Header

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: சந்தேகங்களும் தீர்வுகளும்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: சந்தேகங்களும் தீர்வுகளும்



நம் எண்ணங்கள் தான் வாழ்க்கை என்பார்கள். நமது எண்ணங்கள் என்பது நாம் படிப்பது பார்ப்பது கேட்பதே!

ஆனால் அவை அனைத்தும் சாஸ்வதம் இல்லை. பல விஷயங்கள் முழுவதும் புரியாமலே முதலில் கேட்ட போது என்ன எண்ணங்கள் தோன்றியதோ அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே நிறைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். அடிப்படை புரிதல் அரைகுறையாக இருக்கும் போது தீர்மானத்தின் வெளிப்பாடுகளும் சரியாக இருக்க சாத்தியம் இல்லை.

இது போன்றே நிதி சம்பந்தப்பட்ட கருத்துக்களை நிறைய பேர் சரி வர புரியாமல் எடுக்கிற தீர்மானங்கள் சரியான பலனை தருவதே இல்லை. எனவே, மியூச்சுவல் ஃபண்ட்களில்  உள்ள தற்போதைய தவறான எண்ணங்கள் எவை? அதன் உண்மையான தாத்பரியம் என்ன என்று புரிந்து முதலீடு செய்வோம் வாருங்கள்!!

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய  தவறான கருத்துக்களும் அவற்றுக்கான தீர்வுகளும்.

1. மியூச்சுவல் ஃபண்ட் பணக்காரர்களுக்கு மட்டுமே  (Mutual funds are for rich)

 மியூச்சுவல் ஃபண்ட் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே அல்லது படித்தவர்களுக்கு மட்டுமே என்று! இது முற்றிலும் தவறான புரிதல். இந்த முதலீடு  எல்லோருக்கும் ஏற்றதே. மியூச்சுவல் ஃபண்ட்டில் ரூ. 500 கூட முதலீடு செய்ய முடியும். இது ஏழைக்கும், பணக்காரனுக்கு, பாமரனுக்கும் பொருந்தும். பணத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட்களில் பங்கு பெறலாம்.

ஒருவர் ரூ. 5,000 கொடுத்து ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார். மற்றொருவர் அதே நாளில் ரூ 50,000 அதே திட்டத்தில் முதலீடு செய்கிறார். இருவருக்கும் 5 வருடம் கழித்து கிடைக்கும் லாப நஷ்டம் ஒரே விகிதம்தான். கிடைக்கும் தொகை அவர்களது முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு அமையும்.

2. மியூச்சுவல் ஃபண்ட் என்பது சூதாட்டம் (Mutual funds are like gambling).

மியூச்சுவல் ஃபண்ட் என்பது சூதாட்டம் இல்லை. மியூச்சுவல் ஃபண்ட்  திட்டத்தில் பங்கில் மட்டும் முதலீடு செய்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். அதில், நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே எனக்கு தேவை இல்லை என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். இதுவும் சரி போல் தோன்றினாலும் , தவறுதான்!

மியூச்சுவல் ஃபண்ட்களில் பல திட்டங்கள் உள்ளன. அவை பங்கில் மட்டுமே முதலீடு செய்வதில்லை. “தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது போல, “கேளுங்கள் கொடுக்கப்படும்” வகையாக எண்ணிலடங்கா திட்டங்கள் உள்ளன.  இதில் பங்கு மற்றும் கடன், மேலும் இரண்டும் சேர்ந்த கலப்பின திட்டங்கள் என வகை வகையாக உள்ளன. உங்களுக்கு ஏற்ற வகையை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள். எல்லா திட்டங்களும் எப்போதும் நஷ்டம் தருவதில்லை. சந்தையின் செயல்பாட்டுக்கு ஏற்ப பங்குச் சார்ந்த திட்டங்களில்  லாப - நஷ்டம் மாறுபடுகிறது.

3. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது கடினம் (Investing in mutual funds are tedious) -

மியூச்சுவல் ஃபண்ட்களில்  முதலீடு செய்வது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. தங்கம் வாங்குவது போல் வங்கியில் வைப்பு நிதி போடுவது போல் இது எளிதல்ல என்று எண்ணுகிறார்கள். இல்லவே இல்லை, இது எளிது: சரியாக  புரிந்துகொண்டுவிட்டால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  முதலீடு செய்வது, தேவை பட்ட போது பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது எளிது தான். சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்பது போல தான். முதலில் முதலீடு செய்ய படிவங்கள் அதிகம் போல் தோன்றினாலும் அடுத்த அடுத்த முதலீடுகள் மிக மிக எளிதே. முயன்று தான் பாருங்களேன். முயற்சி திருவினையாக்கும்.

