Header

ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஸ்டார்ட்அப் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!


போதும்பா இந்த மிடில் கிளாஸ் வாழ்கை, இனி எப்படியாவது தனியாக பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தூண்டப்பட்டு பிசினஸ் என்கிற வெறி தொற்றி கொண்டு வெறி பிடித்து ஓடுகிறது என்றால் ஸ்டார்ட்அப்-க்கான விதை விழுந்துவிட்டது என்று தான் அர்த்தம்.

சம்பளம் டூ லாபம் :

நல்ல சம்பளம் கிடைத்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாக போய் பிசினஸை செய்து ஏதாவது நஷ்டம் வந்துவிட்டால் அதை எப்படி தாங்குவது என்கிற பயத்தோடு அதற்கான யுக்தியை வகுக்கத் தொடங்கிவிட்டீர்களா... தொடங்கிவிட்டீர்கள் என்றால் பிசினஸை செய்வதற்கான தைரியம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

தைரியம் ஓ.கே... ஆனால் கண்டிப்பாக நீங்கள் செய்ய இருக்கும் பிசினஸின் மூலம் தற்போது நீங்கள் சம்பளமாக வாங்கும் பணத்தை விட கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை தரும் பிராஜெக்ட்களை வைத்திருக்கிறீர்களா..?

சம்பளம் இல்ல, செலவு இருக்கு :

சம்பளம் இல்லாத காலத்தில் (அதாவது குறைந்தபட்சம் பிசினஸ் தொடங்கி 2 - 3 ஆண்டுகளுக்கு) குடும்பத்தை சமாளிக்கும் வழிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த மாதிரியான  ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்பதை எல்லாம் தெளிவாக திட்டமிட்டுவிட்டீர்கள் என்றால்... புறப்படுங்கள் ஸ்டார்ட் அப் தொடங்க...  வெற்றி வேல்... வீர வேல் என்று.

இதில் எது உங்கள் ஐடியா:

1. குடும்பம் செய்து வரும் பிசினஸை அப்படியே  தொடர்ந்து பிசினஸை விரிவுபடுத்தப் போகிறீர்களா....?
2. சந்தையில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யப் போகிறீர்களா அல்லது சந்தையை உருவாக்கப் போகிறீர்களா?

சந்தையை படியுங்கள் :

உங்களை சுற்றி இருப்பவர்கள் தான் சந்தை, அவர்களின் அன்றாட வாழ்கையில் உள்ள சிறிய மற்றும் பெரிய பிரச்னைக்கான தீர்வு உங்களிடம் இருக்கிறது என்றால் அதை விற்று லாபம் பாருங்கள். அந்த வெற்றிடத்தை உங்கள் பொருள் அல்லது சேவையைக் கொண்டு நிரப்பி அதை காசாக்குங்கள்.


ஸ்ட்ரைக் ஆன ஐடியாவுக்கு  வாடிக்கையாளர் யார்:

கிடைத்த தீர்வு யாருக்கு பயன்படும் தனி நபர்களுக்கா (Consumers), வியாபாரிகளுக்கா (Business), நிறுவனங்களுக்கா (Companies). அதிலும் குறிப்பாக பொதுஜனம், படித்தவர்கள்,, படிக்காதவர்கள், ஐடி-காரர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என்று எந்த பிரிவினருக்கு பெரிதும் பயன்படும் என்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் சேவை அல்லது பொருள் எப்படி வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, சந்தையின் தேவையை மேலும் மெருகேற்றி மீண்டும் சோதியுங்கள், சேவை அல்லது பொருளில் எந்த குறையும் இல்லை என்ற பின் பரவலாக வெளியிடுங்கள்.

பெரிய அளவில் கணக்கிடுங்கள் :

நாம் கண்டுபிடுத்திருக்கும் அந்த தீர்வு நம் ஊரில் எத்தனை பேருக்கு தேவைப்படும், நம் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தேவைப்படும், நம் மாநிலத்தில், நாட்டில், கண்டத்தில், உலகில் என விரிவாக கணக்கிட்டு பாருங்கள். வெற்றிடம் இருக்கிறது என்றால் வெற்றியின் வாய்ப்பும், தாக்கமும் அதிகமாக இருக்கும்.

