Header

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!


1. செலவைத் திட்டமிடுங்கள்!

பட்ஜெட் போட நினைத்தாலே முதலில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு இந்த மாதத்துக்கு, இந்த விஷயத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று எழுதிவிடுகிறோம். ஆனால், மாதக் கடைசியில் பட்ஜெட் போட்ட பேப்பரை எடுத்து அதன்படிதான் நாம் செய்திருக்கிறோமா என்று பார்த்தால், இரண்டும் வேறுவேறு மாதிரி இருக்கும்.



இப்படி பட்ஜெட் போடுவது ஒன்று, செலவு செய்வது வேறு ஒன்று என்று இருந்தால், நீங்கள் போடும் பட்ஜெட் எதிர்பார்த்த பலனைத் தராது. பட்ஜெட் போடும்முன் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நீங்கள் செய்யும் செலவுகள் என்னவோ, அதை அப்படியே எழுதுங்களேன். அப்போது நீங்கள் எந்த விஷயத்துக்கு அதிக செலவு செய்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியும். எதற்கு அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பது தெரிந்தால், பட்ஜெட் போடும்போது தேவையான பணத்தை சரியாக ஒதுக்கலாம். அப்போது பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கு வேறுபாடு பெரிதாக இருக்காது.

2. எது சாத்தியமோ, அதைச் செய்யுங்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர், நாள் ஒன்றுக்கு மூன்று டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று நாள் ஒன்றுக்கு ரூ.50 செலவழிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த மாதத்திலிருந்து நான் டீ மற்றும் பிஸ்கெட்டை விட்டுவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தப் போகிறேன் என தடாலடி முடிவெடுத்தால் என்ன ஆகும்? பிறகு ஒரே ஒரு டீ என்று ஆரம்பித்து, பிற்பாடு அது இரண்டாகி, கடைசியில் அது மூன்றில் போய் நிற்கும்.

இதற்கு பதிலாக, அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளில் 2 டீ, ஒரு பாக்கெட் பிஸ்கெட் மட்டும் என்று முடிவெடுக்கலாம். அதற்கு அடுத்த மாதத்திலிருந்து 1 டீ, இரண்டு நாட்களுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கெட் என்று படிப்படியாக செலவைக் குறைத்தால், அது சாத்தியமான விஷயமாகவும் இருக்கும். இதை ஒழுங்காக கடைப்பிடித்தால், ஆபீஸில் டீ குடிப்பதையே விட்டு விடலாம்.



3. குறைந்த விலையில் பர்ச்சேஸ்!

வீட்டுக்கான எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒரே கடையில் அல்லது ஒரே சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவது கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் ரெகுலராக பொருட்களை வாங்கும் கடையைவிட விலை குறைவாகவும், தரமானதாகவும் வெளியில் வேறு கடைகளில் கிடைக்கிறதா என்பதை ஓய்வு நாட்களில் சுற்றித் திரிந்து தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக காய்கறிகள், பழங்கள் அழகாக அடுக்கப்பட்டு இருக்கும் ஏசி சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, மொத்த சந்தைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். இதனால் மாதாமாதம் பல நூறு ரூபாய் பட்ஜெட்டில் மிச்சமாகும்.

4. கிரெடிட் கார்டு ஜாக்கிரதை!

உங்களுக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கிரெடிட் கார்டை வாங்குங்கள். தேவையில்லாமல் கிரெடிட் கார்டை வாங்கி, அந்த கார்டை பயன்படுத்தி எதையாவது வாங்கி கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என்றால் வங்கிக்கு 45% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இதனால், உங்கள் சம்பளத்தில் கணிசமான பணத்தை இழக்க வேண்டி இருக்கும். தற்போது உங்களுக்கு கிரெடிட் கார்டு கடன் பாக்கி இருந்தால், எப்பாடுபட்டாவது முதலில் அந்தக் கடனை திரும்பக் கட்டிவிடுங்கள். அப்போதுதான் வட்டியாக செலவழியும் பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும்.

5. விரலுக்கேத்த வீக்கம்!

உங்கள் வருமானம் எவ்வளவோ, அந்த அளவுக்கு உங்கள் செலவை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால், நீங்கள் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரை வாங்க நினைப்பது நியாயம். ஆனால், ஆடியையோ, பி.எம்.டபிள்யூ காரையோ வாங்க நினைத்தால், அது விரலுக்கேத்த வீக்கமாக இருக்காது. இது கார் விஷயத்தில் மட்டும் அல்ல, வீட்டின் ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும் நம் தகுதியை நினைத்துக்கொண்டு செயல்படுவது அவசியம். பக்கத்து வீட்டுக்காரர்கள் இதை வாங்கிவிட்டார்களே, அதை வாங்கிவிட்டார்களே என்று நினைக்காமல், நமக்கு என்ன தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே செலவு செய்வது நல்லது.