4. எஸ்ஐபி  முதலீட்டில் நஷ்டம் வராது (Sure shot way to get profit is through SIP)

 எஸ்ஐபி என்றாலே நஷ்டம் வர வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டே எஸ்ஐபியில் முதலீடு செய்கிறார்கள். இல்லை எஸ்ஐபி ஒரு திட்டம் என்று எண்ணி முதலீடு செய்கிறார்கள். இரண்டுமே பாதி கிணறு தாண்டுவது போலதான். ஆபத்தே!! மொத்த தொகை முதலீடோ, எஸ்ஐபி முதலீடோ நமக்கு கிடைக்கும் லாபமோ, நஷ்டமோ பங்குச் சந்தையை பொறுத்தே அமையும். நாம் வாங்கும் யூனிட்டின் விலை சராசரியாக பார்க்கும் போது குறைந்திருப்பதாலும் பெரும்பாலான எஸ்ஐபிகள் நீண்ட கால எஸ்ஐபி என்பதாலும் லாபம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எஸ்ஐபி என்பது ஒரு திட்டமல்ல, அது ஒரு முதலீட்டு முறையே ஆகும். நீண்ட கால எஸ்ஐபியில் நஷ்டம் வரும் வாய்ப்புகள் குறைவே. யாரும் எஸ்ஐபியில் நஷ்டமே வராது  என்று முதலீடு செய்ய முனைவது புத்திசாலித்தனமான காரியம் அல்ல.

5. அதிக நட்சத்திர குறியீடு திட்டங்கள் அதிக லாபம் தரும் (Highly rated funds are always profitable)

இணையத்தில் பல தளங்கள், பல திட்டங்களை ஆராய்ந்து அதன் மதிப்பிற்கேற்றவாறு குறியீடுகள் தருகின்றன (திட்ட மதிப்பு குறியீடுகள்: 5 நட்சத்திர குறியீடு, 4 நட்சத்திர குறியீடு போன்றவை). பொதுவாக குறியீடுகள் அதிகமாக இருக்கும் போது அது நல்ல திட்டமாகவும் நல்ல நிறுவனத்திலிருந்து செயல்படும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால் அதை வைத்தே லாபம் இருக்கும் என்று அவசியம் இல்லை.

எனவே தான், மியூச்சுவல் ஃபண்டில்  முதலீடு செய்வதற்கு முன் ஒரு அடிப்படை தத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு வரும் லாபமோ நஷ்டமோ நிகழவிருக்கும் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொறுத்தே அமையுமே தவிர முடிந்து போன சரித்திர நிகழ்வுகளை வைத்து அமைவதில்லை.

தற்போது 5 நட்சத்திர குறியீடு பெற்ற திட்டங்கள் 6 மாதத்திற்கு பிறகு 3 நட்சத்திர குறியீடாக மாறலாம். அது போல் 3 நட்சத்திர குறியீடு திட்டங்கள் சில மாதங்களுக்கு பிறகு 4 நட்சத்திர குறியீடாக மாறலாம். ஆனால் நாம் அன்றாடம் பார்க்கும் திட்ட விவரங்கள் அனைத்துமே முடிந்து போன நிகழ்வின் குறியீடு. இதை நன்கு மனதில் கொள்ளவேண்டும். பழங்கதை பேசி பயனில்லை என்பது இங்கே மிகவும் நன்றாக பொருந்தும்.


6. என்ஏவி குறைந்த திட்டங்கள் முதலீட்டுக்கு மிகவும் ஏற்றவை  (Lower NAV is better to invest)

மியூச்சுவல் ஃபண்ட்களில் மிக தவறான புரிதல் இதுவே. என்ஏவி அதிகமாக இருக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. அதே சமயத்தில் என்ஏவி குறைவாக இருக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுவதே. இதனாலேயே நிறைய பேர் புதிதாக வரும் திட்டங்களில் முக மதிப்பு விலையான ரூ.10லேயே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதுவும் சரியான கருத்து அல்ல. உதாரணமாக, இருவர் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான வெவ்வேறு திட்டங்களில் ஒரே தொகையை  முதலீடு செய்கிறார்கள். இரண்டு திட்டமும் சந்தையை ஒட்டியே வளர்ந்திருந்தால் இருவருக்கும் ஒரே மாதிரியான லாபமே கிடைக்கும்.

மேலும் விரிவாக புரிவதற்கு முதலாமவர், ரூ.60,000 க்கு யூனிட் விலை ரூ.60 என்று 1,000 யூனிட்டுகள் வாங்கினார். இரண்டாமவர், புதிதாக வந்த அதே போல் உள்ள  திட்டத்தில் யூனிட் விலை ரூ.10 என்று 6,000 யூனிட்கள் வாங்கினார். சந்தையில் வருட வளர்ச்சி 10% இருக்கும் போது இரண்டு திட்டங்களும் சந்தையை ஒட்டி வளர்ந்திருந்தால் வருட முடிவில் இருவரின் முதலீட்டு மதிப்பு ரூ.66,000 ஒட்டியே இருக்கும்.