நாம் கண்ட தீர்வு மற்ற தீர்வுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது என அலசுங்கள். நம் தீர்வுக்கு அரசிடம் ஏதாவது முரண்பாடு இருக்க வாய்ப்பிருக்கிறதா? என சரி பாருங்கள், எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்றால் தான் உங்களுடைய ஐடியா ஓ.கே.

சம்பாதிக்கும் பணத்தை ப்ளான் பண்ணி செலவு பண்ணுவது எப்படி?

சம்பாதிக்கும் பணத்தை ப்ளான் பண்ணி செலவு பண்ணுவது எப்படி?


‘பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்’ என்பார்கள். இன்றைய வர்த்தக உலகில் பிரதானம், மூலதனம் எல்லாமே பணம்தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணத்தை நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எளிதில் சிக்கனமாக பயன்படுத்தலாம் என்பதற்கான வழிமுறைகள் அறிந்தாலே தேவையில்லாத செலவுகள் தானாகவே குறைந்துவிடும்.

செலவு செய்வதற்கு முன் நம் மாத சம்பளம் எவ்வளவு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதே போல் நம் மாத சம்பளத்தில் எவ்வளவு பணத்தை எங்கே எதிலே செலவு செய்கிறோம் என்பதிலும் கவனமாக இருப்பது அவசியம். அது நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவாக இருந்தாலும் சரி, உடுத்தும் உடையாக இருந்தாலும் சரி.

நம் கையில் வரும் வருவாயை குறித்து வைத்துக் கொள்ள பழகுங்கள். இதற்கு ஸ்ப்ரட் ஷீட் போன்றவற்றை உபயோகிப்பது இன்னும் சிறந்தது. வருவாயை போலவே செலவினங்களையும் எழுத மறக்காதீர்கள். ஏன்? எதற்கு? எவ்வளவு? போன்ற கேள்விகளுக்கு பதிலாக உங்கள் செலவினங்கள் அமையும் படி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

ஒரு மாதத்திற்கு உங்கள் வருவாயிலிருந்து செலவினங்களை கழித்து பாருங்கள். வருவாய் அளவை விட செலவு அதன் எல்லைக் கோட்டை நெருங்கினாலோ அல்லது தாண்டினாலோ உங்களது சேமிக்கும் பழக்கம் அபாயகரமான கட்டத்தில் உள்ளது என்பதே உண்மை.

ஒவ்வொரு மாதமும் உங்களது க்ரெடிட் கார்டு வரம்பு தாண்டுகிறதா? பேமெண்ட்க்கான பணம் இல்லாமல் போராட்டமாக இருக்கிறதா? இதற்கெல்லாம் உங்களது விடை ‘ஆம்’ என்றால், நீங்கள் உங்கள் வருவாயை விட அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதே அர்த்தம்.

தேவையில்லாமல் பொருட்களை வாங்கி குவிப்பதை விடுத்து, தேவை அறிந்து செலவு செய்ய முயற்சியுங்கள்.  நிச்சயம் சேமிப்பு தானாகவே கைகூடும். 

உங்களைப் பணக்காரராக்கும் அந்த 12 விஷயங்கள்

உங்களைப் பணக்காரராக்கும் அந்த 12 விஷயங்கள்!

ஒருவர் எப்போது பணக்காரர் ஆகிறார் என்று கேட்டால், அதற்கு கால நேரமெல்லாம் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில் இன்றைய ஆண்ட்ராய்ட் யுகத்தில் ஓவர் நைட்டிலும் ஒருவர் பணக்காரர் ஆக முடியும். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும் சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் நம்முடைய சொத்து மதிப்பை உயர்த்திக்கொண்டே வர முடியும்.

ஏனெனில் பணக்காரர் ஆவதைவிட, தொடர்ந்து பணக்காரராகவே இருப்பதுதான் கடினமான விஷயம். அதனைத் தக்கவைத்துக்கொள்ள ஒருவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பணக்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்?













டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி

டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி...!

