Header

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!

பத்திரங்களை பாதுகாக்க உதவும் டிஜிட்டல் லாக்கர்!


சமீபத்திய சென்னைப் பெருமழையில் வீடு, கார் சேதமானதுடன், பலரது விலை மதிப்பற்ற ஆவணங்களும் தண்ணீரில் நனைந்து நாசமாகின. பல இடங்களில் உடனடி ஆவணங்கள் வழங்கும் முகாம் நடத்தி, பலரது ஆவணங்களை தரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மழை, வெள்ளம், தீ என எந்தவிதமான இன்னல்கள் வந்தாலும் அதிலிருந்து உங்கள் ஆவணங்கள் எந்த வகையிலும் தீங்கு விளையாமல் பத்திரமாக வைத்திருப்பதற்கான வழி இப்போது பிறந்துள்ளது, அதுவும் இலவசமாக நயா, பைசா செலவில்லாமல்.

டிஜி லாக்கர் (Digi Locker) எனப்படும் இணையப் பெட்டகம்தான், நம்மிடம் இருக்கும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கும் புதுமையான வழி. இது ஆன்லைனில் இயங்குவதாகும் (Online Document Storage Facility). இதன் மூலம் நீங்கள் எந்தவொரு பிரச்னையும் இன்றி ஆவணங்களைப் பாதுகாத்து, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தேவைப்படும் நபருக்கோ, துறைக்கோ அனுப்ப முடியும்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ஆவணங்களையும் தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். ‘பேப்பர் இல்லா செயல்பாடு’    (Paperless Governance) என்கிற சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்திய அரசால் டிஜிட்டல் (Digital India) திட்டத்தின் ஒரு அங்கமாக உருவாக்கி தரப்பட்டிருப்பதுதான் இந்த டிஜி லாக்கர்.



தேவைகள்!

இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த உங்களிடம் சில அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும். இதனைப் பயன்படுத்த ஆதார் எண்ணும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அவர்களது இருப்பிட உறுதிக்கென பிற ஆவணங்களை கொடுத்து அதன் சரிபார்ப்பிற்கு பின்னர் இந்த டிஜி லாக்கரை பயன்படுத்த முடியும்.

பதிவு செய்வது அவசியம்!

இந்த டிஜி லாக்கரில் பதிவு செய்த பின்புதான் இந்தப் பெட்டகத்தை நீங்கள் பயன்படுத்த இயலும். இதற்கென இருக்கும் இணையதளத்திற்குச் சென்று (www.digilocker.gov.in),  உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தபின்பு, நீங்கள் குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு ஒரே முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். உடனடியாக அந்த பாஸ்வேர்டு பதிவு செய்தபின்பு நமது கணக்கு ஒன்று, இதர விவரங்களை தெரிவித்தவுடன் திறக்கப்படும். பின்னர் உங்களது யூசர் நேம் (User Name) பாஸ் வேர்டைக் குறிப்பிட்டு உங்களுக்கான இந்தப் பெட்டகத்தை பயன்படுத்தலாம். ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, மின் வருடல் மூலமான ஆவணங்களாக இணையப் பெட்டகத்தில் இணைக்கப்படும்.

ஆவணங்களின் சேமிப்பு!

நமது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, இந்த இணையப் பெட்டகத்தில் ஃபைல்களாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அவைகள் தனித்தனியே சேமித்து வைக்கப்படும் விதமாக, உங்களால் பதிவேற்றம் செய்விக்கப்படும் ஆவணங்கள், அப்போதே தனித்தனி ஃபைல்களில் உங்கள் ஆதார் எண்ணின் தனித்துவத்தின்படி சேமிக்கப்படும்.

எல்லாம் முடிந்து இந்தப் பெட்டகத்தில் உள்ள உங்கள் சுய விவரப்பக்கத்துக்கு சென்றால், அதில் உங்கள் புகைப்படம், பெயர், முகவரி போன்ற ஆதார் அட்டை விண்ணப்பத்தின் போது நீங்கள் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து விவரங்களும் அந்த இணையதளத்திலிருந்து பெறப்பட்டு இங்கு பகிரப்பட்டிருக்கும்.

அளவு!

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம். கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து இதன் அளவும் உயர்த்தப்படவுள்ளது.



பாதுகாப்பு!

