Header

உங்க பணம் எப்ப டபுள் ஆகும்?

உங்க பணம் எப்ப டபுள் ஆகும்?



‘‘இன்னைக்கு 1 லட்சம் ரூபா குடுக்குறேன். ஒரு வருஷத்துக்குள்ள அது டபுள் ஆகுமா?’’ என்று கேட்பவர்கள் நம்மில் ஏராளம். ‘‘நிச்சயம் ஆகும்’’ என்று பணத்தை வாங்கி, பட்டை நாமம் போட்டுவிட்டு, ஓடுகிறவர்களும் நம்மூரில் ஏராளம். உண்மையில், உங்கள் பணம் எப்போது டபுள் அல்லது டிரிப்பிள் ஆகும்?

உங்கள் பணம் எப்போது, அதாவது எத்தனை ஆண்டுகள் கழித்து டபுள் ஆகும் என்பதைக் கண்டுபிடிக்க சிம்பிளான ஒரு பார்முலா உண்டு. உங்கள் பணத்துக்கு எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டு அதை 72 என்கிற எண்ணால் வகுத்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.

உதாரணமாக, உங்கள் பணத்துக்கு 5% வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 72-யை 5-ஆல் வகுத்தால் உங்களுக்கான விடை கிடைக்கும். அதாவது, உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக 14.40 ஆண்டுகள் எடுக்கும்.

உங்கள் முதலீட்டுக்கு 1% வருமானம் கிடைத்தால், உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருக, 72 ஆண்டுகள் ஆகும்.

2% வருமானம் கிடைத்தால், 36 ஆண்டுகளாகும்.
3% வருமானம் கிடைத்தால், 24 ஆண்டுகளாகும்.
4% வருமானம் கிடைத்தால், 18 ஆண்டுகளாகும்.
5% வருமானம் கிடைத்தால், 14.40 ஆண்டுகளாகும்.
6% வருமானம் கிடைத்தால், 12 ஆண்டுகளாகும்.
7% வருமானம் கிடைத்தால், 10.29 ஆண்டுகளாகும்.
8% வருமானம் கிடைத்தால், 9 ஆண்டுகளாகும்.
9% வருமானம் கிடைத்தால், 8 ஆண்டுகளாகும்.
10% வருமானம் கிடைத்தால், 7.20 ஆண்டுகளாகும்.
11% வருமானம் கிடைத்தால், 6.55 ஆண்டுகளாகும்.
12% வருமானம் கிடைத்தால், 6 ஆண்டுகளாகும்.
13% வருமானம் கிடைத்தல், 5.54 ஆண்டுகளாகும்.
14% வருமானம் கிடைத்தால், 5.14 ஆண்டுகளாகும்.
15% வருமானம் கிடைத்தால், 4.80 ஆண்டுகளாகும்.
16% வருமானம் கிடைத்தால், 4.50 ஆண்டுகளாகும்.
17% வருமானம் கிடைத்தால், 4.24 ஆண்டுகளாகும்.
18% வருமானம் கிடைத்தால், 4 ஆண்டுகளாகும்.
19% வருமானம் கிடைத்தால், 3.79 ஆண்டுகளாகும்.
20% வருமானம் கிடைத்தால், 3.60 ஆண்டுகளாகும்.

ஆக, உங்கள் பணம் நான்கு ஆண்டு காலத்துக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 18 முதல் 20% வரை வருமானம் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

சரி, எத்தனை ஆண்டுகளுக்கும் நம் பணம் டபுள் ஆகும் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டோம். இனி, எதில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போமா?

சிலர், தங்கத்தில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பார்கள். சிலர், ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும் என்பார்கள். இன்னும் சிலர், எஃப்.டி.யில் என்பார்கள். இன்னும் சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்பார்கள்.

இதில் எஃப்.டி.யைத் தவிர (குறுகிய காலத்துக்கு மட்டும்), எல்லா முதலீடுகள் மூலமும் கிடைக்கும் எல்லா வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்கு உட்பட்டதே. இவ்வளவு வருமானம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லவே முடியாது. அப்படி யாராவது சொன்னால், அதை நம்பாமல் இருப்பது நமக்கு யாரும் நாமம் போடாமல் இருக்க உதவும்.

நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்பதை நாம் எப்படி நிர்ணயித்துக் கொள்வது? சிலர், எனக்கு 20% குறையாமல் வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் எனக்கு 8% வருமானம் கிடைத்தாலே போதும் என்பார்.
இரண்டு விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த அளவை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஒன்று, பணவீக்கம்; இரண்டாவது, நாம் எடுக்கத் துணியும் ரிஸ்க்.

பணவீக்கம் என்பது வேறொன்றுமல்ல, விலைவாசி உயர்வு. ஒவ்வொரு ஆண்டு ஒரு பொருளின் விலை 8% உயரும் என்றால், நம்மிடம் இருக்கும் பணத்தின் மதிப்பும் 8% உயர்ந்தால் மட்டுமே நம்மால் அந்தப் பொருளை எதிர்காலத்தில் வாங்க முடியும். தற்போது பண வீக்கம் சுமார் 8% என்கிற நிலையில், இருப்பதால், நம்முடைய வருமானமும் குறைந்தபட்சம் 8 சதவிகிதத்துக்கு மேல் கிடைக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இரண்டாவது, ரிஸ்க். நமக்கு எவ்வளவு வருமானம் வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, ஒரு முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் எவ்வளவு என்பதை ஆராய வேண்டும். அதாவது, அசலை இழப்பதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோம் என்பதற்கேற்ப நம் வருமானம் இருக்கும். அசலை நான் இழக்கவே விரும்பவில்லை எனில், எனக்கு எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான முதலீடாக இருக்கும். குறுகிய காலத்தில் அசல் கொஞ்சம் இழந்தாலும் பரவாயில்லை, நீண்ட காலத்தில் 14 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம்.

உங்கள் பணத்தை டபுள் அல்லது ட்ரிபிள் எப்போது ஆகும் என்று இப்போது புரிந்ததா?