிர வேறு எந்த நோக்கமும் டேர்ம் பிளானுக்கு இல்லை;  சம்பாதிக்கும் அனைவரும் டேர்ம் பாலிசி எடுக்கலாம்!

கணேஷும் ரமேஷும் நண்பர்கள். இருவரும் ஊருக்கு காரில் போகும்போது பயங்கர விபத்து. இருவருமே உயிர் பிழைக்கவில்லை.

இரு குடும்பத்தினரும் கலங்கி நின்றபோது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் கணேஷின் வீட்டுக்கு வந்து, கணேஷ் ரூ.1 கோடிக்கான டேர்ம் பாலிசி எடுத்திருப்பதைச் சொல்ல, இழப்பீட்டைக் கோரியது அவர் குடும்பம். ஆனால், ரமேஷ் ரூ.5 லட்சத்துக்கு ஒரு எண்டோவ்மென்ட் பாலிசி மட்டுமே எடுத்திருந்தார்.  அந்த பணம் மட்டுமே அவரது குடும்பத்துக்குக் கிடைத்தது.

அது என்ன டேர்ம் இன்ஷூரன்ஸ்? இதை ஏன் எடுக்க வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? இதற்கான நடைமுறை என்ன என பல கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிபுணர் சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

டேர்ம் ப்ளான்:

குறைந்த பிரீமியத்தில் அதிக  காப்பீடு!

குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபருக்கு எதிர்பாராத விபரீதம் ஏற்படும்போது அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித பொருளாதார இழப்பும் நெருக்கடியும் வராமல் இருப்பதற்கான ஒரு பாதுகாப்புதான் டேர்ம் ப்ளான். வருமானம் ஈட்டக்கூடிய ஒரு நபர், தான் உயிரோடிருக்கும் போதே எதிர்கால நோக்கில் இந்த டேர்ம் ப்ளானை எடுக்கலாம்.

பாலிசி எடுத்தவர் பாலிசி காலம் முடிவடையும் வரை உயிரோடு இருந்தால்  தொகை எதுவும் கிடைக்காது. இந்தவொரு காரணத்தினா லேயே ஏன் டேர்ம் ப்ளான் எடுக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். காப்பீடு என்பதை நமது குடும்பத்தின் பாதுகாப்பாக கருதாமல், வெறும்  முதலீடாகப் பார்ப்பதே இதற்கு காரணம்.

வருடத்துக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர், ஒரு கோடிக்கு டேர்ம் பாலிசி எடுக்கிறார் என்றால், அவர் எதிர்பாராத விதமாக இறக்கும்பட்சத்தில் அவரது குடும்பத்துக்கு கிடைக்கும் ரூ.1 கோடியை வங்கி எஃப்டியில்  வைத்திருந்தால்கூட, 8% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.9.60 லட்சம் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து அவரது குடும்பம் கவலை இல்லாமல் வாழ்க்கையை வாழ முடியும். எதிர்கால பாதுகாப்பு தவிர வேறு எந்த நோக்கமும் டேர்ம் பிளானுக்கு இல்லை என்பதால்தான் அதை ‘ப்யூர்’ இன்ஷூரன்ஸ் பாலிசி என்கிறோம்.  பல நாடுகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்!

சம்பாதிக்கும் அனைவரும் டேர்ம் பாலிசி எடுக்கலாம். வருமானம் ஈட்டாத மகன், மகளுக்கும்,குடும்பத் தலைவிக்கும் பாலிசி கிடைப்பது கடினம். குடும்பத்தலைவி வருமானம் ஈட்டுபவராக இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். மாணவர்கள் எடுக்க முடியாது.

1.வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ், ஃபார்ம் 16, வருமான வரி தாக்கல் ஆதாரம்)

2. அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (அரசு அங்கீகாரம் பெற்றது)

3. வயது சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்)

விண்ணப்பப் படிவத்தில் கேஒய்சி விவரங்களைப் பூர்த்தி செய்து இந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கவரேஜ் மற்றும் பிரீமியம்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நாம் கேட்கும் தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்ப செலவுகள் (கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவை), கடன்கள், எதிர்கால திட்டங்கள், இன்னும் சர்வீஸ் உள்ள வருடங்கள் ஆகிய பல விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜை நிர்ணயிக்கும்.