டீக்கு திண்டாடியவர் இன்று கோடிக்கு அதிபதி...-  விஜய் சேகர் ஷர்மா - பேடிஎம் Paytm

ஸ்மாரட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் பேடிஎம் ஆப் தெரியும், அதை பலரும் டவுண்லோடு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த ஆப் வழியாக ஒரு ஆண்டுக்கு 750 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்த நிறுவனம் ஒரு கிரிக்கெட் போட்டிக்கே ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் அலிபாபா டாட் காம், ரத்தன் டாடா என பல்வேறு முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். இப்படிப் பல முதலீட்டாளர்கள் விரும்பி முதலீடு செய்யும் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா சில ஆண்டுகளுக்கு முன் கையில் வைத்திருந்த 10 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்குமா என டெல்லி சாலைகளில் அலைந்திருக்கிறார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைப் பார்ப்போம்.

சொந்த முயற்சி

விஜய் சேகர் ஷர்மா தனது 15 வயதில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். புத்திசாலியாக இருந்தவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது. வகுப்பில் முன்வரிசையில் அமர்ந்தால் பேராசிரியர் கேட்கும் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதாலே, கடைசி வரிசையில் அமரத் துவங்கினார். அதன் பிறகு தனது சொந்த முயற்சியில் தினமும் ஆங்கிலப் பத்திரிக்கைகளை தொடர்ந்து படித்து, அதன் மூலமாக ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே, ஏஞ்சல் இன்வெஸ்டார் மூலமாக ரூ.20 ஆயிரம் ரூபாய் முதலீட்டைப் பெற்று, நண்பர்களுடன் இணைந்து Xs! கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தைத் துவங்கினார். 1998ல் கல்லூரிப் படிப்பை முடித்தார். முழுநேரமும் பிசினஸில் கவனம் செலுத்தினார். இதன் விளைவாக நிறுவனத்தின் மூன்று மாத (1999ம் ஆண்டு பிப்ரவரி - மே மாதம்) டேர்னோவர் ரூ.50 லட்சமாக உயர்ந்தது. அதே ஆண்டில் அந்த நிறுவனத்தை இந்தியா டுடே குரூப்பிடம் 5 லட்சம் டாலருக்கு விற்று விட்டார்.

தினமும் 2 டீ

கம்பெனியில் கிடைத்த லாபத்தில் அவருடைய குடும்பத்தின் கடன் பிரச்னைகளை தீர்த்தார். அந்த லாபத்தில்தான் கலர்டிவியே வாங்கினார் விஜய். அதன் பிறகு நண்பனின் நிறுவனத்தில் சேர்ந்தவருக்கு அடுத்த அடியாக இருந்தது 9/11 பிரச்னை.

அந்த சமயத்தில் நிறுவனம் மிகவும் நொடிந்து போய்விட்டது. அதாவது தினமும் சாப்பாட்டுக்குப் பதிலாக இரண்டு டீ குடித்து விட்டு வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு விஜய்யின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. இந்த நேரத்தில் வீட்டில் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய போது இவரைத் திருமணம் செய்து கொள்ள யாருமே முன்வரவில்லை.

விஜய்யின் இலக்கு

அந்தச் சமயத்தில்தான் ஸ்மார்ட் போன்கள் பிரபலம் அடைய ஆரம்பித்தது. இதில் ஏதாவது செய்தால் கட்டாயம் வெற்றி என்ற சிந்தனை வரவே, விஜய் பேடிஎம் மொபைல் வாலட் நிறுவனத்தை டிசம்பர் 2010 ஆண்டு துவங்கினார். தற்போது பேடிஎம் ஆபை 50மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் ஒரு மாதத்துக்கு 60 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டு இறுதியில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை உருவாக்குவதே விஜய்யின் இலக்காக உள்ளது.

கார், பைக் ஸ்டார்ட் ஆனா இன்ஷூரன்ஸ் கிடையாதா ?

கார், பைக் ஸ்டார்ட் ஆனா இன்ஷூரன்ஸ் கிடையாதா ?

தமிழ்நாட்டில் தொடர்ந்து கடந்த பல நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கின்றது. இந்த மழையினால் கார், பைக் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. சில இடங்களில் கார்களும், பைக்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பை போலவும் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய கார், பைக் மற்றும்  வீடுகளுக்கு இழப்பீடு கோர முடியுமா? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை எப்படி அணுகுவது? என்பது குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலை அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:

இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை பத்திரமாக பாதுகாப்பது நம்முடைய கடமை. உதாரணத்திற்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் வாகனத்தை ரேஸில் ஈடுபட்டு பாதிப்பிற்கு உள்ளானால் அதற்கு க்ளெய்ம் கிடையாது. ஏனெனில் நியாயமான பாதுகாப்பை அந்த நபர் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அதற்கு க்ளெய்ம் கிடைக்காது.