இது அனைத்து வகையிலும் பாதுகாப்பும் கொண்ட ஒரு சிஸ்டம். இதன் அமைப்பு மற்றும் மையமானது ஐஎஸ்ஓ 27001 (ISO 27001) சான்றிதழ் பெறப்பட்டதால், உங்கள் தனித்துவம் முழுவதுமாக பாதுகாக்கப்படும். அனுமதி இல்லாத பிற நபர்களின் பயன்பாடு ‘தானியங்கி நேரப் பாதுகாப்பு’ (Auto Time Log-Out) மூலம் தடை செய்யப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பயனாளர் மட்டுமே இந்தப் பெட்டகத்திலிருந்து பயன்படுத்த முடியும். ஆதார் எண் இணைக்கப்படாதபட்சத்தில் பயனாளர்களின் ஆவணப் பிரிவில் ஆவணங்கள் இணைக்கப்பட்டதே காட்டப்படாது.

ஆவணங்களின் பயன்பாடு!

இணைய கையெழுத்து (e-Sign) எனும் தொழில்நுட்பம் இந்த இணையப் பெட்டகத்தில் முழுமையான அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கம்பெனி பதிவகங்கள் மற்றும் வருமான வரித்துறைகளில்தான் இந்த இணைய கையெழுத்து பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த டிஜி லாக்கரில் இணைய கையெழுத்து தொழில்நுட்பம் இந்தப் பெட்டகத்தில் உள்ள ஃபைல்களையும், ஆவணங்களையும், கையெழுத்து செய்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு அனுப்பவேண்டிய ஆவணங்களைக்கூட இந்த முறையில் அனுப்ப முடியும். மேலும், ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இந்தப் பெட்டகத்தில் இருந்து பதிவேற்றி நேரடியாக அனுப்ப இயலும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்.



கூகுள் போன்ற இதர தளங்களிலிருந்து செய்யப்படும் அவ்வாறான பதிவேற்றங்கள், இதுவரை அதன் மூலங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அரசால் அங்கீகாரம் செய்யப்படு வதில்லை. ஆனால், இந்த தளத்தில் இருந்து செய்யப்  படும் ஆவணப் பதிவேற்றத்துக்கு அரசு அங்கீகாரம் தந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் சுமார் 14 லட்சம் ஆவணங்களை இதில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானா லும் உங்கள் ஆவணங் களை இணையம் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் (Any Time, Any Where, Share your Documents Online) என்ற கோட்பாட்டில் அரசால் துவங்கப் பட்டுள்ள, வரவேற்று பயன்படுத்தவேண்டிய அரசின் பெட்டகம் இது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது ஆவணங்களை தனித்தனியே அரசாங்கத்தின் இந்த இணையப் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாத்து, பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது இந்தப் பெட்டகத்தில் இலவசமாக 10 மெகாபைட் அளவுக்கான ஃபைல்களை பதிவேற்றி பெட்டகப்படுத்தலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்





ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.

''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.

இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.

கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'' என்றார் சேகர்.



கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.

இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!

டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி!



