Header

ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!


போதும்பா இந்த மிடில் கிளாஸ் வாழ்கை, இனி எப்படியாவது தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தூண்டப்பட்டு பிசினஸ் என்கிற வெறி தொற்றி கொண்டு வெறி பிடித்து ஓடுகிறது என்றால் ஸ்டார்ட்அப்-க்கான விதை விழுந்துவிட்டது என்று தான் அர்த்தம்.

சம்பளம் டூ லாபம் :

நல்ல சம்பளம் கிடைத்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக போய் பிசினஸை செய்து ஏதாவது நஷ்டம் வந்துவிட்டால் அதை எப்படி தாங்குவது என்கிற பயத்தோடு அதற்கான யுக்தியை வகுக்கத் தொடங்கிவிட்டீர்களா... தொடங்கிவிட்டீர்கள் என்றால் பிசினஸை செய்வதற்கான தைரியம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

தைரியம் ஓ.கே... ஆனால் கண்டிப்பாக நீங்கள் செய்ய இருக்கும் பிசினஸின் மூலம் தற்போது நீங்கள் சம்பளமாக வாங்கும் பணத்தை விட கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை தரும் பிராஜெக்ட்களை வைத்திருக்கிறீர்களா..?

சம்பளம் இல்ல, செலவு இருக்கு :

சம்பளம் இல்லாத காலத்தில் (அதாவது குறைந்தபட்சம் பிசினஸ் தொடங்கி 2 - 3 ஆண்டுகளுக்கு) குடும்பத்தை சமாளிக்கும் வழிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த மாதிரியான  ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்பதை எல்லாம் தெளிவாக திட்டமிட்டுவிட்டீர்கள் என்றால்... புறப்படுங்கள் ஸ்டார்ட் அப் தொடங்க...  வெற்றி வேல்... வீர வேல் என்று.

இதில் எது உங்கள் ஐடியா:

1. குடும்பம் செய்து வரும் பிசினஸை அப்படியே  தொடர்ந்து பிசினஸை விரிவுபடுத்தப் போகிறீர்களா....?
2. சந்தையில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யப் போகிறீர்களா அல்லது சந்தையை உருவாக்கப் போகிறீர்களா?

சந்தையை படியுங்கள் :

உங்களை சுற்றி இருப்பவர்கள் தான் சந்தை, அவர்களின் அன்றாட வாழ்கையில் உள்ள சிறிய மற்றும் பெரிய பிரச்னைக்கான தீர்வு உங்களிடம் இருக்கிறது என்றால் அதை விற்று லாபம் பாருங்கள். அந்த வெற்றிடத்தை உங்கள் பொருள் அல்லது சேவையைக் கொண்டு நிரப்பி அதை காசாக்குங்கள்.


ஸ்ட்ரைக் ஆன ஐடியாவுக்கு  வாடிக்கையாளர் யார்:

கிடைத்த தீர்வு யாருக்கு பயன்படும் தனி நபர்களுக்கா (Consumers), வியாபாரிகளுக்கா (Business), நிறுவனங்களுக்கா (Companies). அதிலும் குறிப்பாக பொதுஜனம், படித்தவர்கள்,, படிக்காதவர்கள், ஐடி-காரர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என்று எந்த பிரிவினருக்கு பெரிதும் பயன்படும் என்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் சேவை அல்லது பொருள் எப்படி வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, சந்தையின் தேவையை மேலும் மெருகேற்றி மீண்டும் சோதியுங்கள், சேவை அல்லது பொருளில் எந்த குறையும் இல்லை என்ற பின் பரவலாக வெளியிடுங்கள்.

பெரிய அளவில் கணக்கிடுங்கள் :

நாம் கண்டுபிடுத்திருக்கும் அந்த தீர்வு நம் ஊரில் எத்தனை பேருக்கு தேவைப்படும், நம் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தேவைப்படும், நம் மாநிலத்தில், நாட்டில், கண்டத்தில், உலகில் என விரிவாக கணக்கிட்டு பாருங்கள். வெற்றிடம் இருக்கிறது என்றால் வெற்றியின் வாய்ப்பும், தாக்கமும் அதிகமாக இருக்கும்.

நாம் கண்ட தீர்வு மற்ற தீர்வுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது என அலசுங்கள். நம் தீர்வுக்கு அரசிடம் ஏதாவது முரண்பாடு இருக்க வாய்ப்பிருக்கிறதா? என சரி பாருங்கள், எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்றால் தான் உங்களுடைய ஐடியா ஓ.கே.