போட்டோ எடுங்க

ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பைக், கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். அதற்கு கார், பைக் போன்ற வாகனங்கள் மழை நீர், வெள்ள நீரில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால் முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

இமெயிலில் "என்னுடைய வாகனம் XXX இந்த பாலிசியில் கவராகியுள்ளது. இப்பொழுது (தேதி, நேரம் குறிப்பிட்டு) மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கிறது. ஸ்பாட் சர்வே செய்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இந்த இரண்டு வரிகளிலேயே இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்குகிறது.

க்ளெய்ம் கிடையாது

ஆனால் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், வெள்ளம் அல்லது மழை நீரில் பாதிப்படைந்த காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால் க்ளெய்ம் தரமாட்டார்கள். இதை தங்களது விதிகளில் குறிப்பிட்டுருப்பார்கள். ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் க்ளெய்ம் பொறுத்தவரை அவர்களுக்கு முதல் மூலக்காரணம் எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தை இயக்க செய்தால் அது திட்டமிட்ட செயலாக மாறிவிடுகிறது.

எனவே வாகனம் எந்த நிலைமையில் இருக்கிறதோ அதே நிலைமையில் ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அவர்களுடைய இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துவதே நல்லது.
இப்போது சென்னையில் பெரும்பாலான கார், பைக் மழை நீரினால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரினால் கார், பைக் பாதிப்படைந்துள்ளது என்ற காரணத்தினால் க்ளெய்ம் வழங்குவார்கள்.

இமெயில் அனுப்புங்க

ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பர் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து தெரியப்படுத்துங்கள் அல்லது அந்த நிறுவனத்தின் பொதுவான இமெயில் ஐடி-க்கு தெரியப்படுத்தலாம்.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடுகளைக்கோர எழுதித்தான் தர வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. இப்பொழுது உள்ள வசதிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செல்போன் நம்பருக்கே வாட்ஸ்அப் மூலமாக பாதிக்கப்பட்ட வாகனத்தை போட்டோ எடுத்து தெரியப்படுத்தலாம். வீடு பழுதடைந்து இருந்தாலும் அதையும் ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

வெளியே பாதிப்படைந்தால்?

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் க்ளெய்ம் கிடைக்கும்.

வாகனம் வீட்டில் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே க்ளெய்ம், வேறு ஏதாவது ஒரு இடத்தில் மழை நீர் அல்லது வெள்ளத்தால் பாதிப்படைந்து இருந்தால் க்ளெய்ம் கிடையாது அப்படி எதுவும் இல்லை. வாகனம் பாதிப்படைந்ததற்கு மூலக்காரணம் எது என்று ஆராய்ந்து சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் வழங்குவார்கள்.

ஸ்பாட் போட்டோ

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய வாகனம் எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கே சென்று அந்த நிறுவனத்தின் சர்வேயர் பார்வையிடுவார்.

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-க்காக வாகன விபத்தின்போது 'ஸ்பாட் போட்டோ' எடுப்பார்கள். அதேபோல் மழைநீரில் பாதிக்கப்பட்ட வாகனத்தை ஒரு ஸ்பாட் போட்டோ எடுத்து வைப்பது நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் ஸ்பாட் போட்டோ மற்றும் பாதிப்பை ஆராய்ந்து பாதிப்படைந்தவர்களுக்கு க்ளெய்ம் வழங்குவார்கள்.

டோயிங் சார்ஜ்

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஆனது மழை வெள்ளத்தில் வாகனத்தின் பாதிப்பு மற்றும் தேய்மானத்தைப் பொறுத்து  வழங்குவார்கள். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் டோயிங் சார்ஜ்-ம் கிடைக்கும். அதாவது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் பாதிப்படைந்த வாகனத்தைப் பார்த்து அதை எடுத்து செல்வதற்கான செலவும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் கிடைக்கும்.