 மதியமோ அல்லது இரவோ சாப்பிட்டு முடிந்தவுடன் வெற்றிலை போட்டு மெல்லும் பழக்கம் நம்மவர்களிடம் பாரம்பரியமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்த வெற்றிலைபோடும் பழக்கம் மெள்ள மெள்ள மறைந்து, அந்த இடத்தைப் பிடித்துவிட்டது டூட்டி ஃபுரூட்டி (Tutti Frutti). சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்சம் இனிப்பாக எதையாவது மென்று முழுங்க நினைப்பவர்கள் அனைவரும் இப்போது இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு அடிமை.
இதை அப்படியே கொஞ்சம் அள்ளி வாயில்போட்டுக் கொள்ளலாம் என்பதுபோக, ஐஸ்கிரீம், பன், பிஸ்கெட், பான் மசாலா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளிலும் பயன்படுத்தப்படும் இந்த டூட்டி ஃபுரூட்டிக்கு (ஜிuttவீ திக்ஷீuttவீ) தற்போது நல்ல வரவேற்பு இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும்கூட இதை ஒரு 'ரெப்ஃப்ரஷனராக’ சாப்பிட்டு மகிழ்கிறார்கள். பாலை அடிப் படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிற பொருட்களில் கூடுதல் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. சமீபகாலமாக இப்பொருளுக்கானத் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
சந்தை வாய்ப்பு!
எல்லாத் தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் இது. டூட்டி ஃபுரூட்டியின் சுவை அனைவராலும் விரும்பப்படுவது. இத்தொழிலில் பெரிய அளவில் இதுவரை பலரும் இறங்கவில்லை என்பது கூடுதல் வாய்ப்பு. இதை தயார் செய்வதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், விரைவில் சந்தையைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தயாரிப்பு முறை!
பெரிய மற்றும் பழுக்காத பப்பாளியை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தோல் சீவவேண்டும். பப்பாளியின் தோலை சீவுவது கையாலோ அல்லது இயந்திரத்தின் உதவியினாலோ செய்யலாம். பிறகு நீளவாக்கில் நறுக்கி அதிலுள்ள விதை மற்றும் நார்களை நீக்க வேண்டும். இதை கொதிக்கும் நீரில் எட்டு முதல் பத்து நிமிடங்கள் வைக்க வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பப்பாளியை 30% சர்க்கரைப் பாகுடன், 3% சிட்ரிக் ஆசிட் கொண்ட கொதிக்கும் கலவையில் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இதன்பிறகு இந்தக் கலவையை 8-10 மணி நேரம் ஆறவிட்டு தேவையான நிறத்தை சேர்த்து உலர வைக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவுகளில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி 60 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் டிரையர் இயந்திரத்தில் பத்து நிமிடங்கள் உலரவிட்டு, மீண்டும் கொஞ்சம் குளிர வைத்தால் சுவையான டூட்டி ஃபுரூட்டி தயார். இதை அழகாக பேக்கிங் செய்தால்போதும், மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழிலுக்கு நிலம் வாங்கவோ, கட்டடம் கட்டவோ தேவையில்லை. குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பிஸினஸைத் தொடங்கலாம். பேக்கிங் செய்வதற்கும் தயாரித்த பொருளை சேகரித்து வைக்கவும் இடம் தேவைப்படும். மற்றபடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இயந்திரம்!
ஓராண்டுக்கு 60 டன் எடை கொண்ட டூட்டி ஃபுரூட்டியை இரண்டு ஷிஃப்ட்களில் வேலை பார்த்தால் தயார் செய்துவிடலாம். இத்தொழிலுக்கான இயந்திரங்கள் பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கும்.
மற்றச் செலவுகள்!
ஃபர்னிச்சர், அளக்கும் இயந்திரங்கள் போன்ற செலவுகளுக்கு 25,000 ரூபாய் வரை செலவாகும்.

தண்ணீர் மற்றும் மின்சாரம்!
10 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். அத்துடன் 1000-1200 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத்தொழிலின் முக்கிய மூலப்பொருளான பப்பாளி தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் தாராளமாகக் கிடைக்கிறது. சர்க்கரை சுலபமாக சந்தையில் கிடைக்கக் கூடியதுதான். சர்க்கரைப் பாகு காய்ச்சும் போது சுமார் 25% வரை கழிவுபோக வாய்ப்பிருக்கிறது. ஆண்டுக்கு 60 டன் டூட்டி ஃபுரூட்டி தயாரிக்க வேண்டுமெனில் 80 டன் பப்பாளி தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான கலர், சிட்ரிக் ஆசிட் போன்றவைகளும் எளிதில் கிடைக்கக் கூடியதுதான்!
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு நல்ல திறமையான வேலையாட்கள் இரண்டு பேர், சாதாரண வேலையாட்கள் நான்கு பேர், விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஏழு பேர் தேவைப்படுவார்கள்.
கொஞ்சம் இடம், கொஞ்சம் மூலதனம் இருந்தால் குறுகியகாலத்தில் சக்சஸ் பண்ண இது சரியான தொழில்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்




இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்'' என்கிறார்கள்.

இங்குள்ள வேளாண் விற்பனை சந்தையில் மட்டும் கடந்த வருடம் 70 லட்சம் மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. பொதுவாக மருந்து தயாரிப்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சந்தைக்கு வரும்  மஞ்சளை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை வாங்கிச்சென்று பதப்படுத்தி, பாலிஷ் செய்துதான் பயன்பாட்டுக்கான மஞ்சளாக மாற்றுகிறார்கள்.