காரணம் முதல் திட்டத்தின் என்ஏவி ரூ. 60லிருந்து ரூ. 66க்கு சென்று விடும். இரண்டாம் திட்டத்தின் என்ஏவி ரூ. 10லிருந்து ரூ.11க்கு தான் செல்லும். ஒரே மாதிரியான திட்டம் என்றபட்சத்தில் என்ஏவி ரூ.10லிருந்து 16க்கு போக வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவே என்ஏவிக்கும் லாப விகிதத்திற்கும் நேரடி சம்பந்தம் ஏதும் இல்லை.

6. மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நீண்ட கால முதலீடு - குறுகிய காலத்தில் பணம் எடுக்க முடியாது  (Mutual fund is a long term investment)

 மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால், அவசர தேவைகளுக்கு நமது பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறார்கள். இதுவும் தவறான கருத்து.
தனி நபர் நிதி மேலாண்மையில் முதலீடுகள் செய்த பணத்தை மிக எளிதாக திரும்ப பெறுவது மியூச்சுவல் ஃபண்ட்களில் மட்டுமே!!

உதாரணமாக, வியாழன் முதலீடு செய்து அடுத்து திங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வளவு எளிது. தங்கத்தை வாங்கி விற்று பணம் பெறுவது, தங்கத்தை அடகு வைத்து பணம் பெறுவது , வீட்டு மனைகளை விற்று பணம் பெறுவதை விட மியூச்சுவல் ஃபண்ட்டில் பணம் எடுப்பது மிக மிக எளிதான செயல். மேலும், நமது தேவைகளுக்கு ஏற்றபடி உதாரணமாக, குழந்தைகளின் பிற்கால படிப்பு, திருமணம், அல்லது உடனடி தேவைகளான கைபேசி வாங்குவது, கார்  வாங்குவது என்று குறிக்கோளுக்கு ஏற்றவாறு திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து பயன்பெற பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன.

7. மியூச்சுவல் ஃபண்டும், காப்பீடும் ஒன்றே  (Insurance and Mutual Funds are same)

 இதுவும் ஒரு தவறான கருத்து. காப்பீடு என்பது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு கிடைக்கும் காப்பீட்டு தொகை. மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டை பெருக்குவதற்கான வழிமுறை. எனவே, இரண்டும் ஒன்றல்ல. முதலீடு என்று நினைத்து காப்பீடு எடுப்பதில் பலன் அதிகமில்லை. காப்பீட்டு தேவைகளுக்கு மட்டும் காப்பீடும், பணத்தை பெருக்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சரியான தீர்வாகும்.

காப்பீடும் மியூச்சுவல் ஃபண்ட்டும் ஒன்றே என்று நினைப்பதற்கு சில வலுவான, தவறான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் இரண்டையும் வழங்கும் குழுமங்கள்  பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன.

உதாரணமாக, ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் இன்ஷூரன்ஸ் என்பது காப்பீடு வழங்கும் நிறுவனம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட் என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இரண்டிற்கும் தனி தனிச் சட்ட திட்டங்கள், வருமானங்கள், லாப விகிதங்கள். இரண்டும் தனி, தனி நிறுவனமாக இருந்தாலும், ஒரே குழுமம். எனவே காப்பீட்டில் முதலீடு செய்து விட்டு மியூச்சுவல் ஃபண்ட் என்று நினைத்துக் கொள்ள கூடாது.. இது போன்ற தருணங்களில் முதலீடு செய்யும் போது புரிந்து செயல்பட வேண்டும்

8. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய டீமேட் தேவை  (For mutual fund investment, DMAT account is a must)

 டீமேட் கணக்கு வைத்திருந்தால் தான் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என்று எண்ணுகிறார்கள். டிமேட் கணக்கிலும் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்டுகளை வாங்க முடியும். ஆனால் டிமேட் அவசியம் இல்லை. டிமேட் கணக்கு இல்லாமலே மியூச்சுவல் ஃபண்ட் வாங்கி நமது பெயரில் வைத்துக்கொள்ளலாம்.

காகித பத்திரங்கள் இல்லாமலும் டிமேட் கணக்கு இல்லாமலும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வைத்து கொள்ளமுடியும். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் இது மிக மிக எளிதே.

9. மயக்கும் அல்லது ஈர்க்கும் திட்டத்தின் பெயர்களை பார்த்து முதலீடு செய்வது  (Name sake investing)

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் பெயர்களுக்கும் அதில் வரும் லாபத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. ஒரே பெயர் கொண்ட பல்வேறு திட்டங்கள் பல்வேறு விகிதங்களில் லாபம் தருகின்றன. அதன் காரணம் அந்தந்த திட்டங்களின் அடிப்படை பங்கு முதலீடும் அது சார்ந்த முதலீடும். எனவே திட்டத்தின் பெயரும் ஒரு குறியீடே!

திட்டம் எவ்வாறு இயக்கப்படும் என்பதை கண்காணித்து அதில் முதலீடு செய்ய வேண்டும். நாம் முதலீடு செய்ய போகும், திட்டம் எந்த, எந்த, வகையான பங்குகளில் முதலீடு செய்யும், படித்து, கேட்டு, புரிந்து முதலீடு செய்வது நலம்