6. கடமைகளும் இலக்கும்!

உங்கள் நிதி சார்ந்த கடமைகள் வேறு; இலக்குகள் வேறு. உங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்றவை உங்கள் நிதி சார்ந்த கடமைகள். அதை உங்களால் தவிர்க்க முடியாது. அதற்கான முதலீட்டை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும். ஆனால், சொந்த வீடு, கார் வாங்குவது போன்றவை எதிர்கால இலக்குகள். இவற்றுக்காகவும் முதலீடு செய்வது அவசியம் என்றாலும் கட்டாயம் அல்ல.



 நீங்கள் பட்ஜெட் போடும் போது முதலில் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலீடு செய்யுங்கள். இந்த கடமை முடிந்தபின்பு, உங்கள் எதிர்கால இலக்குகளுக்கும் முக்கியத்துவம் தந்து, முதலீட்டைத் தொடங்குங்கள். இதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான தொகை சேர்ந்துகொண்டே இருக்கும். கடமைகளைப் பற்றியும் எதிர்கால இலக்குகள் பற்றியும் நீங்கள் எந்தக் கவலையும் படவில்லை என்றால், இன்றைக்கு உங்களால் தாராளமாக செலவு செய்ய முடியும். ஆனால், எதிர்காலத்தில் உங்கள் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இந்த சிக்கல் உங்களுக்கு வராமல் இருக்க, உங்கள் கடமைகளையும் எதிர்கால இலக்குகளையும் மறந்துவிடாதீர்கள்.

7. பட்ஜெட்... அப்டேட்!

சில நேரங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நீங்கள் போட்டுள்ள பட்ஜெட் சரிபட்டு வராததாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் போட்ட பட்ஜெட்டின்படியே செலவுகளை மேற்கொள்ளுங்கள். இப்படி கட்டுப்பாடாக இருப்பதால், உங்கள் எதிர்கால இலக்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் நிறைவேறும். இதனுடன் பண வரவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். உங்கள் வருமானம் அதிகரித்திருக்கும் போது மட்டும் உங்கள் பட்ஜெட்டை மாற்றுங்கள். அதிலும் செலவுகளை அதிகப்படுத்துவதைவிட சேமிப்பை அதிகப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறப்பு.

8. சர்வாதிகாரம் வேண்டாமே!

இன்று பலரது வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று யாராவது ஒருவர்தான் பட்ஜெட் போட்டு மொத்த குடும்பத்துக்கான செலவு களையும் நிர்வகித்து வருகின்றனர். இப்படி நிர்வகிப்பதால் குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். பணத்தை நிர்வகிப்பவர் குடும்பத்தின் மீது சர்வாதிகாரம் செலுத்துவதாக தோன்றும்.

எனவே, இரண்டு பேரும் சேர்ந்து பணத்தைக் கையாளுவது சிறப்பாக இருக்கும்; அதே நேரத்தில் செலவுக்கான வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும். முக்கியமாக, பட்ஜெட் போடும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது.

9. எமர்ஜென்சி ஒதுக்கீடு!

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அவசரச் செலவுக்கு என ஒரு தொகையை ஒதுக்கி ரிசர்வில் வைத்துவிடுவது நல்லது. இந்த எமர்ஜென்சி பணத்தை அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவச் செலவு எதுவும் வரவில்லை எனில், திருமணத்துக்கான மொய் எழுதுவது, அன்பளிப்பு வழங்குவது, வாகனப் பராமரிப்பு செலவுகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

10. ஒதுக்கீட்டில் உறுதி!

வார இறுதியில் குடும்பத்துடன் நல்ல ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒதுக்கிய தொகை தீர்ந்துவிட்டது. ஆனால், மீண்டும் ஒருமுறை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும்படி உங்கள் குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள் என்றால், கேஸ் சிலிண்டருக்காக ஒதுக்கிய பணத்தை எடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. திடீரென கேஸ் சிலிண்டர் வந்துவிட்டால், பணத்துக்கு அலைய வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்க வேண்டியிருக்கும். இது மாதிரியான தர்மசங்கடங்களைத் தவிர்க்க, எந்த செலவுக்காக பணத்தை ஒதுக்கி இருக்கிறீர் களோ, அதற்கு மட்டுமே அந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்!

பட்ஜெட் போடும்போது இத்தனை விஷயங்களை கவனிக்க முடியுமா என்று மலைக்காதீர்கள். உங்களிடம் கொஞ்சம் ஒழுங்கு இருந்தாலே போதும், இதை எளிதாக செய்துமுடிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.