Header

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?

கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?


வருமான வரி கூடுதலாகச் செலுத்தப்படும் நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டு விடுகின்றன. பணியாளர்கள் அலுவலகம் மூலம் வருமான வரி கணக்கிட்டுச் செலுத்தும்போது சில நேரங்களில் அரசால் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்போது நிகழ்கிறது. வர்த்தகர்கள் அரசால் நிர்ணயிக்கப்படும் வரியைக் கட்டியபின்பு அவர்களின் வியாபாரங்கள் மூலம் மேலும் கூடுதலாக வருமான வரி செலுத்தவேண்டி நிகழ்கிறது. இன்னும் இது போன்ற நிகழ்வுகளின்போது அதற்குரிய படிவங்களில் வருமான வரித்துறைக்கு ஆடிட்டர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ உரிய முறையில் விண்ணப்பித்து ஆவணங்கள் சமர்ப்பிக்கும்போது அவர்கள் கூடுதலாகச் செலுத்திய வருமான வரித் தொகை செலுத்தியவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றித் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

* கூடுதல் தொகையைத் திரும்பப்பெறலாம் சில நேரங்களில் தனிநபர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூடுதலாக வருமான வரி செலுத்திவிடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பப் பெற உரிமையுடையவராகிறார்கள். அரசு தனிநபர்கள் தங்களின் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது கூடுதல் தொகையைத் திரும்பப்பெற அனுமதிக்கிறது.

* வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் தனிநபர்கள் திரும்பப் பெறுவதில் உள்ள முழு நடைமுறைகளையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இறுதி நாள் ஜூலை 31, 2017 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

* சரியாக வரி தாக்கல் செய்துள்ளோமா என்று எப்படிச் சரிபார்ப்பது வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களைப் பூர்த்திச் செய்த பிறகு "Calculate Tax" பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்களிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை உங்கள் கம்ப்யூட்டர் கணித்துவிடும். கூடுதல் வரியை திரும்பப் பெற நீங்கள் தகுதியானவராக இருந்தால் அது ‘Refund' வரிசையில் தோன்றும். அடுத்தபடியாக நீங்கள் வருமான வரிக் கணக்கினை e-file முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

* வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு என்ன ஆகும்? உங்கள் கணக்கினை தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கும். அதனைத் தொடர்ந்து பிரிவு 143(1) ன் படி நடவடிக்கை குறித்துத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் தகவல் கீழ்குறிப்பிட்டவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்

* கணக்கு ஒத்துப்போதல் உங்கள் வரி கணக்கீடு வரித்துறையினரின் கணக்கோடு ஒத்துப் போனால் நீங்கள் மேற்கொண்டு வரி செலுத்த வேண்டியதில்லை, அவ்வாறு ஒத்துப்போகா விட்டால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியதிருக்கும். அல்லது உங்களின் திரும்பப் பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் கணக்கீடு வரித்துறையினரின் கணக்கீட்டுடன் ஒத்துப்போனால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் திருப்பப்படும் தொகை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

* தகவல் எப்படி அளிக்கப்படும் ஆன்லைன் மூலம் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும்.

* நிலைகள் குறித்துச் சர்பார்ப்பது எப்படி? இந்த நடைமுறைகளின் அவ்வப்போதைய நிலைகள் குறித்து வருமான வரித்துறையின் இணையதளத்தில் e-filing தளத்தில், ‘My Account' தலைப்பின் கீழ் ‘Refund / Demand Status' தலைப்பைச் சொடுக்கினால் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tin.nsdl.com என்ற இணையதளத்திற்கும் செல்லலாம். உங்கள் PAN எண்ணையும் கணக்கு ஆண்டையும் பதிந்த உடன் உங்கள் நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். திருப்பப்படும் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் அல்லது காசோலையாக வழங்கப்படும்.

* பணத்தைத் திரும்பப்பெற சரியாகச் செய்ய வேண்டியவை இதற்காக நீங்கள் கீழ்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சரியான வங்கி தகவல்கள், IFSC எண், வங்கி கணக்கு எண், MICR எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். நிரந்தரக் கணக்கு எண் PAN எண்ணை உள்ளிடும்போது தவறேதும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

* அஞ்சல் முகவரி உங்களின் அஞ்சல் முகவரி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுக்கான அறிவிக்கைகள், பிற தகவல்கள் அனைத்தும் உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலமே அனுப்பப்படும். ஏற்படும் ஒரு சிறு தவறு கூட உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர்வதில் காலதாமதத்தை ஏற்படுத்திவிடும் அல்லது உங்களுக்குக் கிடைக்காமலே கூடப் போய்விடக்கூடும்.

* டிடிஎஸ் உங்கள் வருமான வரிக் கணக்கில் பணம் உங்கள் அலுவலகத்தாலோ, பிற வர்த்தகர்களாலோ டிடிஎஸ் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டாலோ சரியான டான் எண் குறிப்பிடப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும். படிவம் 16 ல் குறிப்பிடப்படும் தகவல்களும் படிவம் 26 AS ல் குறிப்பிடப்படும் தகவல்களும் ஒத்திருக்க வேண்டும். பிரிவு 80 C கீழ் மேற்கொள்ளப்படும் பிடித்தங்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும், அப்போதுதான் உங்களுக்கான தொகை சரியாகத் திரும்பி வரும்.

* முன்கூடியே வரி செலுத்துவதால் கிடைக்கும் நன்மை நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கினை முன்கூடியே தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்குத் திரும்பத் தொகை வருவதில் காலதாமதம் தவிர்க்கப்படுவதோடு உரிய வட்டித் தொகையை நீங்கள் இழக்காமலிருக்க முடியும்.

* சிரமங்களைத் தவிர்ப்பது எப்படி? சரியான நேரத்தில் கணக்கு தாக்கல் செய்தல், சரியான தகவல்களை உள்ளீடு செய்தல் ஆகியவை தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்து உங்களின் தொடர்ந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தரக்கூடியவையாக இருக்கும் எனும்போது நல்ல விஷயம்தானே.