ஈரோட்டிலுள்ள வேளாண் விற்பனை மையத்தில் தினசரி காலை மஞ்சள் விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு 100 கிலோ கொண்ட மூட்டைகள் தர வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப மூட்டைகளை வாங்கிச் சென்று, பதப்படுத்தி சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஈரோடு மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேளாண்மை விற்பனை மையத்தில்தான் மொத்த விற்பனை நடக்கும் என்றாலும், இதற்கு அருகிலேயே மஸ்ஜித் தெரு மற்றும் கந்தசாமி செட்டி தெருக்களில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சகாய விலைக்கு மஞ்சள் கிழங்கு வாங்கிவிட முடியும். இங்கிருந்துதான் பல்வேறு ஊர்களுக்கும் சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக, வெளியூர்களில் கிலோ 90 முதல் 120 வரை விற்கும் மஞ்சளை இங்கு 70 ரூபாய்க்கு வாங்கலாம். தரத்தைப் பொறுத்து விலை வித்தியாசம் இருக்கும். அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து வாங்கும்போது 50 கிலோவாக வாங்கினால் இன்னும் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஐம்பது வீடு, நூறு வீடு என வசிக்கும் ஃப்ளாட்வாசிகள், சிறிய குடியிருப்புவாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஈரோட்டில் மொத்தமாக மஞ்சளை வாங்கினால், கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைவாகக் கிடைக்கும். இனி, ஈரோடு செல்பவர்கள் மறக்காமல்

மஞ்சளை வாங்கி வரலாமே!

பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு!

பேக்கரி அயிட்டங்கள் தயாரிப்பு!


கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.
ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.
சந்தை வாய்ப்பு!

உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.                

தயாரிப்பு முறை!
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி!
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

கட்டடம்!
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்!
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற  இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்!
ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்!
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப்பொருள்!
இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்!
பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.

செயல்பாட்டு மூலதனம்!
முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
ரிஸ்க்!
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்!
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.  பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?

எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்

எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்




''ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சல்மீர்தான் என் சொந்த ஊர். வேலை தேடி சென்னைக்கு வந்த எனது அண்ணன் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக குடும்பக் கஷ்டம் காரணமாக நானும் சென்னைக்கே வந்துவிட்டேன். கல்லூரிப் படிப்பு வரை இங்கேதான் படித்தேன்.


படிப்பு முடிந்ததும் நானும் ஒரு துணிக் கடையில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அப்படி சேல்ஸ்மேனாக வேலை பார்த்து சம்பாதித்தத் தொகையை சிறுகச் சிறுக சேர்த்து நண்பர்கள் உதவியுடன், சென்னை எக்மோரில் சின்ன அளவில் ஒரு ரெடிமேட் கடை திறந்தேன். இந்த கடைதான் என் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளுக்கும் முதல்படி.
கடையில் எல்லா வேலைகளையும் நான் ஒரே ஆள்தான் செய்வேன். கடை பூட்டிய பிறகு யாராவது வந்து நின்றாலும் திரும்ப திறந்து அந்த வியாபாரத்தை முடித்துவிட்டுதான் கடையைப் பூட்டுவேன். விரைவில் அடுத்தக் கட்டமாக மொத்த வியாபாரம் செய்யத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களை சரியாக கவனிப்பது எப்படி என சேல்ஸ்மேன் டிரெயினிங் கோர்ஸ் படித்தேன். அடுத்த கட்டமாக எனது தொழில் அனுபவம் கொடுத்த தைரியத்தில் ரெடிமேட் சட்டைகள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ரெடிமேட் துணி வியாபாரம் பெரிய அளவில் வளராத காலகட்டம் அது. ஆனாலும், தைரியமாக இறங்கி தரமான முறையில் ஆடைகளை தயார் செய்துதரத் தொடங்கினேன். எந்த ஏரியாவில் என்ன சட்டையை விரும்புவார்கள், எந்த வயது பிரிவினர் எந்த மாடலை விரும்புவார்கள் என பல ஊர்களுக்கும் மார்க்கெட் சர்வே நடத்த அலைந்திருக்கிறேன். எல்லாத் துணிகளையும் விற்பனை செய்தாலும் ஆண்களுக்கான சட்டைகள் மட்டும் வேகவேகமாக விற்பனையானதால், தொடர்ந்து அதில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினேன். எங்களுக்கான பிராண்ட் மதிப்பு உருவாகத் தொடங்கியது.
நமது துணிகளை இந்தியா முழுவதும் மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததால் மும்பையில் ஒரு கடையைத் திறந்தேன். அங்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்ததாக டெல்லி, கொல்கத்தா என ஷோரூம்களைத் தொடங்கினோம். இன்று வெளிநாடுகளிலும் எங்களது ஆடைகளை விரும்பி வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தையல்காரரிடம் தைத்த திருப்தி, ஃபினிஷிங், குறைந்த விலை என இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப உடைகளைக் கொடுத்தது எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.''

பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி

 பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி



''சின்ன அளவில் ஒரு பிரின்டிங் பிரஸ் வைத்திருந்தேன். ஏற்கெனவே செய்துதந்த வேலைகளுக்குப் பணம் சரியாக வராமல் தொழில் முடங்கி விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான் நமக்கென்று சொந்தமாக ஒரு புராடக்ட் இருந்தால் ஜெயிக்கலாம் என்ற சிந்தனை எனக்குள் உருவானது.

அட்வகேட் டைரி தயாரிக்கலாம் என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அந்த புத்தாண்டில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக டைரிகளை வாங்கி அதில் அந்த நண்பர்களின் பெயரை அச்சடித்துக் கொடுத்தேன். டைரியில் தங்களது பெயர்களைப் பார்த்த நண்பர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதேபோல எங்களுக்கும் செய்து கொடுங்கள் என்று பலரும் கேட்டனர். இதனால் நானும் உற்சாகமாகி, இந்த தொழிலில் முழுமையாக இறங்கினேன்.

பிறகு சொந்தமாகவே டைரி தயாரிக்கத் திட்டமிட்டேன். அப்போது சந்தையில் கிடைத்த டைரிகளை வகைக்கு ஒன்றாக வாங்கி, வந்து டிசைன் பார்த்து, அவற்றிலிருந்து சிலவற்றை மேம்படுத்தி எனது பிரின்டிங் பிரஸில் புதுமையாகத் தயாரித்தேன். அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு, மூன்று மாடல்களில் டைரியை தயாரித்துத் தரும் அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி, நானே ஆர்டர் பிடித்து வருவேன். விடிய விடிய ஆட்களோடு உடனிருந்து பிரின்டிங் வேலைகளைப் பார்ப்பேன்.

தரமான பேப்பர், குறைந்த விலை, புதுமையான மாடல் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. பிரின்டிங், பைண்டிங் என ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாறமாற அதை கற்றுக்கொள்வதற்கு சளைத்ததேயில்லை. பிரின்டிங் தொடர்பான எந்த கண்காட்சி என்றாலும் உடனே ஆஜராகிவிடுவேன். இதற்காக வெளிநாடுகளுக்குகூட போனேன். எனது ஈகிள் டைரி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பிராண்டாக வளர்வதற்கு எனது கடுமையான உழைப்பும், நம்பிக்கையுமே காரணம்.

ஒரே ஒரு மெஷினோடு வாழ்க்கையைத் தொடங்கிய நான், இன்று நவீன எந்திரங்களைக் கொண்டு மணிக்கு மூவாயிரம் டைரிகள் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்; இன்னும் வளர்வேன்!''

என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை

திருப்புமுனை! - என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை



''வீட்டில் இருந்த கண்டிப்பும் ஒழுங்கும் சின்ன வயதிலிருந்தே என்னை பக்குவப்படுத்தியது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. விவசாயம் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க ஐ.ஐ.எம்.-ல் சேர்ந்தேன். அங்கு நம்மை பற்றி சுயமதிப்பீடு செய்யும் சில பாடங்கள் இருந்தது. அந்த பாடங்களைப் படித்தபோது நான் யார், அடுத்து என்ன செய்யப் போகிறேன்? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. நம்மால் நான்கு பேர் பயனடையக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.