பாலிசிதாரரின் கடமை

சென்னையில் சில இடங்களில் வெள்ளம் வடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனாலும் பாதிப்பு இருக்கும்போதே பாதிக்கப்பட்டவர்கள் கார், பைக் அல்லது வீட்டின் தற்போதைய நிலைமையை ஒரு போட்டோவாக எடுத்து வைத்திருங்கள்.

தண்ணீரில் மூழ்கி இருக்கும் வாகனத்தை, தண்ணீர் வடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஸ்டார்ட் செய்தால் க்ளெய்ம் கிடைக்காது. ஆகையால் வாகனத்தை இயக்காமல் இருப்பதே நல்லது. க்ளெய்ம்-க்கு அடிப்படையே எதிர்பாரத செயலாக இருக்க வேண்டும் என்பதுதான்.

உடனே அணுகுங்க

க்ளெய்ம் பெற பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுக வேண்டும் என்று தெரிவித்து இருப்பார்கள். ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உடனே அணுக முடியாது.

ஆகையால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு இமெயில் அனுப்பினாலே போதும். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்குவதற்கு உதவிகரமாக ஒரு போட்டோ இருந்தாலே போதும். வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. அதற்காக  காலம் கடத்தக் கூடாது. உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கோருவதே நல்லது  என்று திருமலை கூறினார்.

பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகள்

பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகள்

புத்தகத்தின் பெயர் :  How to Be a Power Connector


ஆசிரியர்: ஜூடி ராபினெட்

பதிப்பாளர்: MCGRAW-HILL

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ‘ஹௌ டு பி எ பவர் கனெக்ட்டர்’ எனும் பிசினஸ் நெட்வொர்க்கை லாபமாக மாற்றும் வழிகளைச் சொல்லும் புத்தகத்தை.

நீங்கள் இருக்கும் பிசினஸில் டாப் கிளாஸில் இருப்பவரை தொடர்புகொள்ள உங்களுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும், உங்கள் தொழிலுக்கு பணம் வேண்டும் என்றால் யாரை தொடர்புகொள்ள வேண்டும், உங்கள் ஐடியாவுக்கு பணம் திரட்ட பணம் வைத்திருக்கும் ஒருவரை எப்படி சென்றடைவது என்பதாவது  தெரியுமா என்ற அதிரடியான கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர் ஜூடி ராபினெட்.

எப்படி எலெக்ட்ரிக் கேபிள்கள் வீட்டில் சுவற்றுக்குள் பதிந்து வைத்து ஒரு இடத்தில் சுவிட்சைப் போட்டால் மற்றொரு இடத்தில் லைட் எரிகிறதோ அதேபோல கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதுதான் இந்த பிசினஸ் நெட்வொர்க்கும். நீங்கள் இந்த நெட்வொர்க்கில் இருந்தீர்கள் என்றால் பணம், மீட்டிங் இன்விடேஷன், தகவல், பிசினஸ் டீல்கள் போன்றவை உங்களைத் தேடிவரும். இல்லையென்றால் அப்படி ஒரு நெட்வொர்க் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.

என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் பெரிய தொழில் செய்தாலுமே பிசினஸ் நெட்வொர்க்கை வளர்த்துக் கொள்வதற்கான நிலையான வழிமுறைகள் ஏதும் இதுவரை இல்லாமலேயே இருக்கிறது. அவரவர்கள் அவரவர் திறமைக்கும் எண்ணத்துக்கும்  ஏற்ப இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.

நிஜத்தில் பிசினஸில் இருப்பவர் களுக்கு இதுபோன்ற நெட்வொர்க்கை கண்டறியவும், உருவாக்கவும், நெட்வொர்க்கை மேனேஜ் செய்யவும் வழிவகைகள் சொல்லப்படவேண்டும். அதைச் சொல்லும் எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்கிறார் ஆசிரியர்.
ஏறக்குறைய 25 வருடமாக நெட்வொர்க்கிங் பற்றிய விஷயங்களை கூர்ந்து கவனித்துவரும் ஆசிரியர் ஒரு பவர் கனெக்ட்டர் என்று அழைக்கப் படுகிறார். ஆசிரியர் முதலில் குறிப்பிடுவது நெட்வொர்க் செய்ய நினைக்கும்போது பெரும்பாலானோர் செய்யும் ஐந்து தவறுகளை. முதலாவதாக, தவறான இடத்தில் நெட்வொர்க் செய்வது. நெட்வொர்க்கிங் என்பது நீங்கள் சரியான இடங்களில் உள்ள சரியான மனிதர்களிடம் இணைத்துக் கொள்வதுதானேயொழிய வேறொன்றுமில்லை என்கின்றார்.

