Header

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்


''மாதம் 6,500 ரூபாய் சம்பளத்தில் கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்தேன். வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த பிஸினஸ்மேன்களின் கதைகளை அடிக்கடி வகுப்பில் சொல்வேன். இந்த கதைகளை நாமே ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று யோசித்து, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

ராயப்பேட்டையில் என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தியதில் அடுத்து இன்னொரு மருந்துக் கடை, பல்பொருள் கடை என்று விரிவுபடுத்தினேன். இதில் எதிர்பார்த்த அளவு ஏற்றமில்லை. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற யோசனை இருந்த சமயத்தில் என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம்தான் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவைக்கிறது என்று அறிந்து, அதே மாதிரி ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த சமயத்தில்தான்.
இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனடியாக தயாரிக்கக் கூடிய நொறுக்குத்தீனிகளைத் தந்தோம். அதிலும் முக்கியமாக, வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992-ல் நான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக பிஸினஸ்மேன் ஆனேன்.
என் முதல் ஓட்டலை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். பொதுவாக ஓட்டலுக்கு வருபவர்களை உட்கார வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் வாடிக்கையாளர் சுயசேவை என்று தொடங்கினேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தரமுடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து என் ஓட்டலின் வளர்ச்சி, வேகம் கொண்டது.
முதலில் சென்னையிலேயே வேறுவேறு பகுதிகளில் ஓட்டல்களைத் தொடங்கினேன். பிறகு பெங்களூர், சிங்கப்பூரிலும் ஓட்டலைத் தொடங்கி இன்று துபாய் வரை செல்ல திட்டமிட்டு வருகிறோம். மொத்தமாக 18 ஓட்டல்களில் ஆண்டு டேர்னோவர் 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
பேராசிரியராக எனது பணியினைத் தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, நல்ல மாணவர்களை உருவாக்கி இருந்திருப்பேன். ஆனால், இன்று என் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். எனக்காக மட்டுமின்றி, அவர்களுக்காகவும் நான் உழைக்கிறேன்!''.