அப்போது சிறப்பாகச் செயல்பட்டுவந்த ஒரு தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அங்கு தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதுதான் எனது பணி. அந்த நிறுவனத்தின் தமிழக திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் நான் செயல்பட்டேன். கிராமம் கிராமமாகச் சென்றதினால் பல்வேறு பகுதி மக்களுடைய அனுபவம், வாழ்க்கைமுறை, அவர்களுடைய தேவைகளை அறிந்துகொள்ள முடிந்தது.
இந்த அனுபவத்தின் உந்துதலால்தான் என்னைப் போல தன்னார்வ வாழ்க்கையை விரும்பிய சிலரோடு சேர்ந்து மதுரையில் தானம் அறக்கட்டளையைத் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை மூலம் களஞ்சியம் என்ற மகளிர் சுயஉதவி குழுவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினோம். களஞ்சியம் அமைப்பு இப்போது பன்னிரண்டு மாநிலங்களில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு குழுக்களைக்கொண்டு இயங்கி வருகிறது.
அடுத்ததாக கிராமப்புற நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் வயலகம் என்கிற அமைப்பைச் செயல்படுத்தத் தொடங்கினோம். முறையான நிர்வாக அமைப்பு, மேலாண்மை வழிகாட்டலோடு இணைந்த மேம்பாட்டு திட்டங்கள்தான் எங்களது நோக்கமாக இருந்தது. எங்களது அடுத்தகட்ட முயற்சியாக சுகம் என்கிற பெயரில் மக்கள் மருத்துவமனையை மதுரையில் செயல்படுத்தி வருகிறோம்.
தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நமக்கு நாமே உதவிக்கொள்வோம் என்கிற எங்களது முயற்சி உலகம் முழுக்கப் போய் சேரவேண்டும் என்பதே எனது ஆசை.''

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.


'நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்பா ஆரல்வாய்மொழியில் நூலகராகப் பணியாற்றினார். எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது படிக்க வேண்டும் என நினைத்து, 'பார்மஸி அண்ட் பயோமெடிக்கல்’ என்ற படிப்பை டெல்லிக்குச் சென்று படித்தேன். அதற்கான பயிற்சிக்காக சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போதுதான் மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு போன்றவற்றை நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.


நவீன மருத்துவ வசதிகளுக்காக மிகுதியான மக்கள் சென்னைக்கு வருவதை உணர்ந்து கொண்டேன். எனவே, இதையே தொழிலாகவும், சேவையாகவும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான அனுபவத்தைப் பெற மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இத்தொழிலைக் குறித்த விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டேன். அதன்பிறகே தனியாக நிறுவனத்தைத் தொடங்கினேன்.
எனது இலக்கு மாநகரங்களைத் தாண்டி இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன். விற்பனைக்குப் பிறகான சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் தந்ததைவிட துரிதமாகவும், தரமாகவும் தந்தேன். அடுத்த சில ஆண்டுகளில் நான் ஒப்பந்தம் செய்துவைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால் ஒரு திடீர் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், அதையே உந்துசக்தியாகக் கொண்டு சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். படிப்படியான வளர்ச்சியால் இப்போது மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம்; வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.
நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு நமது கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. விரைவில் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பேன்!''

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.



''குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலிருந்தே பட்டறை, மில் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியான பணி பயணத்தில் ஒரு அத்தியாயம்தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழிலே நிலைத்து நின்றுவிட்டது. தலைச்சுமையாக, தள்ளுவண்டியில், தரைக்கடையாக மிகப் பெரிய உழைப்பைச் செலுத்திதான் வளர்ந்தேன்.அதிக ரிஸ்க் கொண்டது பழ வியாபாரம். இந்த தொழிலில் விற்பனையில்லை என்றால் பொருளும் மிஞ்சாது, போட்ட முதலீடும் மிஞ்சாது. பழ வியாபாரத்தில் உள்ள ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்;  மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என்று யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவதுகூட ஒரு வகையில் ரிஸ்க்தான். விலை அதிகமாக இருக்கும் என்று கடைக்குள் நுழைய மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என்று நான் தரத் தொடங்கினேன். கோவையில் தொடங்கிய கடை வியாபாரம் நல்லபடியாக இருந்தது. அடுத்து, திருப்பூரில் இதே பாணியில் ஒரு கிளை தொடங்கினேன். அங்கும் மக்களின் ஆதரவு நன்றாக இருக்கவே, அடுத்ததாக சென்னையில் ஒரு கிளை தொடங்க திட்டமிட்டேன்.

சென்னையில் தொடங்கும் முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன். பழம் காய்கறி வாங்குவதுகூட ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என அடுத்தடுத்து தொடங்கிய எல்லா கிளைகளிலும் குளிர்சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என பழ வியாபாரத்தை ஹைடெக்காக மாற்றினேன்.