டேர்ம் ப்ளான் எடுக்கும் நபர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களைச் சமர்பிக்க வேண்டும். ரிஸ்க் குறைவாக உள்ள பாலிசிதாரருக்கு பிரீமியம் குறைவாகவும், ரிஸ்க் அதிகமுள்ள எலெக்ட்ரிஷிய னுக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும்.

மருத்துவப் பரிசோதனை!

புகை பிடித்தல், குடிப் பழக்கம் ஆகியவை இருப்பின் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியத் தொகை மாறும்.
 
கட்டண வசதிகள்!

டேர்ம் இன்ஷூரன்ஸுக் கான பிரீமியத்தை நேரடியாகவோ, ஆன்லைன், கிரெடிட் கார்டு மூலமாகவோ, வரைவோலையாகவோ அல்லது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தும் வசதியான ஈசிஎஸ் (Electronic Clearing system) மூலமாகவோ செலுத்தலாம். இதற்காக எந்தவொரு சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

பிரீமியம் தொகையை மாதாமாதம் கட்டுவதைக் காட்டிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டுவது நல்லது.

ரைடர்ஸ்!

டேர்ம் பிளானுடன் கூடுதல் கவரேஜ் பெறும் வழிமுறைதான் ரைடர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வேண்டுமென்றால், அதற்கு தனியாக பாலிசியை எடுத்து ரூ.8,000 பிரீமியம் கட்டுவதைவிட டேர்ம் ப்ளான் உள்ள ஒருவர், அதனுடன் கூடுதலாக ரூ.144 செலுத்தி விபத்துக்கான ரைடர் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும். மேலும்,

தீவிர நோய்களுக்கான ரைடர் பாலிசிகளும், 17 நோய்களுக்கான கவரேஜ்களை உள்ளடக்கிய கிரிட்டிகல் இல்னஸ் பாலிசிகளும் கிடைக்கின்றன. இதன் மூலம் குறைவான பிரீமியம் செலுத்தி கூடுதல் கவரேஜ் பெற முடியும்’’ என்று கூறி முடித்தார் சுவாமிநாதன்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

அவசர தேவைக்கு அத்தியாவசிய பாலிசி!

உடல் நலத்தைப் பொறுத்தவரை நமக்கு எந்த நோய் எப்போது வரும் என்பதை சொல்ல முடியாதநிலையிலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். திடீரென வரும் இந்த மருத்துவச் செலவுகளை எப்படிச் சமாளிப்பது, என்ன வழி என்று ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் சி.பாலாஜி பாபுவிடம் கேட்டபோது விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“தீவிர நோய்கள், விபத்துகள் ஏற்படும்போது உருவாகும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க குடும்பத்துக்கு பண ரீதியாகவும், மன ரீதியாகவும் தைரியம் தருபவைதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள்.

யாரெல்லாம் எடுக்கலாம்?

18 வயது முதல் 74 வயது வரையுள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடியும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் தகுதியான பாலிசியையும், சரியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்து நேரடியாகவோ அல்லது இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் மூலமோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்!

1. உங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

2. வயதுக்கான ஆதாரம் (பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, பள்ளிச் சான்றிதழ்)

3. மருத்துவ பரிசோதனை அறிக்கை (அவசியமென்றால் மட்டும்)

பாலிசிகள் பலவிதம்!

ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, நமக்கு ஏற்ற சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் தனிநபர் பாலிசி, தனிக் குடும்ப பாலிசி, கூட்டுக் குடும்ப பாலிசி, மூத்த குடிமக்கள் பாலிசி என பல வகைகள் உள்ளன. இவற்றில் திருமணமாகாத ஒருவர் தனிநபர் பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணமானவர் தனிக் குடும்பமாக இருந்தால், தனிக் குடும்ப பாலிசியையும், பெற்றோருடன் இருந்தால் கூட்டுக் குடும்பப் பாலிசியையும் எடுத்துக்கொள்ளலாம். க்ரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள்,  புதிதாகத் திருமணம் செய்பவர்களுக்கான பாலிசி , மகளிர் பாலிசிகளும் உள்ளன.

அது மட்டுமில்லாமல் சில நோய்களுக்குப் பிரத்யேகமான பாலிசி எடுக்க வேண்டியிருக்கும். இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்கெல்லாம் தனி பாலிசிகள் உள்ளன. அவற்றை  எடுத்துக்கொண்டால், குறைவான பிரீமியம் தொகையில் தேவைக்கு மட்டும் பாலிசி எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், ஃப்ளோட்டர் பாலிசி மூலம் குடும்பத்தில் எந்த நபர் வேண்டுமானாலும் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ள தொகைக்கு க்ளெய்ம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் சேர்த்து ரூ.5 லட்சத்துக்கு பாலிசி எடுத்திருக்கிறார் என்றால், ரூ.5 லட்சத்துக்கான முழு க்ளெய்மையோ அல்லது அதைவிட குறைவாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில் அவரும் அவரது மனைவி என இருவரும் ஆளுக்கு ரூ.2.5 லட்சம் என பிரித்து க்ளெய்ம் பெறுவதற்கான வசதியும் இதில் உள்ளது.

பிரீமியம் மற்றும் கவரேஜ்!

ஹெல்த் இன்ஷூரன்ஸுக் கான கவரேஜ்கள் ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும் பாலிசிகள் உள்ளன. பாலிசிதாரரின் வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்தும், கவரேஜ் தொகையைப் பொறுத்தும் பிரீமியம் தொகை மாறும். வயதும் கவரேஜ் தொகையும் அதிகரித்தால் பிரீமியமும் அதிகமாகும்.

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளில் ரைடர் வசதிகள் கிடைக்கின்றன. பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளில் அந்த வசதி இல்லை.

கவனிக்க வேண்டியவை!

எந்த நோய்க்கு எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும், எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பதை அவசியம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

பாலிசி எடுக்கும்போது, ஏதேனும் நோய் இருந்தால் அதைச் சொல்ல வேண்டும். பிரீமியம் கூடுமோ என்று சொல்லாமல் விட்டால், பின்னர் அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து க்ளெய்ம் செய்தால், அது மறுக்கப்பட வாய்ப்புள்ளது.

மருத்துவமனையில் 24 மணிநேரம் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றிருந்தால் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தை க்ளெய்ம் செய்வதில் கேஷ்லெஸ் (Cashless) மற்றும் ரீ-இம்பர்ஸ்மென்ட் (Reimbursement) என இரண்டு வகைகள் உள்ளன.

கேஷ்லெஸ் வசதியில் கூடுதல் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், கேஷ்லெஸ் க்ளெய்மில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், கிடைக்காது என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிடும்.

இன்ஷூரன்ஸ் நிறுவனமே நேரடியாக சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்திவிடும். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபின் பில்களைச் சமர்ப்பித்து ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ பெறும் போது, ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனியாக க்ளெய்ம் தொகையைக் குறைக்க வாய்ப்புள்ளது. இப்படி செய்யும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நமக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன” என்று கூறி முடித்தார்.

நாம் இன்று ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம்; எதற்கு இந்த வீண் செலவு என்று இல்லாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி  எடுத்துவிடுவது நல்லது.

வரிச் சலுகை!

டேர்ம் பிளானுக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத் தொகைக்கு 80டி பிரிவின் கீழ் ஒரு நிதி ஆண்டில், தனிநபர் தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.25,000 வரைக்கும் வருமான வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். பெற்றோருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்பட்சதில் அதற்கும் ஆண்டுக்கு ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. அதாவது, ஒருவர் ரூ.50,000 வரை பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும்.