Header

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : வெளியேறு கட்டணம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு : வெளியேறு கட்டணம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?



மியூச்சுவல் ஃபண்ட்  முதலீடு :  வெளியேறு கட்டணம் - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  2016-17 ம் நிதி ஆண்டில் மட்டும் 77.40 லட்சம் கணக்குகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை தற்போது நல்ல உச்சத்தில் இருப்பதைப் பார்த்து பலர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால் அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே வெளியேறும் போது, குறிப்பிட்ட சதவிகித தொகை  பிடிக்கப்படுவதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வெளியேறு கட்டணம் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொண்டிருக்கும்போது குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே தங்களது முதலீடுகளை வெளியே எடுக்கும்போது கட்டணம் விதிக்கப்படும். இந்த அபராதம் எக்ஸிட் லோட் (Exit Load) என்று சொல்லப்படுகிறது. தமிழில் வெளியேறும் கட்டணம் என்று குறிப்பிடுகிறார்கள்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் நீண்ட காலத்துக்கானவையாகவே கருதப்படுகின்றன. ஃபண்ட் மேனேஜர்களும் அதன் அடிப்படையில்தான் தங்களது முதலீடுகளைத் திட்டமிடுவார்கள். அப்படி இருக்கும்போது திடீரென்று பல முதலீட்டாளர்கள் வெளியேறும் போது ஃபண்ட் மேனேஜர்களுக்கு குறிப்பிட்ட ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனப் பங்குகளை  விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது மற்ற முதலீட்டாளர்களின் வருமானத்தை பாதிக்கும். எனவே குறுகிய காலத்தில் முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கவும், முன்பே முதலீடுகளை வெளியே எடுப்பதைத் தவிர்க்கவும் தான் இந்த வெளியேறும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்?

பெரும்பாலான மியூச்சுவல் திட்டங்களுக்கு ஏற்ப இந்த வெளியேறு கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியேறு கட்டணம் இல்லாத சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன. ஆனால் வெளியேறும் கட்டணம் இருக்கும் திட்டத்துக்கும் வெளியேறும் கட்டணம் இல்லாத திட்டத்துக்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. திட்டத்தின் வளர்ச்சியோடு எந்தவித தொடர்பும் இந்த வெளியேறும் கட்டணத்துக்கு இல்லை.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முதலீடுகளை வெளியே எடுக்கும்போது கட்டணம் குறையும். நாம் முதலீட்டை வெளியே எடுக்கும் காலம் நீடிக்கும்போது கட்டணமே இருக்காது.    

உதாரணத்துக்கு யுடிஐ கில்ட் அட்வாண்டேஜ் லாங் டேர்ம் திட்டத்தில் 548 நாள்களுக்குள் முதலீட்டை விற்றால் 2 சதவிகிதம் வெளியேறு கட்டணம் வசூலிக்கப்படும். 1095 நாட்களில் எடுக்கும்போது வெளியேறு கட்டணம் 1 சதவிகிதம். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பாண்ட் ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்ட் 10 சதவிகித முதலீட்டை எடுக்க எந்தக் கட்டணமும் இல்லை. அதைத் தாண்டி எடுக்கும்போது 12 மாத காலத்திற்கு 3 சதவிகிதமும், 24 மாத காலத்திற்கு 2 சதவிகிதம், 36 மாத காலத்திற்கு 1 சதவிகிதமும் கட்டணம் விதிக்கிறது.

இதனை தவிர்ப்பது எப்படி?

மிக அவசியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே முதலீடுகளை வெளியே எடுக்க வேண்டும் என்பதை நாம் உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

பெரும் சொத்து மதிப்பு உள்ள தனிநபர்கள் தான் சந்தை உச்சத்தை அடைந்து திடீரென விழும்போது விற்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கட்டணம் பெரிதாக தெரியாது. ஆனால் சிறு முதலீட்டாளர்கள் பதட்டத்தில் விற்கும்போது கட்டணத்தோடு சேர்த்து, குறுகிய கால ஆதாய வரியும் செலுத்த வேண்டி வரும்.
பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வெளியேறும் கட்டணம் 1 சதவிகிதம் இருக்கும். பொதுவாக ஓராண்டுக்கு பிறகு எடுத்தால் இந்தக் கட்டணம் இருக்காது.

அதேநேரத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு வருடத்துக்குள்ளேயே முதலீடுகளை வெளியே எடுக்கும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் 15 சதவிகிதம் என வைத்துக் கொண்டால் குறுகிய கால மூலதன ஆதாய வரி   15% கட்ட வேண்டி வரும்.  ஓராண்டுக்கு பிறகு ஈக்விட்டி ஃபண்ட்களை விற்றால், குறுகிய கால மூலதன ஆதாய வரி மற்றும் வெளியேறும் கட்டணத்தை தவிர்க்க முடியும்.

நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யுங்கள். நல்ல லாபம் பார்க்க முடியும்.