இப்போது தமிழ்நாட்டில் நாற்பது இடங்களில் கிளைகள் உள்ளது. அடுத்ததாக, கேரளாவில் தொடங்க இருக்கிறோம். 2006-ல் எனது மகன் செந்தில் இந்த தொழிலுக்கு வந்தபிறகு, வெளிநாடுகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இப்போது நாளன்றுக்கு 200 டன்கள் விற்பனையாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக்கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பது என் அனுபவம்.'' 

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.


1983-ல் இந்த வேலைகளை செய்ய நான் பொறுப்பெடுத்துக்கொண்ட பிறகு, குடும்பத் தொழிலாக இருந்ததை விரிவுபடுத்தி ஒரு நிறுவனமாக மாற்றினேன். மருந்துக் கடைகளில் மட்டுமல்லாமல் மளிகைக் கடைகளிலும் விற்பனைக்குத் தந்தோம். மக்களிடம் எளிதில்கொண்டு சேர்க்க, சாம்பிள் சோப் செய்தோம். இது நல்ல விளம்பரமாக அமைந்தது. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும், ஓட்டல்களில் தங்கும் பயணிகளும் ஒருமுறை பயன்படுத்திப் பார்த்துவிட்டு, பிறகு எங்கள் சோப்பை தொடர்ந்து வாங்கத் தொடங்கினார்கள்.

விற்பனை அதிகரிக்கத் திட்டமிட்டு, தமிழர்கள் வசிக்கிற இடங்களில் எல்லாம் மார்க்கெட்டிங் செய்தோம். குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தமிழர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கும் சோப் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம். தற்போது 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக, தைவான் நாட்டில் எங்கள் தயாரிப்புதான் முன்னணி பிராண்ட்.

மருத்துவ குணம் பொருந்திய சோப் விற்பனையில் தனி இடத்தைப் பிடித்ததும், நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமச் சந்தையை உருவாக்கியதும் எங்கள் சாதனையாகவே நினைக்கிறோம். இன்று வெளிநாட்டு நிறுவனங்களின் பல பிராண்டுகள் சந்தையில் போட்டி போட்டாலும், மக்கள் எங்கள் சோப் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகம். உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் வெற்றி நிச்சயம். அதுதான் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த தொழிலை நூறு கோடிக்கும் அதிகமாக டேர்னோவர் செய்யும் நிறுவனமாக மாற்றியிருக்கிறது!'' 

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.


நான் அதிகம் படிக்கவில்லை; ஆனாலும் நான் ஜெயித்தேன். காரணம், என் விடாப்பிடியான உழைப்பு.

ஆரம்பத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தினசரி ஐந்து ரூபாய் கூலிக்கு வேலையில் சேர்ந்தேன். வெளிநாட்டுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதே என் வேலை. அந்த வேலையை செய்துகொண்டிருந்தபோதுதான் எனக்கான திருப்புமுனை வந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு தினசரி பயணிகள் கப்பல் சென்றுவரும். அந்த கப்பலில் செல்கிற வியாபாரிகளுக்குத் தேவையான விசாவை நான் வேலை பார்த்த நிறுவனம் வாங்கித் தந்தது. இந்த விசாவை தர ஒருமுறை நான் ராமேஸ்வரம் போனேன்.

 நான் போன ரயில் ராமேஸ்வரத்திற்கு அருகில் பாம்பன் தூக்கு பாலம் ரிப்பேர் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது.  பஸ் பாலம் அப்போது இல்லை. காலை ஒன்பது மணிக்குள் பயணிகளுக்கான  பாஸ்போர்ட், விசாவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்.
நான் எப்படியாவது இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே ரயில் தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்துவிட்டால் எப்படியாவது துறைமுகத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பாலத்தைக் கடப்பது சாதாரணமாக இல்லை. கடல் சீற்றமாக இருந்தது. இரும்பு பாலத்தின் வழி நெடுக கிரீஸ் தடவியிருந்ததால் கால் வழுக்கியது. திரும்பிப் போகலாம் என்றால் கஷ்டப்பட்டு பாதித் தூரத்தைக் கடந்திருந்தேன். திரும்பிச் செல்கிற தூரத்தை முன்னேறிச் செல்வோம் என்கிற துணிவோடு, சூட்கேஸை முதுகோடு கட்டிக்கொண்டு பாலத்தில் தவழ்ந்தபடி கடந்து போனேன்.

கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.