இரண்டாவது, தங்களுடைய இலக்குக்கும் தாங்கள் இருக்கும் நெட்வொர்க்குக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது.  அதாவது, நெட்வொர்க் நம்மை சப்போர்ட் பண்ணுவதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளாமல் நெட்வொர்க்கை நாம் சப்போர்ட் பண்ணும்படியாக இருக்கும்படி சிக்கிக்கொள்வது.

மூன்றாவதாக, நல்ல நெட்வொர்க்கில் இருந்த போதிலும் அதை எப்படி இணைத்து அதன்மூலம் முழுப்பலனை அடைவது என்பதை தெரிந்துவைத்துக் கொள்ளாமல் இருப்பது.

நெட்வொர்க்கில் இருக்கும் அனைவருமே உதவுகிற வகையில் பவர் உள்ளவராகவே இருப்பார்கள். ஆனால், நம்மால் அவர்களை தெளிவாக பயன்களை கேட்டுப் பெறமுடியாத நிலையில் இருப்போம் என்கிறார் ஆசிரியர்.



நான்காவதாக, நெட்வொர்க்கை எப்படி செம்மைப்படுத்திக்கொள்வது என்பது தெரியாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். நெட்வொர்க் செய்கிறேன் பேர்வழி என்று மிகப் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்திக் கொண்டுவிடுவோம். ஆனால், தேவை என்று ஏற்படும்போது யாரிடம் கேட்பது என்பதை முடிவு செய்ய முடியாமலும் தொடர்புகொள்ள தயங்கி நிற்கும் நிலைமையும் ஏற்படும்  என்கிறார் ஆசிரியர்.

ஐந்தாவதாக, ஆசிரியர் சொல்வது ஹைவேல்யூ மற்றும் லாங்-டேர்ம் நெட்வொர்க்கை ஏற்படுத்திக்கொள்ளாமல் தற்காலிகமாக செயல்படும் பல்வேறு நெட்வொர்க்குகளை கொண்டிருப்பது என்பதை. சரியான திட்டமிடுதலின் மூலமே நெட்வொர்க்கை செம்மைப்படுத்தி, அதிக பலன் தரும் வகையிலும் நீண்டகால அடிப்படையில் உதவும் வகையிலும் நம்முடைய நெட்வொர்க்கை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.

பிசினஸில் கிடைத்த ஃப்ரண்ட்ஷிப், ஃப்ரண்ட்ஷிப்பால் கிடைத்த பிசினஸைவிட சிறந்தது என்கிறார் ஆசிரியர். இதெல்லாம் சும்மா புத்தக அறிவுரை,  நானெல்லாம் நல்ல நெட்வொர்க்கில் இருக்கிறேன் என்கிறீர்களா? ஒரு நிமிடம் இந்தக் கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பின்வரும் கேள்விகளைக் கேட்கிறார்.  தற்போது இருக்கும் நெட்வொர்க்கில் இருப்பவர் களில் எத்தனை பேரை ஸ்ட்ராட்டஜிக் நெட்வொர்க் என்பீர்கள்? அதாவது,  இவர்களில் எத்தனை பேருக்கு உதவுவதாலும், உதவியைப் பெறுவதாலும் உங்கள் இருவரின் மதிப்பு உயரும் என்று உங்களால் அடித்துக் கூறமுடியும்?

உங்கள் நெட்வொர்க்கில் இருப்பவர்கள் எத்தனை பேருடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்; எத்தனை பேருக்கு நீங்கள் மதிப்பைக் கூட்டும் அளவுக்கான விஷயங்களைச் செய்கிறீர்கள்? உங்கள் நெட்வொர்க்கில் இருப்பவர்களுடைய நெட்வொர்க்கை பற்றி எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும்.  அவர்களுடைய பழக்கங்கள் எந்த அளவுக்கு காரியம் சாதிக்கும் என்பது உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

ஒரு முக்கிய புள்ளியையோ, அரசியல்வாதியையோ சந்திக்க வேண்டியிருக்கும் சூழலில் எவ்வளவு சீக்கிரமாக உங்கள் நெட்வொர்க் அந்தச் சந்திப்பை ஏற்படுத்தவல்லதாக இருக்கும். 24 மணி நேரத்துக்குள்  அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தந்துவிடுமா? தற்போது இருக்கும் நெட்வொர்க்கில் இவர்களுடைய தொடர்பை இன்னும் வளர்த்துக் கொண்டால் நான் பயன் பெறுவேன் என்ற லிஸ்ட்டில் உங்களிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்கள் நெட்வொர்க்கை ஸ்ட்ராட்டஜிக் காக பயன்படுத்த உங்களிடம் பிளான் ஏதும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அது எப்படி வேலை செய்கிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் இருந்தால் மட்டுமே உங்களுடைய தற்போதைய நெட்வொர்க் சரியானது என்று சொல்லலாம் என்று சொல்கிறார் ஆசிரியர். பணம், பழக்கம், பவர், இன்ஃப்ளூயன்ஸ் என்ற அனைத்துக்குமே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இவையனைத்துக்கும் உதவும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீங்கள் உதவிகளைச் செய்துவந்தீர்கள் என்றால் அவர்களும் உங்களுக்கு உதவவே செய்வார்கள் என்கிறார் ஆசிரியர்.

ஏனென்றால், உங்கள் நெட்வொர்க்கின் மதிப்பு அவர்கள் நெட்வொர்க்கின் மதிப்பினால் மிகவேகமாக அதிகரிக்கின்றது என்கிறார். வெற்றிகரமான நெட்வொர்க் உறவை வைத்துக்கொள்ள உண்மையாகவும், நம்பிக்கை யாகவும், மரியாதையுடனும், அரவணைப்புடனும், சொல்வதை பொறுமையுடன் கேட்கும் குணத்துடனும், ஈடுபாட்டுடனும், புத்திசாலித் தனத்துடனும், பழகுவதற்கு சுலபமான குணத்துடனும், சுலபத்தில் மற்றவர்களுடன் இணைந்து கொள்ளும் பழக்கத்துடனும் ஒருவர் இருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம். நான் எங்கே நெட்வொர்க் செய்துகொள்வது என்றெல்லாம் கவலைப் படாதீர்கள். அடுத்தவர்கள் நலனில் கொஞ்சம் அதீத கவனம் கொண்டவராக நீங்கள் இருக்கவேண்டும் என்கிறார்.

எப்படி புதியவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். இன்றைக்கு உங்களுக்கு நன்கு பழக்கமான வர்கள் எல்லாருமே முதலில் புதியவர்கள்தானே என்பதை நினைவில்கொண்டு செயலாற்றுங்கள் என்கிறார் ஆசிரியர்.

 என்னிடம் என்ன  இருக்கிறது, அடுத்தவர்கள் என்னிடம் எதிர்பார்க்க என்கிறீர்களா? என்று கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். உங்களிடம் நிச்சயமாய் அடுத்தவர்களுக்குத் தர ஏதாவது ஒன்று இருக்கும் என்று அடித்துச்சொல்கிறார் ஆசிரியர்.

நான் என்ன தந்தாலும், யாருக்கு என்னைப் பிடிக்கப் போகுது; அவர்களெல்லாம் பெரிய ஆட்கள் என்று சொல்லும் ரகமா நீங்கள்? முதலில், உங்களுக்கு அவர்களைப் பிடிக்க வேண்டும். அப்புறமாக அவர்களுக்கு உங்களை நிச்சயமாய் பிடித்துப்போகும்.

கல்லூரிப் படிப்பை முடித்து கேரியரை ஆரம்பிக்கும் மாணவராக இருந்தாலும் சரி, சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும் அனுபவஸ்தராக இருந்தாலும் சரி, நெட்வொர்க்கிங் மூலம் தங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதையும், அந்த நெட்வொர்க்கை எப்படி பெறுவது எப்படி என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ள புத்தகம் இது.

முன்னேற்றம் விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.